Last Updated : 11 Nov, 2017 05:50 PM

 

Published : 11 Nov 2017 05:50 PM
Last Updated : 11 Nov 2017 05:50 PM

மகா கால அஷ்டமி சிறப்பு பூஜை... சிதம்பரத்தில் மகா ருத்ர ஜப ஹோமம்!

மகா கால அஷ்டமியை முன்னிட்டு, இன்று நவம்பர் 11ம் தேதி சிதம்பரத்தில், மகா ருத்ர ஜப ஹோமம் நடைபெற்றது. மேலும் லட்ச மூல மந்திர ஆவர்த்தி ஜப ஹோமமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கால பைரவரின் ஜன்மாஷ்டமி தினத்தை முன்னிட்டு, இன்று சிதம்பரம் விளங்கி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஓம் சக்தி திருமண மாளிகையில், காலை 9 மணிக்கு மகா ருத்ர ஜபமும் லட்ச மூல மந்திர ஆவர்த்தி ஜப ஹோமமும் நடைபெற்றது. இரவு வரை இந்த பூஜை விமரிசையாக நடைபெறும்.

ஐயப்ப தீட்சிதர் மற்றும் ஸ்ரீநவ பைரவ க்ஷேத்திர கைங்கர்ய சமாஜம் டிரஸ்ட் உறுப்பினர்கள் நடத்தும் இந்த பூஜை, காலையில் இருந்தே சிறப்புற நடைபெற்றது. இதில் சிதம்பரம் தீட்சிதர்கள் பலரும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டார்கள்.

நவக்கிரகங்களுக்கு நவ பைரவர்கள் இருப்பதாகச் சொல்வர். சூரியனுக்கு சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் கார்த்திகை, உத்திரம், உத்திரடம் நட்சத்திக்காரர்களுக்கானவர் இவர் என்றும் சொல்வார்கள்.

அதேபோல், சந்திரன், கபால பைரவருக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் பூஜை செய்யலாம். செவ்வாய்க்கு சண்ட பைரவர் என்றும் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபடலாம்.

புதன் பகவானுக்கு உரிய உன்மத்த பைரவர் என்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் வழிபட்டால் பலன்களை அள்ளித் தருவார் என்றும் தீட்சிதர்கள் தெரிவிக்கிறார்கள்.

குரு பகவானுக்கு, அசித்தாங்க பைரவர் என்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திக்காரர்கள் உரிய முறையில் வழிபட்டுப் பிரார்த்தித்தால், எல்லா வளமும் தருவார் என்கிறார்கள்.

சுக்கிரனுக்கு உரிய ருரு பைரவருக்கு, பரணி, பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் வழிபட்டால், உரிய நைவேத்தியங்கள் படைத்து பிரார்த்தனை செய்தால் எல்லா சந்தோஷங்களும் கிடைக்கப் பெறலாம்..

சனி பகவானுக்கு கோரத பைரவர் என்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும். தரித்திரம் விலகி ஐஸ்வரியங்களுடன் வாழலாம்.

ராகு பகவானுக்கு சம்ஹார பைரவர் என்றும் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட்டால் அனைத்து யோகங்களும் கிடைக்கும் என்றும் வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார்.

கேது பகவானுக்கு பீஷண பைரவர் என்றும் அஸ்வதி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் செந்நிற மலர்கள் வழங்கி வழிபடுவது சகல செளபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்கிறார்கள்.

தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில், தீட்சிதர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த பைரவ பூஜை மற்றும் ஹோமம் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே அமையும் என்று தெரிவித்தார் வெங்கடேச தீட்சிதர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x