Last Updated : 24 Jul, 2014 09:25 AM

 

Published : 24 Jul 2014 09:25 AM
Last Updated : 24 Jul 2014 09:25 AM

கொஞ்சி மகிழாத ஒரு தந்தை

ஒருநாள், அண்ணல் நபி குழந்தைகளோடு அமர்ந்திருந்தார். அவர்களோடு சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். குழந்தைகளின் தலையைப் பாசத்தோடு அணைத்து முத்தம் தந்தார்கள். தங்கள் மீது நபிகளார் வைத்திருந்த பேரன்பைக் கண்டு குழந்தைகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

குட்டிக் குழந்தைகளுக்கு அன்பு நபியை இன்னும் பிடிக்கும். ஏனென்றால், அறுவடைக் காலம் வரும்போது, நபிகளார் பழங்களைக் கொண்டு வருவார். சுவையான அந்த பழங்களை முதலில் குட்டிப் பிள்ளைகளுக்கு ஆசையாகத் தருவார்.

இப்படி நபிகளார் குழந்தைகளுடன் அமர்ந்து கொஞ்சிக்கொண்டிருந்த வேளையில் அங்கு ஒருவர் வந்தார். அப்படியே அசையாமல் நின்றார்.

நபிகளார் குழந்தைகளோடு குழந்தையாய் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

அது ஓர் அற்புதமான காட்சி. பார்ப்பவர் மனங்களைக் கொள்ளை கொள்ளும் காட்சி. தம்மையும் அறியாமல் முகங்களில் புன்முறுவலை இழையோட வைக்கும் காட்சி. நாமும் குழந்தைகளிடம் அன்புடன் பழக வேண்டும் என்ற படிப்பினையைத் தரும் காட்சி.

ஆனால், அங்கு வந்த கிராமவாசியோ அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடையவில்லை. புன்முறுவலும் பூக்கவில்லை. அவர் நபிகளாரிடம் பேசிய பிறகுதான் அதற்கான காரணம் புரிந்தது.

அந்த கிராமவாசி என்ன சொன்னார் தெரியுமா?

“இறைவனின் தூதரே! எனக்குப் பத்து குழந்தைகள் உள்ளன. ஆனால்.. ஆனால்.. நான் இதுவரையிலும் என் குழந்தைகளிடம் இப்படிக் கொஞ்சியதில்லை. முத்தம் கொடுத்து மகிழ்ந்ததில்லை.”

இதைக் கேட்டு நபிகளார் மிகவும் வருத்தப்பட்டார்கள். அந்தக் கிராமவாசியின் நிலைமையை எண்ணிச் சோகம் கொண்டார்கள். இறைவன் அந்த மனிதருக்குத் தன்னுடைய கருணையால் பிள்ளைச் செல்வங்களை அளித்திருந்தான். ஆனால், அவரோ ஒரு குழந்தையையும் தூக்கி கொஞ்சவில்லை! இது எத்தனை வேதனையான விஷயம்!

இறைவன் அந்த மனிதரின் உள்ளத்தில் கருணையைச் சுரக்கச் செய்யவில்லை. இறைவன் அவர் மீது அருள்பொழியவில்லை.

“உம்முடைய உள்ளத்திலிருந்த அன்பையும், கருணையையும் சுத்தமாகத் துடைத்தெறிந்து விட்டபிறகு நான் எப்படி உமக்கு உதவ முடியும்?” என்றார்கள் அன்பு நபிகளார் சோகத்துடன்.

கிராமவாசி அதுவரையும் அனுபவித்தறியாத வேதனைக்கும், துக்கத்துக்கும் ஆளானார். இறைவனின் தூதரிடம் அறிவுரை பெற முடியவில்லையே! என்ற கவலையில் அவர் மூழ்கிவிட்டார்.

ஆனால், இறைத்தூதருடன் நடந்த அந்த உரையாடலில் அவருக்கு ஒன்றுமட்டும் தெளிவாகப் புரிந்தது.

இனி குழந்தைகளிடம் அன்புடனும், கருணையுடனும் நடந்துகொள்ள வேண்டும். இந்தத் தகுதியை வளர்த்துக்கொள்வதன் மூலமே நபிகளாரின் அன்பைப் பெறமுடியும். இறைவனின் அன்புக்கும் , அருளுக்கும் ஆளாக முடியும் என்பதை அவர் உணர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x