Last Updated : 29 Nov, 2017 03:48 PM

 

Published : 29 Nov 2017 03:48 PM
Last Updated : 29 Nov 2017 03:48 PM

திட்டைக்கு வாருங்கள் ... குரு பலம் பெறுங்கள்!

தென்குடித் திட்டை திருத்தலம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. திட்டை எனும் சொல் மருவியே திட்டு என்றானது. அதாவது திட்டை என்றால் மேடு என்று அர்த்தம். பக்தர்களாகிய நம்மை, மேட்டுக்குக் கொண்டு வருவேன் என்பதை, இப்படியொரு தலத்தில் அமர்ந்து கொண்டு, சூசகமாக, சூட்சுமமாகச் சொல்கிறார் சிவபெருமான்.

அவர் மட்டுமா? நமக்கெல்லாம் ராஜ யோகம் முதலான சகல யோகங்களையும் தந்து அருள்வதற்காகக் காத்திருக்கிறார், குரு பகவான்!

ஒரு கோயிலில், கோபுர வாசல் வழியே உள்ளே வந்து, பலிபீடம், கொடிமரம், நந்தியெல்லாம் கடந்து, மகா மண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் பார்த்துக் கொண்டே, அங்கே இருக்கிற விநாயகரையும் துவார பாலகர்களையும் தரிசித்தபடியே, கருவறைக்கு அருகில் வருவோம்.

அங்கே கருவறையில் இருக்கிற தெய்வமே மூலக் கடவுள். மூலவர். அவரின் திருநாமத்தைக் கொண்டே அந்தக் கோயில் அழைக்கப்படும். கல்வெட்டுகளிலும் குறிப்புகளிலும் அறநிலையத்துறை பதிவுகளிலும் மூலவரின் பெயரைக் கொண்டே கோயில் குறிக்கப்பட்டிருக்கும். பதிவு செய்யப்பட்டிருக்கும்.

ஆனால், அந்த மூலவரின் சாந்நித்தியத்தையும் கடந்து, மக்களின் மனங்களில் பரிவார தெய்வமாகத் திகழ்பவர் அப்படியே பதிந்துவிடுவார். அவரே அந்த ஆலயத்தின் நாயகன்! கோயிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார்.

தமிழ் கூறும் நல்லுலகில், இப்படி பரிவாரக் கடவுளே, பரிகாரக் கடவுளாகவும், பலன் தரும் தெய்வமாகவும் நின்று அருள்பாலிக்கிற ஆலயங்கள் இருக்கவே செய்கின்றன. அந்த வகையில், திட்டை திருத்தலமும் முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்.

இங்கே, மக்களின் மனங்களில் இடம் பிடித்த, குரு பகவானே உண்மையான நாயகன். தமிழகத்தில் குரு பகவான் குடிகொண்டு அருள்பாலிக்கும் தலங்களில், திட்டையும் ஒன்று. சொல்லப்போனால், முக்கியமான தலம்.

திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். ஆக, பாடல் பெற்ற திருத்தலம் எனும் பெருமையைப் பெறுகிறது, திட்டை. ஆனால், திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு எப்போது வந்தார், என்ன விளையாடல் நிகழ்ந்தது என்பன போன்ற தகவல்கள் பெரியபுராணத்தில் குறிப்பிடப்படவில்லை.

இந்தத் தலத்தின் பெருமைகளை, ஸ்ரீலோகநாயகி சமேத ஸ்வயம்பூதேஸ்வரர் புராணக்குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. சோழ தேசத்தின் மிகத் தொன்மையான, அழகிய, அற்புதமான ஆலயங்களில், தென்குடித்திட்டை திருத்தலமும் ஒன்று!

இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம். ஆம், ஸ்வாமி தான்தோன்றீஸ்வரர். தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர். திருக்கயிலாயம், புண்ணியமிகு காசி க்ஷேத்திரம், திருக்காஞ்சி, தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் முதலான பல க்ஷேத்திரங்களில் சிவனார், மக்களுக்கு அருள் செய்ய சுயம்பு மூர்த்தமாக, தானே வெளிப்பட்டார் என்கின்றன புராணங்கள். அந்த வகையில், சுயம்புமூர்த்தமாக திட்டையிலும் தோன்றினார் சிவனார். அப்படியான சிவ ஸ்தலங்களில் 22-வது திருத்தலம் இது.

திட்டை எனும் தலத்தில் தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் குரு பகவான். வியாழக்கிழமைகளில் உங்கள் நட்சத்திரத்துக்கு உரிய நாளிலும் இங்கு வந்து குடும்ப சகிதமாக அவரை வணங்குங்கள். வழிபடுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்களுக்கு குரு பலம் கிடைப்பது நிச்சயம். குருவருளும் திருவருளும் அமைவது சத்தியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x