Last Updated : 09 Nov, 2017 10:16 AM

 

Published : 09 Nov 2017 10:16 AM
Last Updated : 09 Nov 2017 10:16 AM

துளி சமுத்திரம் சூபி 07: உன்னைத் தவிர யாருமில்லை என்னையும் சேர்த்து

‘பி

ரபஞ்சத் தோட்டத்தில் என்னைப் போன்ற ஒரு மலர் மலர்வதற்கு இருநூறு வருடங்கள் ஆனது’ என்று சொன்னவர் பயாசித். மிகப் பெரிய சூபி ஞானிகளில் ஒருவர். பயாசித் எப்போதும் மெய்ஞ்ஞானக் காதலில் கரைந்து அதன் உண்மையில் ஐக்கியமாகிப் பரவச நிலையிலேயே இருப்பார். “பயாசித்தால் இந்த உலகமே பரவசம் அடைந்தது, மேலும், தெய்வீகத்தன்மையைத் தவிர வேறு எதையும் பயாசித் பார்க்கவில்லை” என்று ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அபு சையத் எனும் சூபி ஞானி சொன்னார்.

இவர் 804-ம் வருடம் வடகிழக்கு பாரசீகத்தின் பஸ்தாமில் பிறந்தார். ஸொராஷ்ட்ரிய மதத்தைச் சேர்ந்த இவருடைய தாத்தா பஸ்தாமில் பெரிய பதவியை வகித்தவர். இருப்பினும், கைம்பெண்ணான பயாசித்தின் அன்னை வறுமையில்தான் வாடினார். தான் மிகவும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு பயாசித்தை குரான் படிக்க அனுப்பிவைத்தார்.

ஒரு நாள் குரானில் “உன் வாழ்க்கையை எனக்கும் உன் பெற்றோருக்கும் அர்ப்பணம் செய்” என்ற வாக்கியத்தைப் படித்தார். அதைப் படித்த உடன் வகுப்பில் இருந்து வீட்டுக்கு விரைந்தார். பகலில் வீடு திரும்பிய பயாசித்தைப் பார்த்துப் பதறிப்போன அன்னை, “என்னாச்சு, ஏன் படிக்காமல் வந்துவிட்டாய்” என்று பதைபதைப்புடன் கேட்டார். பயாசித், தான் குரானில் படித்த வாக்கியத்தை அன்னையிடம் சொன்னார். தன்னால் எப்படி ஒரே நேரத்தில் இருவருக்குத் தன் வாழ்வை அர்ப்பணிக்க முடியும் என்று கேட்டார்? கண்கலங்கிய அவர் அன்னை பயாசித்தைத் தழுவியபடி, “என்னைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நான் உன்னைக் கடவுளுக்குக் கொடுத்துவிட்டேன். நீ உன் வாழ்வைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்” என்றார். அதன்பின் மன நிம்மதி அடைந்து மீண்டும் வகுப்புக்குச் சென்றார்.

பாரபட்சமற்ற நேசம்

ஒருமுறை வகுப்பில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு வன்முறைக் கும்பல் அடாவடிச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அமைதியாக அவர்களைக் கடந்த பயாசித்தை நிறுத்தி அசிங்கமான சொற்களால் வம்புக்கு இழுத்தது. இவர் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றார். இதனால் கோபமடைந்த அந்தக் கும்பலின் தலைவன் தன் கையில் இருந்த இசைக் கருவியைக் கொண்டு பயாசித்தின் தலையில் ஓங்கி அடித்தான். இசைக் கருவி உடைந்து இவர் தலையிலிருந்து ரத்தம் வழிந்தது. இவர் ரத்தத்தைத் துடைத்து ஒன்றும் செல்லாமல் சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்து வீடு வந்து சேர்ந்தார். மறுநாள் தன் வேலையாள் மூலம் அந்தக் கும்பலின் தலைவனுக்கு ஒரு கடிதமும் கொஞ்சம் காசும் இனிப்பு மிட்டாயும் கொடுத்தனுப்பினார். அந்தக் கடித்ததில், “என் தலையில் மோதியதால் உடைந்துபோன இசைக் கருவிக்குப் பதில் இந்தக் காசைக் கொண்டு வேறு வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் நேற்று உங்கள் வாயில் இருந்து சொற்கள் மிகவும் கசப்பாக வெளிவந்தன. எனவே, இந்த இனிப்பு மிட்டாயை நீங்கள் அனைவரும் சாப்பிடுங்கள்” என்று எழுதி இருந்தது. அதன் பிறகு ஒருமுறைகூட அந்தக் கும்பலை அவர் அப்பகுதியில் பார்க்கவேயில்லை.

பயாசித் உலகம் முழுவதும் பயணம் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட ஞானிகளுக்கு ஊழியம் செய்து அவர்களிடமிருந்து ஞானத்தைக் கற்றார். ‘நினைத்த நேரத்தில் வேகமாக நுழைவதற்குக் கடவுளின் வீடு ஒன்றும் மன்னனின் மாளிகை அல்ல’ என்று சொல்லி பன்னிரண்டு வருடங்கள் பொறுமையாகப் பிரயாணம் செய்து மெக்காவை அடைந்தார். அவர் செல்லும் வழியில் இருந்த ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருமுறை தொழுகை நடத்தினார். மேலும், அவரது ஒவ்வொரு நிறுத்தத்திலும் கடவுளுக்கு ஒரு வீட்டை அமைத்தார். இறுதியாக மெக்காவை அடைந்து அங்கே தீவிர வழிபாட்டில் ஈடுபட்டார்.

