Published : 10 Nov 2017 04:42 PM
Last Updated : 10 Nov 2017 04:42 PM
சென்னையும் திருவான்மியூரும் நிறையபேருக்குத் தெரியும். அங்கே சாலைக்கு அருகிலேயே அமைந்து உள்ள மருந்தீஸ்வரர் கோயிலையும் அறிந்திருப்போம். கோயிலுக்கு அருகில், சாலைக்கு நடுவில் சிறியதாகக் கோயில் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா.
பலரும் இது பிள்ளையார் கோயில் என்றே கடந்திருப்பார்கள். சிலர், அருகில் வந்து, 'அட... இந்த இடத்துல இப்படியொரு சந்நிதியா?’ என்று புருவம் உயர்த்தியிருக்கலாம். அந்த சந்நிதிக்கு உரியவர்.. வால்மீகி!
சென்னை திருவான்மியூரில் அழகுற அமைந்துள்ள புராதனமான ஆலயம்... மருந்தீஸ்வரர் திருத்தலம். புராணப் பெருமை கொண்ட பூமி இது.
ஆதி காலத்தில், வன்னி மரமும் வில்வ மரமும் சூழ்ந்து, வனமாக இருந்த இந்த இடத்தில் பிறகு கோயில் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அப்படி வனமாக இருந்த போது, இங்கே வந்த வால்மீகி முனிவர், சிவபெருமானை நினைத்து இங்கு பலகாலம் தவமிருந்தார். அந்தத் தவத்தில் மகிழ்ந்த ஈசன், பார்வதிதேவியுடன் ரிஷபாரூடராகக் காட்சி தந்து அருளினார்.
ஆகவே, மருந்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரில், சாலைக்கு நடுவே, அப்போது அவர் தவம் இருந்த இடத்தில், சந்நிதி கொண்டிருக்கிறார் வால்மீகி முனிவர். தினமும் காலையும் மாலையும் இவருக்கு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அவருக்கு வெண்மை நிற மலர்கள் அணிவித்து பிரார்த்தித்தால் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT