Published : 04 Aug 2023 11:51 PM
Last Updated : 04 Aug 2023 11:51 PM

ஆடி அமாவாசை திருவிழா: சதுரகிரி செல்ல ஆக.12 முதல் 17 வரை அனுமதி

வத்திராயிருப்பு: ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆகஸ்ட் 12 முதல் 17-ம் தேதி வரை 6 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மலைக் கோயிலில் இரவில் தங்குவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

வட இந்தியாவில் புகழ்பெற்ற அமர்நாத், கேதர்நாத் கோயில்களை போல் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள சதுரகிரி, வெள்ளையங்கிரி கோயில்கள் பிரசித்தி பெற்றதாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. மதுரை மாவட்டம் சாப்டூர் வனப்பகுதியில் உள்ள கோயிலுக்கு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள தாணிப்பாறை வழியாக செல்ல வேண்டும். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இரு மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணைந்து தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும்.

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு சதுரகிரி மலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு பின் கோயிலில் இரவில் தங்குவதற்கு தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்பின் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி என மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெற உள்ளது. ஆடி அமாவாசை திருவிழாவுக்காக ஆகஸ்ட் 13 முதல் 17 வரை 5 நாட்கள் அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. கடந்த 2-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மதுரை மற்றும் விருதுநகர் ஆட்சியர்கள் தலைமையில் வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுகாதாரத் துறை, உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு கூடுதல் நாட்கள் அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவிற்கு ஆகஸ்ட் 12 முதல் 17-ம் தேதி வரை 6 நாட்கள் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். கோயிலில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுவதால், தனி நபர்களோ அமைப்பினரோ வனப்பகுதியில் அன்னதானம் வழங்கக்கூடாது. இரவில் கோயிலில் தங்குவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையோ தடை செய்யப்பட்ட பொருட்களையோ வனப்பகுதிக்குள் பக்தர்கள் எடுத்துச் செல்லக்கூடாது' எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x