வாழ்வுக்கான அர்த்தம்

ஒருவர் பயாசித்திடம் மனிதனுக்கு வழங்கப்பட்டதில் மிகச் சிறந்தது எது என்று கேட்டார்? கடவுள் கொடுத்த நல்ல குணம் என்று அவர் பதிலளித்தார். வேறு என்ன அந்த மனிதர் மீண்டும் கேட்டார்? நல்ல உடல் நலம் என்று பயாசித் சொன்னார். மேலும் அவர், நல்ல குணமும் உடல் நலமும் இல்லை என்றாலும்கூட மெய்ஞ்ஞானத்தைக் கேட்கும் காதும் அதை உணரும் இதயமும் அதைக் காணும் கண்களும் இருந்தால் அந்த மனிதர் பாக்கியசாலிதான். இவை எதுவும் இல்லை என்றால் அந்த மனிதர் உயிருடன் வாழ்வதில் ஒரு அர்த்தமும் இல்லை. அவர் இறந்துவிடுவது மேல் என்றார்.

தன் வாழ்நாளில் எதைத் தேடி தன்னை வருத்தி, எல்லாம் துறந்து அலைந்து திரிந்தாரோ, அதைத் தன் அன்னைக்குச் சேவை செய்வதன் மூலம் கண்டுணர்ந்ததாக அவர் கூறுகிறார். ஒரு நாள் இரவில் அவரது அன்னை அவரை எழுப்பித் தண்ணீர் கேட்டுள்ளார். அவர் எழுந்து வீடு முழுவதும் தேடியிருக்கிறார். வீட்டில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. அது குளிர் நிரம்பிய ஓரிரவு. வெளியில் பனி கொட்டிக்கொண்டிருந்தது. அவர் அதைப் பொருட்படுத்தாமல் வெளியில் சென்று தண்ணீர் ஊற்றைத் தேடிக் கண்டுபிடித்து தண்ணீர் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், அவர் வருவதற்குள் அவர் அன்னை தூங்கிவிட்டார். எனவே, அவர் விழிக்கும்வரை படுக்கை அருகே தண்ணீருடன் அமர்ந்து இருந்தார் பயாசித். அதிகாலையில் கண் விழித்த அன்னை நடந்ததை அவரிடம் கேட்டறிந்தார். பின் அவர் கையில் இருந்த தண்ணீரை வாங்கிக் குடித்து அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். தான் வாழ்நாள் முழுவதும் தேடியது அந்த நொடியில் தனக்குக் கிடைத்தது என்று சொல்லி உள்ளார் பயாசித்.

அகங்காரத்தை உருக்கி

தன் வாழ்வின் பன்னிரண்டு வருடங்களை ஒரு இரும்புப் பட்டறையின் கொல்லன் போன்று செலவிட்டதாக பயாசித் சொன்னார். அப்போது ஒழுக்கம் எனும் உலையில் விடாமுயற்சி எனும் தீயில் தன்னுடைய அகங்காரத்தை உருக்கி, தன்னல மறுப்பு எனும் அச்சில் அதை வார்த்து, ஏக்கம் எனும் சுத்தியலைக் கொண்டு அடித்துத் தன் அகங்காரத்தைத் தன்னைக் காட்டும் கண்ணாடியாக மாற்றியதாகக் கூறினார். அதன்பின் ஐந்து வருடங்கள் தானே தனது கண்ணாடியாக இருந்ததாகக் கூறினார். ஆரம்ப கால சூபி ஞானிகளைப் போன்று இவரும் தன்னைப் பற்றி எதுவும் எழுதி வைக்கவில்லை. அவருக்குப் பின் வந்த சூபி ஞானியான அத்தார்தான் இவரைப் பற்றி எழுதியுள்ளார்.

மெய்ஞ்ஞானத்தை உணரும் ஒவ்வொரு தருணத்திலும் தன் இடுப்பில் சுனார் எனும் சூபிகள் அணியும் பட்டையைக் கட்டிக்கொள்வார். அவரிடம் எழுபதுக்கு மேற்பட்ட சுனார்கள் இருந்தன. மரணத்தை நெருங்கும் வேளையில், கடவுளிடம் ‘எனது வறுமை என்னை உன்னிடம் அழைத்து வந்தது. உன் ஆசீர்வாதம் என்னை அதனில் இருந்து காத்தது’ என்று சொல்லி தனது இடுப்பில் இருந்த சுனார்களை எல்லாம் கழற்றி எறிந்தார்.

மேலும், “என் வாழ்நாள் முழுவதும் நான் விடாமல் செய்த பிரார்த்தனைகளையும், இரவு பகல் பாராமல் கடைப்பிடித்த நோன்புகளையும் உனக்காக என் நலம் துறந்து நான் பட்ட கஷ்டங்களையும் உனக்கு இப்பொழுது நான் அளிக்கப் போவதில்லை. ஏனென்றால், என்னை எதுவும் உன்னிடம் இருந்து பிரிக்காது என்று உனக்குத் தெரியும். என்னிடம் இப்போது எதுவும் இல்லை என்று என் வெட்கத்தை விட்டு நான் இப்போது ஒத்துக்கொள்கிறேன். என் வாழ்நாளில் எனது செயல்கள் என்று எவையும் இல்லை. அவை எல்லாம் உனது செயல்கள்தான். உன்னைத் தவிர இங்கு யாருமில்லை என்னையும் சேர்த்து” என்று கடவுளிடம் சொன்ன அந்தக் கணத்தில் தனது எழுபதாம் வயதில் 874-ம் வருடம் இந்த உலகிலிருந்து விடைபெற்றார் பயாசித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x