Published : 18 Nov 2017 03:22 PM
Last Updated : 18 Nov 2017 03:22 PM
சனிக்கிழமைகளில், அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், நம் காரியங்களில் வெற்றியைத் தந்தருள்வார் அனுமன் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
அனுமன் வழிபாடு எப்போதுமே காரிய ஸித்திக்குத் துணை நிற்கவல்லது என்று போற்றுகிறார்கள் பெரியோர். எந்தவொரு குழப்பமோ பயமோ இருந்தாலும் ஆஞ்சநேய பகவானைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆத்மார்த்தமாக அவர் மேல் பக்தி செலுத்தினால், அந்தப் பக்தியால் நம்மிடம் உள்ள பயத்தைப் போக்கி அருள்வார் அனுமன் என்பது ஐதீகம்.
அதனால்தான் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் அனுமனை வழிபடுகிறார்கள் பக்தர்கள். பல ஊர்களில், அனுமன் தனிக்கோயிலாகவும் எழுந்தருளிக் காட்சி தருகிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில், திருச்சி கல்லுக்குழியிலும் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகிலும் உள்ள ஆலயங்கள், நெல்லை சந்திப்பு அருகில் உள்ள கெட்வெல் ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல கோயில்கள், பல ஊர்களில் அமைந்து உள்ளன. சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் வெகு பிரசித்தியானவர். ஓங்கி உயர்ந்து நிற்கும் நாமக்கல் அனுமனை, கோயிலில் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அற்புதமாகத் தரிசிக்கலாம்.
அனுமனுக்கு, சனிக்கிழமைகளில் வெண்ணெய் சார்த்தி வழிபட்டால், வழக்கு முதலான பிரச்சினைகளில் நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். துளசி மாலை சார்த்தி, வாரந்தோறும் வணங்கி வழிபட்டால், குன்றாத செல்வமும் புகழும் சமூகத்தில் கவுரவமும் கிடைக்கப் பெறலாம்.
வெற்றிலை மாலை சார்த்தி ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால், தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். நல்ல உத்தியோகமும் உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் தொல்லை நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
'நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதி. இந்த நாள் என்றில்லாமல், எந்த நாள் வேண்டுமானாலும் இங்கு வந்து அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள். பிறகு வேண்டுதல் நிறைவேறியதும் அனுமனுக்கு வடைமாலை சார்த்தியும் புளியோதரையோ தயிர்சாதமோ நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கியும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்’’ என்கிறார் இந்தக் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT