Published : 25 Nov 2017 01:12 PM
Last Updated : 25 Nov 2017 01:12 PM
தருமபுரிக்கு அருகில் அமைந்து உள்ளது அதியமான் கோட்டை ஸ்ரீதட்சிண காசி காலபைரவர் ஆலயம். தோஷங்களையும் எதிர்ப்புகளையும் போக்கும் அற்புதமான தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். தருமபுரியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில்.
தேய்பிறை அஷ்டமியில், பைரவ வழிபாடு மிகுந்த பலன் அளிக்க வல்லது என்பது ஐதீகம். இந்த நாளில், சிவாலயங்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள், விசேஷ அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கம்.
அதியமான்கோட்டை திருத்தலத்தில், பூசணிக்காயில் விளக்கேற்றி வழிபடுகிற வழக்கம் உண்டு. அதேபோல், பிராகாரத்தை எட்டு முறை வலம் வந்து வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.
அதேபோல், பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிப்பது, திருச்சி குணசீலம் பெருமாள் கோயில் போல், இங்கேயும் நடைபெறுகிறது. பொதுவாகவே தென் மாவட்டக் கோயில்கள் பலவற்றில், அம்மன் மற்றும் சாஸ்தா கோயில்களில், பக்தர்களின் முகத்தில் தீர்த்தம் தெளிக்கும் வைபவம் தினமும் நடைபெறும். அதேபோல், அதியமான் கோட்டை தட்சிண காசி காலபைரவர் கோயிலிலும் தீர்த்தத் தெளிப்பு பிரசாதமாக செய்யப்படுகிறது. இதனால்,
பில்லி, சூனியம் முதலான துஷ்ட சக்திகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். எதிரிகளின் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் யாவும் அகலும் என்பது ஐதீகம்.
அதேபோல் பித்ருக்களின் சாபம், நவக்கிரகங்களால் உண்டாகும் தோஷம், ஜாதக தோஷம் முதலானவை பைரவ வழிபாட்டால், நீங்கிவிடும் என்று சொல்லிச் சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.
ஔவைக்குநெல்லிக்கனி வழங்கியவரும் கடையேழு வள்ளல்களில் ஒருவருமான அதியமான் ஆட்சி செய்த தேசம் இது. இங்கே உள்ள கோட்டை அதியமான் கோட்டை எனப்படுகிறது.
இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தபோது, அந்நிய இனத்தவர்கள் இந்தப் பகுதியில் உள்ள கோயில்களை இடித்துத் தள்ளினார்கள். இதனால் கோபமுற்ற அதியமான், அவர்களைப் போர் தொடுக்கலாமா என்பது குறித்து, தன் ஜோதிடர்களிடம் கேட்டறிந்தான்.
அப்போது ஜோதிடர்கள், ‘’காசியம்பதிக்குச் சென்று, அங்கே உள்ள பைரவர் கோயிலில் பூஜை செய்துவிட்டு, கங்கையில் இருந்து கல்லெடுத்து வந்து, அந்தக் கல்லால் பைரவருக்கான கோயில் கட்ட வேண்டும். காசியில் இருந்து பைரவர் சிலை கொண்டுவந்து, நம் தேசத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும்’’ என்று தெரிவித்தார்கள்.
அதேபோல். கோயில் எழுப்பும் போது, அங்கே உள்ள மகா மண்டபத்தில், நவகோள்களின் சக்கரங்களை, மேற்கூரையில் அமைத்து வழிபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதன்படியே செய்தார் அதியமான். பைரவ பூஜை செய்து வழிபட்டார். போரில் வென்றார். முன்னதாக, போருக்குப் பயன்படுத்தும் ஆயுதங்களை, காலபைரவர் சந்நிதியில் வைத்து, வேண்டிக் கொண்டு களத்தில் இறங்கினான்; வென்றான் என்கிறது ஸ்தல வரலாறு.
அந்த அதியமானின் வாள், பைரவரின் திருக்கரங்களில் இன்றைக்கும் இருப்பதைத் தரிசிக்காம். இங்கே உள்ள பைரவர், உன்மத்த பைரவர் என அழைக்கப்படுகிறார்.
இவரின் திருமேனியில், 27 நட்சத்திரங்களும் , 12 ராசிகளும்
அடங்குவதாகக் கூறுவர். எனவே இந்த பைரவரை வழிபட்டால், ராசிகளாலும் நட்சத்திரங்களாலும் உண்டான தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். மனசஞ்சலம் நீங்கி, மகத்தான வாழ்வு கிடைக்கும் எனப்து சத்தியம்!
தேய்பிறை அஷ்டமி தோறும் நடக்கும் குருதி பூஜை சிறப்பானது. தேய்பிறை அஷ்டமி அன்று இரவு 10 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம் , குருதி பூஜை முதலியன நடக்கும். இதில் 500 கிலோ வர மிளகாய் , 108 கிலோ மிளகு , 8 தீப்பந்தங்கள் கொண்டு சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன.
பிறகு பூஜைகள் முடிந்ததும் தீர்த்தம் தெளிக்கும் நிகழ்வு நடைபெறும். இதனால் உடலில் ஆரோக்கியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும். பில்லி சூனியம் முதலான துர்சக்திகள் தலைதெறிக்க ஓடும். கோட்டை காலபைரவர் கோயிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில் சென்று தரிசியுங்கள். வாழ்க்கையில் இனி எல்லாமே வளர்பிறைதான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT