Published : 31 Jul 2014 09:20 AM
Last Updated : 31 Jul 2014 09:20 AM

முக்தி தந்தாரா முக்திநாதர்?

மனிதர்கள் வாழ்க்கையில் ஆயிரம் துயரங்களைச் சந்தித்தாலும் இந்த வாழ்க்கையிலிருந்து நிரந்தர விடுதலை பெறும் முக்தியைக் கொடு என்று வேண்டுகிறார்களா? இந்தத் துன்பங்களிலிருந்து எனக்கு விடுதலை கொடு என்று வேண்டுகிறார்களே தவிர, என் ஆத்மாவுக்கு நல்ல வழியாகிய முக்தியைக் கொடு என்று வேண்டுவதே இல்லை. வாழ்க்கையில் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டிருப்போரைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

பொதுவாக நம்மில் எத்தனை பேர் முக்தியை வேண்டிக்கொண்டிருக்கிறோம்?

அண்மையில் பெற்ற ஓர் அனுபவம் இந்தக் கேள்வியை மேலும் கூர்மையாக்கிவிட்டது. திருத்தல யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நேபாள தேசத்தில் உள்ள முக்திநாத் என்னும் திவ்ய க்ஷேத்திரத்துக்குச் சென்று தரிசனம் செய்தோம். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் நூற்றி ஆறு திவ்ய தேசங்களை மட்டுமே தரிசிக்க முடியும், இரண்டு திவ்ய தேசங்களைக் காண முடியாது , அடைய வேண்டும் என்று நினைத்தாலும் அவன் அருளின்றிக் கிடைக்காது என்கிறார்கள் ஆன்றோர்.

ஒன்று திருப்பாற்கடல் ஷீராப்திநாதன் – கடல்மகள் நாச்சியார் வீற்றிருக்கும் இடம். (இந்த திவ்யதேசம் புவியில் இல்லை). இரண்டாவது திருப்பரமபதம் அல்லது வைகுந்தம் - பரமபதநாதன் - பெரிய பிராட்டியார் உறைந்திருக்கும் இடம்.

இவை இரண்டும் கடைசி நிலையாகிய வீடு பேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலையை எய்திச் செல்லும் இடமாகும். ஆகவே இந்த இரண்டு திவ்ய தேசங்களை இன்னும் மனிதர் அடையவில்லை. அப்படியே யாரேனும் அடைந்திருந்தாலும் அவர் அனுபவத்தை நாம் அறிந்துகொள்ள வழி இல்லை. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.

முக்திநாத் திவ்ய க்ஷேத்திரத்துக்குச் செல்லும் வழியெங்கிலும் அதள பாதாளங்கள், முதலில் வான் வழியாகப் பயணித்து, அதன் பிறகு டெல்லி, காத்மாண்டு சென்று அங்கிருந்து போக்ரா என்னும் இடத்துக்கு காரில் சென்று மீண்டும் போக்ராவிலிருந்து ஜோம்சொம் என்னும் இடத்துக்கு சிறிய விமானத்தில் சென்று ஜோம்சொம்மிலிருந்து கண்டகி நதி வழியாக ஜீப்பில் சென்று மீண்டும் மலைப் பாதையில் மோட்டார் பைக்கில் முக்திநாத் சென்றடைந்தோம்.

முக்தி தரும் நாதன் முக்திநாதன் சாளக்ராம வடிவத்தில் இருக்கிறார். ஸ்ரீமூர்த்தி – ஸ்ரீதேவி இருவரையும் தரிசனம் செய்தோம். முக்தி தர வேண்டும் என்று வேண்டிக்கொள்வதற்காகவே முக்திநாதரைத் தரிசனம் செய்ய வேண்டும் என்னும் ஆவலே எழுந்தது.

நாங்கள் பயணப்பட்ட குழுவில் 85 வயது முதியவர் ஒருவரும் வந்திருந்தார். பனிமலையின் குளிரினாலும் காற்று இல்லமையாலும் அவர் மூச்சு விட முடியாமல் மிகவும் அவதிப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் வாய்விட்டு, “முக்திநாதா உன்னைத் தரிசிக்கத்தானே வந்தேன்? என்னைக் கஷ்டப்படுத்துகிறாயே! எப்படியாவது என்னைக் காப்பாற்றி மீண்டும் என் வீட்டிற்கே பத்திரமாய்த் திருப்பி அனுப்பு” என்று வேண்டிக்கொண்டார்.

அவருடைய கஷ்டம் அவரை அப்படிக் கேட்க வைத்தது. ஆண்டவனிடம் என்ன கேட்பது என்பது அவரவர் உரிமை. என்றாலும் அந்த வேண்டுதலைக் கேட்கையில் வியப்பாக இருந்தது.

வந்திருப்பது முக்திநாதனின் சன்னதி.

இங்கு வருவது முக்தி வேண்டி.

முக்தி, அதாவது மோட்சம், வேண்டி முக்திநாதனைத் தரிசிக்கச் சென்றுவிட்டு, அவனிடம் முக்தியை வேண்டாமல் மீண்டும் வீட்டிற்கே அனுப்பச் சொல்லி வேண்டிக்கொள்ளுவது நகைமுரண் அல்லவா?

அவரைக் குறை சொல்லவில்லை ஆன்மிகத்தின் பொருள் என்ன என்னும் கேள்வியைத்தான் எழுப்ப விரும்புகிறேன். அவர் மட்டுமல்ல. மலைப்பாதையில் பயணப்படும்போது எல்லோருமே பத்திரமாகக் காப்பாற்றித் தரிசனம் அளித்து மீண்டும் பத்திரமாகத் திருப்பி அனுப்பும்படி இறைவனை வேண்டிக்கொண்டோம்.

உண்மையான முக்தியை விரும்புவோர் யார்?

மனிதர்கள் முக்தியை விரும்புகிறார்களா?

மனிதரில் எத்தனை சதவீத மக்கள் எப்போது வேண்டுமானலும் இந்த ஆன்மாவை உடலிலிருந்து பிரித்துக் கூட்டிக்கொண்டு போய் இறைவனிடம் சேர்க்கத் தயாராய் இருக்கிறார்கள்?

இந்தக் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x