Published : 04 Nov 2017 02:36 PM
Last Updated : 04 Nov 2017 02:36 PM
சூர்யோதயத்தின் அழகை ரசிக்க வேண்டும் என்றால், நாம் கன்யாகுமரிக்குச் சென்றே ஆகவேண்டும். அப்படியொரு சுகானுபவம் அது. இங்கே, அதிகாலையில் இதற்காகக் கூடும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இந்தச் சிறப்புகளை எல்லாம் தனக்குள் அடக்கியபடி மென் புன்னகையுடன் கடற்கரையோரம் கொலுவிருக்கிறாள் ஸ்ரீபகவதி அம்மன் .இங்கு உள்ள பகவதி அம்மன் கன்னியாக இருந்தாலும், பக்தர்கள் அனைவருக்கும் தாயாக இருந்து , நம் சகல துன்பங்களையும் துயரங்களையும் களைந்து, அருளாட்சி செய்கிறாள்.
பாணாசுரன் மோசமானவன். அரக்கன். ஆக, அவன் அப்படித்தான் இருப்பான். இவன் அட்டூழியம் தாங்கமுடியவில்லை. ‘கன்னிப் பெண் ஒருத்தியைத் தவிர, வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது’ என்ற வரத்தை பிரம்ம தேவரிடம் இருந்து பெற்றவன் இந்த அசகாய சூரன். ஒரு கன்னிப் பெண் தன்னை என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தினால், அவன் பெற்ற அந்த வரத்தை வைத்துக் கொண்டு தேவர்களையும் முனிவர்களையும் இம்சித்து வந்தான். கொடுமைப்படுத்தினான். துயரத்தில் ஆழ்த்தினான்.
அவர்கள், தங்கள் துன்பங்களைப் போக்கும்படி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டு கதறினார்கள். அவரோ, ‘கன்னிப்பெண்ணால்தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுள்ளான் பாணாசுரன். ஆகவே மகாசக்தியான உமையவள்தான் உங்களைக் காத்தருளவேண்டும். சிவனாரையும் மகேஸ்வரியையும் சரணடையுங்கள்’’ என அருளினார். உடனே தேவர்பெருமக்கள், அம்மையப்பனிடம் முறையிட்டனர்.
‘தங்களின் குறையை அறிவேன். உங்கள் துயரங்கள் விலகும் வேளை வந்து விட்டது. எனது தேவியானவள், தென் பகுதியான குமரியில் கன்னியாக வடிவெடுத்து, பாணாசுரனை வதம் செய்து உங்களுக்கு வாழ்வளிப்பாள்’ என்று ஆசி கூறினார் சிவனார். அவ்வாறு கன்னியாக இங்கே அவதரித்தாள் மகாசக்தி!
ஈசன் மேல் பற்று கொண்டு அவரை நோக்கி கடும் தவம் இருந்து வந்தார் தேவி. அப்போது தேவியின் அழகில் மயங்கிய சுசீந்திரம் தாணுமாலயன், தேவியை மணம் புரியவேண்டி தேவர்களை அழைத்துப் பேசினார். ஆனால் தேவர்கள் கலக்கம் கொண்டனர்.
‘ஈசன், தேவியை மணம் புரிந்து விட்டால், அவர் எப்படி கன்னியாக இருப்பார். பாணாசுரனை அழிக்க ஒரு கன்னியால் அல்லவா முடியும்?’ என்று எண்ணிய தேவர்கள் அனைவரும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். அவர்களின் கலக்கத்தை நாரதர் போக்கினார். ‘எல்லாம் நல்லபடியாக நடைபெறும். பாணாசுரன் அழிவு என்ற உங்களின் நோக்கம் நிறைவேறும். அதற்கான முதற்படிதான் இது’ என்று தேவர்களுக்கு நாரதர் ஆறுதல் கூறினார்.
தவத்தில் இருக்கும் தேவியை கோபமூட்டுவது என்பது இயலாத காரியம். எனவேதான் சிவபெருமான் தேவியை மணம் முடிக்க பேசி, கவனத்தை திருப்பி, ஏதாவது காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டால் தேவியின் கோபம் உச்சத்தை எட்டும். அப்போது அங்கு வரும் பாணாசுரன் நிச்சயமாக அழிந்துபோவான். அதற்காகத் தான் சிவனார் திருமணத் திருவிளையாடலை கையில் எடுத்திருந்தார்.
அந்தத் திருவிளையாடல் விதிப்படி, திருமணப் பேச்சின் போது சிவபெருமானிடம், தேவர்கள் சார்பில் நாரதர் ஒரு கோரிக்கை வைத்தார். ‘சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே மாப்பிள்ளை திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து விட வேண்டும்‘ என்பதுதான் அது. தேவியிடமும், இந்தக் கோரிக்கை சொல்லப்பட்டது. சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்பு மாப்பிள்ளை வரவில்லை என்றால் திருமணம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருமண நாள் வந்தது. சுசீந்திரத்தில் இருந்து அனைத்து சீதனங்களுடன் குமரி நோக்கி புறப்பட்டுச் சென்றார் ஈசன். அப்போது குறித்த நேரத்திற்கு முன்பாகவே நாரதர் சேவலாக மாறி உரக்கக் கூவினார். சேவல் கூவிவிட்டதால் சூரிய உதயத்திற்கு முன்பாக எப்படியும் குமரியை அடையவழியில்லை என்பது ஈசனுக்கு புலப்பட்டது. எனவே அவர் மீண்டும் சுசீந்திரத்துக்கே திரும்பிச் சென்றார். இதுபற்றி அறிந்ததும் ஈசனுக்காக காத்திருந்த தேவியின் காதல் கலந்த கண்கள், கோபத்தில் சுட்டெரிக்கும் சூரியனைப் போல் தகதகத்தன.
திருமணத்திற்காக சமைத்த அனைத்து சாதங்களையும் கடலிலும், கரையிலும் வீசி, மண்ணாய் போகச் சபித்தார் தேவி. பின்னர் கோபம் அடங்காமல், தவத்தை மேற்கொள்ள எண்ணினார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பாணாசுரன், தேவியின் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நெருங்கினான். அவள் பார்த்த பார்வை நெருங்கவிடாமல் அனலில் தகிக்கச் செய்தது. ஓங்கி உயர்ந்து, வீராவேசமாய் சிரித்த தேவி, பாணாசுரனை தன் காலால் மிதித்து அழித்தார்.
கன்னியாகுமரியில் கன்னியாய் அமர்ந்திருக்கும் இந்த தேவியின் திருநாமம் ஸ்ரீபகவதி அம்மன்! தங்களின் துக்கமெல்லாம் போக வேண்டும், கவலையெல்லாம் நீங்க வேண்டும் என்று வருந்துவோர், பகவதி அம்மனுக்குப் பூச்சொரிதல் நடத்தினால், வேண்டிய வரங்கள் விரைவில் நடைபெறும் என்பது உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT