Last Updated : 17 Jul, 2014 10:27 AM

 

Published : 17 Jul 2014 10:27 AM
Last Updated : 17 Jul 2014 10:27 AM

பெருவாழ்வு வாழ வைக்கும் முப்பாத்தம்மன்

ஆடியும் தையும் அம்மனுக்கு உரிய மாதங்களாகக் கொண்டாடப்படுகின்றன. அதிலும் ஆடி என்றால் நாகருக்குப் பால் விடுவது முதல் அம்மனுக்குக் கூழ் ஊற்றுவது வரை அம்மனைக் கொண்டாடும் விதங்கள் பல.

தாய் தன் குழந்தைகளை ஐயமறக் காப்பாள். அந்தத் தாயின் இடத்தில்தான் பெண் தெய்வங்கள் இருக்கிறார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. பெண் தெய்வம் குலத்தைக் காக்கும் என்பதால், குல தெய்வம் என்று தனியாக இருந்தாலும், நாகருக்குப் பால் வார்க்கும் வழக்கமும், அம்மனைப் போற்றும் வழக்கமும் தமிழகத்தில் கூடுதலாகவே உண்டு.

சென்னையில் அவ்வாறு புகழ் பெற்று விளங்கும் அம்மன் முப்பாத்தம்மன். தியாகராய நகரில் சாரதா வித்யாலயா பள்ளிக்குப் பின்புறம் அமைந்துள்ள இக்கோவிலில் ஆடி மாதம் அடி எடுத்து வைக்கக்கூட இடமில்லாமல் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோயிலின் முகப்பு எடுப்பாக எடுத்துக் கட்டப்பட்டுள்ள நிலையில், கோயிலின் உள்ளே நுழையும்பொழுதே, நேரெதிரே முப்பாத்தம்மன் அருட்காட்சி அளிக்கிறாள். நகரின் மையத்தில் உள்ள இக்கோயிலின் தல புராணம் வியப்பூட்டுவதாக உள்ளது.

முன்னொரு காலத்தில் தியாகராய நகரில் இடைவிடாத தொடர்ந்த மழை பெய்ததில் நகரமே வெள்ளக்காடானது. குளம் குட்டையெல்லாம் நிரம்பி வழிந்தது. வானமே பொத்துக் கொண்டாற்போல் மழை இடைவிடாமல் பெய்துகொண்டிருந்தது. அங்கிருந்த மக்களெல்லாம் மகமாயியை வேண்டிக்கொள்ள, சிலாரூபமான அம்மன் ஒன்றும் அடித்து வரப்பட்டது. அச்சிலாரூபத்தை எடுத்த பெரியவர் ஒருவர், எடுத்த இடத்திலேயே அந்த அம்மனுக்குக் கோயில் கட்டத் தீர்மானித்தார்.

மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு வழியாக நின்றது. சூரியன் பிரகாசிக்கத் தொடங்கினான். மாம்பலம் பகுதி கிராமமாக இருந்தபோது அதன் முதன்மைத் தொழில் விவசாயம்தான். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு கோயில் கொண்டுவிட்ட இந்த அம்மன் மூன்று போக விளைச்சலையும் காத்துவந்ததால், மூன்று போகம் காத்த அம்மன் என்பது மருவி முப்பாத்து அம்மன் என்று ஆகியிருக்கலாம்.

பக்தர்களின் ஐந்தாம் தலைமுறையைக் காணும் இந்த அம்மனை பக்தர்கள் பலவாறு பூஜை செய்து வணங்குகிறார்கள். புற்றுக்குப் பால், புற்றைச் சுற்றியுள்ள நாகர் சிலாரூபங்களுக்குப் பாலாபிஷேகம், கோயிலுக்குள் நெய் தீபங்கள் ஏற்றும் தீபக் காணிக்கை, அம்மனுக்கு எலுமிச்சை மாலை, வேப்பிலை மாலை, அரளிப் பூ மாலை, சாமந்தி மாலை, மல்லிகைப் பூ மாலை, பாலாபிஷேகம், தேனாபிஷேகம் என பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். அம்மனுக்குப் புடவை சாற்றி வணங்கிப் பூஜித்துப் பலன் பெற்றவர்கள் ஏராளம். அம்மன் பதினாறு செல்வங்களை அருள்வதாக ஐதீகம். அந்தப் பதினாறு வளங்கள் என்னவென்பதை அபிராமி பட்டர் அழகாகச் சொல்லியிருப்பதைப் பாருங்கள்:

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே

ஆதிகட வூரின் வாழ்வே

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி! அபிராமியே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x