Published : 01 Nov 2017 03:24 PM
Last Updated : 01 Nov 2017 03:24 PM
கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது என்கிறார் தண்டந்தோட்டம் சிவாலயத்தின் நடராஜ குருக்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருநாகேஸ்வரம், அய்யாவாடி, உப்பிலியப்பன் கோயிலுக்கு அருகில் உள்ளது தண்டந்தோட்டம். இங்கே உள்ள சிவாலயத்தின் நடராஜ குருக்கள், அன்னாபிஷேகம் குறித்த விரிவான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே?
ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.
அது என்ன சாபம்?
தெரிந்த கதைதான். சந்திரனுக்கு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான நட்சத்திர மனைவியர் உண்டு. இவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பும் பிரியமும் கொண்டிருந்தான். இதனால், அவன் மற்றவர்களிடம் பாரபட்சம் காட்ட... அவர்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால் மாமனார் சும்மா இருப்பாரா? விஷயம் தெரிந்து கொந்தளித்தார். ஆவேசமானார். சந்திரனின் மீது கடும் கோபம் கொண்டார். ‘உன் உடலானது தேஜஸ் இழந்து, பொலிவிழந்து தேயட்டும்’ என சாபமிட்டார்.
அதைக் கேட்டு சந்திரன், நடுங்கிப் போனான். கெஞ்சினான். துக்கித்துக் கலங்கினான். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேயத் தொடங்கியது. ஒருகட்டத்தில், இழந்ததைப் பெற அழுதேவிட்டான்.
சாபம் தீர்த்த ஈசன்
இப்போதைய திங்களூர் தலத்தை எடுத்துச் சொல்லி, அங்கே சிவனாரைப் பூஜித்தால், சாபவிமோசனம் கிடைக்கும் என தட்சன் சொல்ல... அந்தத் தலத்துக்கு வந்து சிவபெருமானை நோக்கி, கடும் தவம் இருந்தான். ஆனாலும் அவனுடைய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக மங்கிக் கொண்டே வந்தது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருந்தன. தான் செய்த தவறை முழுமையாய் உணர்ந்து கலங்கினான் சந்திரன்.
அப்போதுதான் அந்தத் தருணத்துக்குக் காத்திருந்தவர் போல், சிவனார் அவன் முன்னே திருக்காட்சி தந்தருளினார். சாபத்தில் இருந்து விமோசனம் அளித்தார். மேலும் சந்திரனைப் பெருமைப்படுத்தும் விதமாக, அந்தப் பிறையை, தன் சிரசில் அணிந்து அவனுக்கு பெருமை சேர்த்தார் என்கிறார் தண்டந்தோட்டம் நடராஜ குருக்கள்.
சந்திரன் இழந்த பதினாறு கலைகளும் மீண்டும் அவனிடமே வந்தாலும் கூட, முழுமையான பொலிவுடன் ஐப்பசி பெளர்ணமி நாளில் மட்டுமே சந்திரன் மிகுந்த தேஜஸூடன் காட்சி தருகிறான் என்கிறது புராணம்.
அதுமட்டுமா. சந்திரனின் ஒளி தேய்ந்து கொண்டே வரும். அமாவாசை நாளில் அவனின் ஒளியே இருக்காது. பிறகு வளர்ந்து கொண்டே வரும். பெளர்ணமியில் ஒளிர்வான் சந்திரன். சாப விமோசனம் பெற்ற ஐப்பசி பெளர்ணமியில், கூடுதலாகவே ஜ்வலிப்பான் என்கிறார் நடராஜ குருக்கள்.
ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இன்னொரு காரணமும் சொல்லுவார்கள். அதாவது அக்டோபர் - நவம்பர் மாதத்தில்தான், ஐப்பசி மாதத்தில்தான் நிலவானது பூமிக்கு அருகில், மிக மிக அருகில் வந்து, தன் முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசும் என்கிறது அறிவியல்.
நவக்கிரகங்களில் ஒருவர் சந்திரன். இவருக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த ரிஷிபெருமக்கள், அந்த மாதத்தில், அதாவது ஐப்பசியில் அன்னாபிஷேகம் செய்வது என அறிந்து, அதை நடைமுறைப்படுத்தினார்கள் என்று சொல்லிச் சிலாகிக்கிறார் நடராஜ குருக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT