Published : 29 Jul 2023 04:13 AM
Last Updated : 29 Jul 2023 04:13 AM
ஹள்ரத் அபூபக்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய இறுதி ஹஜ்ஜின் போது ஓர் உபதேசம் செய்தார்கள். ‘‘அறிந்து கொள்ளுங்கள்! முன்பே அல்குர்ஆன் தெளிவாக தெரிவித்துவிட்டது. கடைசியாகத்தான் அல்குர்ஆனின் இந்த தத்துவத்தை ஒட்டுமொத்த உலகமும் ஏற்றுக் கொண்டது.’’ எனவே அல்குர்ஆன் என்பது இறைவேதம்தான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
எந்த மாதத்துக்கும் கிடைக்காத ஒரு தனிச்சிறப்பு முஹர்ரம் மாதத்துக்கு கிடைத்திருக்கிறது. அது என்னவெனில் அல்லாஹ்வுடன் இணைத்து கூறப்படும் பெயர்களின் வரிசையில் முஹர்ரம் மாதமும் வருகிறது.
ரஸுலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர்), கலீலுல்லாஹ் (அல்லாஹ்வின் மெய்யன்பர்), ரூஹுல்லாஹ் (அல்லாஹ்வின் உயிர்), நாகதுல்லாஹ் (அல்லாஹ்வின் ஒட்டகம்), ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் படை), சிப்கதுல்லாஹ் (அல்லாஹ்வின் வர்ணம்), ரஹ்மதுல்லாஹ் (அல்லாஹ்வின் கிருபை), ஹுதல்லாஹ் (அல்லாஹ்வின் வழி), அஜ்ருல்லாஹ் (அல்லாஹ்வின் கூலி), யதுல்லாஹ் (அல்லாஹ்வின் உதவி), வஜ்ஹுல்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பொருத்தம்,) நஸ்ருல்லாஹ் (அல்லாஹ்வின் உதவி), பள்லுல்லாஹ் (அல்லாஹ்வின் அருள்), திக்ருல்லாஹ் (அல்லாஹ்வின் நினைவு), ஆயத்துல்லாஹ் (அல்லாஹ்வின் அத்தாட்சி), அன்ஸாருல்லாஹ்(அல்லாஹ்வின் உதவியாளர்கள்), அவ்லியா உல்லாஹ் (அல்லாஹ்வின் நேயர்கள்), ஷஆயிருல்லாஹ் (அல்லாஹ்வின் நினைவுசின்னங்கள்) போன்ற வரிசையில் ஷஹ்ருல்லாஹ் (அல்லாஹ்வின் மாதம்) என்ற சிறப்புப் பெயரை முஹர்ரம் மாதம் பெறுகிறது. இவை யாவும் அல்லாஹ்வின் நினைவுச் சின்னங்கள். இவற்றை கண்ணியப்படுத்துவது முஸ்லிம்கள் மீதுகடமையும், உரிமையுமாகும்.
அல்லாஹ்வுடைய நினைவுச் சின்னங்களில் ஒன்றான முஹர்ரம் மாதத்தை எவ்வாறு கண்ணியப்படுத்துவது? ஆம்.முஹர்ரம் (1. ஹராமாக்கப்பட்டது 2. சங்கைப்படுத்தப்பட்டது) என்னும் அர்த்தங்களுக்கு தகுந்த மாதிரி செயலிலும் அதை கண்ணியப்படுத்த வேண்டும்.
முஹர்ரமில் எது ஹராம்?: சண்டை, சச்சரவு, போர் போன்ற செயல்களில் முஹர்ரம் மாதத்தில் ஈடுபடக்கூடாது. ஒருவேளை முஸ்லிம்கள் மீது போர் திணிக்கப்பட்டால், அதை எதிர்த்து போராடலாம். ஹிஜ்ரி ஆண்டின் முடிவு துல்ஹஜ்ஜும், தொடக்கம் முஹர்ரமும் போர் தடை செய்யப்பட்ட மாதங்களில் ஒன்றுபடுகின்றன. இவற்றில் போர் செய்யதடை ஏன்? ஆம் புனித ஹஜ்ஜு பயணத்தைமுடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் ஹாஜிகளுக்கு போர் போன்ற வன்செயல்களினால் இடையூறு ஏற்படுவதை தடுப்பதற்காக முஹர்ரம் மாதத்திலும், அதற்கு முந்தைய மாதங்களானதுல்ஹஜ்ஜிலும் (துல்கஃதாவிலும்) போர் ஹராமாக்கப்பட்டிருக்கிறது.
எவ்வாறு கண்ணியப்படுத்துவது?: ரமளானுக்குப் பிறகு முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்பதுசிறந்த செயலாக உள்ளது. அதிலும் குறிப்பாக முஹர்ரம் பிறை 9, 10ஆகிய இருதினங்களில் நோன்பு நோற்பதுசிறப்பிலும் சிறப்பு!
“ரமளானுக்குப் பிறகு நோன்புகளில் சிறந்தது அல்லாஹ்வின் மாதமான முஹர்ரமில் நோன்பு நோற்பது ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம்.
ஆஷுரா நோன்பின் முக்கியத்துவம்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை புரிந்தார்கள். யூதர்களும் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். ‘இந்நாளில் நீங்கள் வைக்கும் நோன்புக்கு என்ன காரணம்?’ எனக் கேட்க. ‘‘இது ஒரு சங்கையான நாள். இந்நாளில் நபிமூஸா (அலை)அவர்களையும், அவர்களின் சமூகத்தாரையும் அல்லாஹ் காப்பாற்றி ஈடேற்றம் அளித்த நாள். மேலும் பிர்அவ்னையும் அவனது கூட்டாளிகளையும் அல்லாஹ் (செங்கடலில்) மூழ்கடித்த நாள். எனவே இதற்கு நன்றி கடன்பட்ட நபி மூஸா(அலை) அவர்கள் இந்நாளில் நோன்பு நோற்றார்கள். அவரைப் பின்பற்றி நாங்களும் நோன்பு வைக்கிறோம்’’ என யூதர்கள் பதிலுரைத்தார்கள். இதை கேட்டநபி(ஸல்) அவர்கள் ‘‘உங்களைவிட நாங்கள் மூஸா நபிக்கு அதிகம் நெருக்கமுடையவர்கள், தகுதி உடையவர்கள்’’ என்று கூறிவிட்டு ஆஷுரா தினத்தில் நபி(ஸல்) அவர்கள் தாமும் நோன்பு வைத்தார்கள், பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள்” அறிவிப்பாளர்: ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம்.
‘‘ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பதின் சிறப்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘கடந்த காலத்தில் நிகழ்ந்த சிறுபாவங்களை அது அழித்து விடும்‘ எனக் கூறினார்கள்” அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூகதாதா (ரலி) அவர்கள் நூல்: முஸ்லிம்.
எனவே இந்த ஹிஜ்ரி 1445-ம் ஆண்டின் புத்தாண்டை சண்டை சச்சரவுகள் இல்லாமலும், முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10, 11 ஆகிய இரு தினங்களில் நோன்பிருந்தும் புத்தாண்டை கொண்டாடுவோமாக!
கட்டுரையாளர்:
ஜனாப் எம். நாகூர்ராஜா
மாநில செயல் தலைவர், இந்திய தேசிய லீக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT