Published : 16 Nov 2017 10:22 AM
Last Updated : 16 Nov 2017 10:22 AM

தெய்வத்தின் குரல்: மந்திரம் - யோகமும் ஸித்தியும்

 

தினான்கு உலகங்களும் ஒரு ராஜ்யம். இந்த ராஜ்யத்திற்கு ஒரு சக்ரவர்த்தி. அந்த சக்ரவர்த்திக்கு எல்லா ஜீவராசிகளும் பிரஜைகள். ராஜ்யமும் அநாதி, சக்ரவர்த்தியும் அநாதி. ராஜ்யமும் சக்ரவர்த்தியும் பிரஜைகளும் இருந்தால் அதற்கு ஒரு சட்டம் வேண்டும். இவை எல்லாம் அநாதியானால், சட்டமும் அநாதியாகத்தானே இருக்கணும்? அந்த அநாதிச் சட்டமே வேதம். இவற்றில் ராஜ்யமான பிரபஞ்சத்தை ‘அநாதி’ என்றாலும், அவ்வப்போது அதற்கு உற்பத்தி உண்டு; அழிவும் உண்டு.

சக்ரவர்த்தியான பரமாத்மாவும் சட்டமான வேதமும் ஸர்வ சாச்வதம். உலகம் உற்பத்தி ஆகிறது, வளர்கிறது, பிரளயம் அடைகிறது. திரும்பவும் உற்பத்தி ஆகிறது, வளர்கிறது, பிரளயம் அடைகிறது. இப்படியே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. சக்ரவர்த்தியும் சட்டமும் மாத்திரம் ஸ்திரம்.

ஒவ்வொரு ஸ்ருஷ்டியின் ஆரம்பத்திலும், அந்த சக்ரவர்த்தி அதிகார புருஷர்களை ஸ்ருஷ்டி செய்கிறான். அந்த அதிகாரிகளுக்கு வேண்டிய யோக சக்தியைக் கொடுக்கிறான். யோக சாஸ்திரத்தில் தன் ச்ரோத்திரத்திற்கும் வெளி ஆகாசத்திற்கும் அபேதமான ஒரு ஸாம்யம் (ஸம நிலை) உபதேசிக்கப்பட்டிருக்கிறது. அதை அநுஷ்டிக்கும்போது திவ்ய ஸ்தோத்திரம் கிடைக்கிறது. அந்த திவ்ய ஸ்தோத்திரத்தைக் கொண்டு வெளி ஆகாசத்தில் ஸ்திரமாய்க் கிடக்கும் அநாதி சப் அலைகளை ஈசனுடைய அருள் சகாயத்தால் அந்த அதிகார புருஷர்கள் அடைகிறார்கள். அவர்களே முதல்முதலில் வேதத்தை அறிந்தவர்களாகிறார்கள். அவர்களே மந்திரங்களுக்கான மஹரிஷிகள்.

காப்பாற்றுவதே மந்திரம்

வேதாத்யயனம் ஒரு மந்திர யோகம். ஒவ்வொரு நாடி அசைவதால் சித்தத்துக்கு ஒவ்வொரு விதமான விகாரம் ஏற்படுகிறது. சில நாடி அசைவுகளால் காம விகாரங்களும் சில நாடிகளால் சோம்பல் விகாரங்களும் சில நாடிகளால் கோப விகாரங்களும் உண்டாகின்றன. இதை மாற்றிச் சொன்னால், காம விகாரம் ஏற்படும்போது சில நாடிகளில் அசைவும் கோப விகாரத்தின்போது சில நாடிகளில் அசைவும் இப்படியே ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒவ்வொரு விதமான நாடி அசைவும் உண்டாகின்றன. இவை பிரத்யக்ஷமாகவே அநுபவத்தில் காணப்படுகின்றன.

சாந்தம் ஏற்படும்போது முகத்தில் ஒரு களை உண்டாகிறது. அந்தக் களை சில நாடிகள் குளிர்ந்ததன் பலனேயாம். இப்படியே காமம், குரோதம் ஒவ்வொன்றும், ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்றபடி முகத்திலேயே பிரதிபலிக்கின்றன. நாடி சலனம்தான் இந்த அடையாளங்களை உண்டாக்குவது. இவ்விதம் மனோவிகாரங்களால் நாடிகளில் சில விகாரங்கள் ஏற்படுவதால், அந்த நாடிகளை வசப்படுத்திவிட்டால், காமக் குரோதங்களையோ சாந்தத்தையோ நமது இஷ்டப்படி வரவழைத்துக் கொள்ளலாம். அதற்கு வெளிப் பொருட்கள் தேவையில்லை.

இப்படி நாடிகளை ஸ்வாதீனப்படுத்த பிராணாயாமத்தை முக்கியமாகக் கொண்ட ராஜயோகம் ஒரு மார்க்கம். அதே விதமாய் மந்திரயோகம் ஒரு மார்க்கம். ஓர் எழுத்தை நாம் உச்சரிக்கும்போது நமது நாக்கு, உதடு, மேல்வாய், கீழ்வாய், கண்டம் முதலியவற்றின் இடைவெளி வழியாக பிராணவாயு வெளிப்படுகிறது. அப்பொழுதுதான் அக்ஷர த்வனி உண்டாகிறது. அந்த அக்ஷர த்வனிக்குக் காரணமாக எந்தெந்த உறுப்புகளில் ப்ராணவாயு ஸஞ்சரிக்கிறதோ அந்தந்த இடம் சம்பந்தப்படும் நாடிகளில் சலனம் ஏற்படுகிறது.

நாடிகளின் சலனத்தால் மனசில் எந்தவிதமான விருத்திகள் ஏற்பட்டு இகலோக க்ஷேமமும் பரலோக க்ஷேமமுமாகிய மோக்ஷம் முதலிய புண்ணியமும் ஏற்பட வேண்டுமோ, அதற்கு அநுகுணமாக உள்ள உச்சாடனங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, வேறுவிதமான உச்சாடனங்களை விலக்கி அமைந்தனவே வேத மந்திரங்கள்.

மந்திரத்துக்கு Definition (லக்ஷணம்) ‘மனனாத் த்ராயதே’ என்று சொல்லியிருக்கிறது. அதாவது திரும்பத் திரும்ப மனனம் செய்து உருப்போடுவதால் காப்பாற்றுவதே மந்திரம். அவற்றின் ஆவ்ருத்தியால் எந்தெந்த நாடிகளில் திருப்பித் திருப்பிச் சலனம் ஏற்பட்டு ஆத்மக்ஷேமம் கிட்டுமோ, அந்த க்ஷேமத்தைத் தானும் அடைந்து, தன் மந்திர சக்தியால் உலகத்தோரும் க்ஷேமம் அடையச் செய்வதே வேதியரின் பிறவிக் கடமை.

அர்த்தம் தெரிந்துகொண்டுதான் மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

தெய்வத்தின் குரல்
(இரண்டாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x