Published : 20 Nov 2017 03:02 PM
Last Updated : 20 Nov 2017 03:02 PM
நெல்லையப்பர் கோயிலில் காலசம்ஹார மூர்த்தியின் திருவுருவம் அமைந்து உள்ளது. ரொம்பவே சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவர் இவர். மாதந்தோறும் வருகிற பூரம், உத்திரம், அஸ்தம் ஆகிய நட்சத்திர நாட்களில், இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அப்போது இங்கு வந்து காலசம்ஹார மூர்த்தியை வணங்கினால், சகல சம்பத்துகளையும் தந்தருள்வார் சம்ஹார மூர்த்தி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
நெல்லைச் சீமையை ஆட்சி செய்த ஸ்வேதகேது எனும் மன்னன், தினமும் நெல்லையப்பரை வணங்கி வந்தான். மிகுந்த சிவபக்தியும் மக்கள் மீது பற்றும் எனக் கொண்டிருந்தான். ஆனால் என்ன... தனக்கும் தன் தேசத்துக்கும் ஒரு வாரிசு இல்லைய்யே என வருந்தினான்.
மன்னனுக்கு வாரிசு இல்லை. வயோதிகத்தையும் அடைந்தான். ஆயுள் முடியும் வேளை நெருங்கியது. எமதருமன் பாசக்கயிறை வீசினான். அது சிவலிங்கத்தின் மீது விழுந்தது. காலனை தன் காலால் உதைத்தார் சிவபெருமான். மன்னனுக்கு திருக்காட்சி தந்து, அவனை ஆட்கொண்டு, முக்தி தந்தருளினார்.
நெல்லையப்பர் கோயிலில், ஸ்வாமி சந்நிதியின் முதல் சுற்றில், ஸ்ரீகாலசம்ஹார மூர்த்தி புடைப்புச் சிற்பமாக இன்றைக்கும் காட்சி தருகிறார்.
இந்த திருவிளையாடல், வருடந்தோறும் வைகாசி மாதம் பூரம், உத்திரம், அஸ்தம் ஆகிய நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது பஞ்சமூர்த்திகளை ஒரே ரதத்தில் வைத்து, திருவீதி உலா வைபவமும் நடக்கிறது. இதில் கலந்துகொண்டால், ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.
நெல்லையப்பர் கோயிலுக்கு வந்து காலசம்ஹார மூர்த்தியையும் காந்திமதி சமேத நெல்லையப்பரையும் பிரார்த்தியுங்கள். ஆயுள் பலத்துடன் குறைவின்றி வாழ்வீர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT