Last Updated : 23 Nov, 2017 11:08 AM

 

Published : 23 Nov 2017 11:08 AM
Last Updated : 23 Nov 2017 11:08 AM

கிறிஸ்துவின் தானியங்கள் 07: மரம் அதன் கனியால் அறியப்படும்

ன்றைய இஸ்ரேல் தேசம் இயேசுவின் காலத்தில் பல்வேறு பகுதிகளாக இருந்தது. அவற்றில் யூதேயா, கலிலேயா ஆகியவை முக்கியமான பகுதிகள். யூதேயாவின் முக்கியப் பட்டணம் எருசலேம். கலிலேயாவின் முக்கியப் பட்டணம் கப்பர்நகூம். தனது முப்பதாம் வயதில் தொடங்கி, கொல்லப்படும்வரை மூன்று ஆண்டுகள் இறை ஊழியத்தில் ஈடுபட்ட இயேசு, முதல் இரண்டு ஆண்டுகளை கலிலேயாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகமாகச் செலவிட்டார் என்பதை விவிலியத்தின் நற்செய்தி புத்தகங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. கலிலேயாவின் முக்கிய அடையாளமாக அதன் கடல் இருந்தது. அந்தக் கடலில் அடிக்கடி பயணித்த இயேசு, அது புயல், மழையால் கொந்தளித்தபோது அதை அடக்கினார், அதன்மீது நடந்துவந்தார். இயேசுவைத் தேடிவந்து அதன் கடற்கரையில் அடிக்கடி குழுமிய மக்களுக்குப் படகில் இருந்தபடி போதித்தார். அவரைப் பின்பற்றிய அவரின் தொடக்ககால சீடர்கள் கலியேயா கடலில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்தவர்கள்.

இயேசுவின் பட்டணம்

அப்படிப்பட்ட கலிலேயா கடலின் கிழக்குக் கரையில் அமைந்திருந்த கப்பர்நகூமை இயேசுவின் பட்டணம் என்கிறது விவிலியம். ஆம்! இயேசுவின் பட்டணத்துக்கு அருகில்தான் அவர் பிறந்து வளர்ந்த நாசரேத் என்ற சிற்றூர் இருக்கிறது. இயேசு, தனது அன்னையின் வேண்டுகோளை ஏற்று, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய கானா என்ற ஊர் கப்பர்நகூமுக்கு மிக அருகில் உள்ளது. அதன் அருகிலுள்ள நாயீனில்தான் இயேசு ஒரு விதவையின் இறந்த மகனுக்கு உயிர்கொடுத்தார். வீட்டை மறந்து, தன் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த ஐயாயிரம் மக்களுக்கு அவர் உணவளித்த இடமும் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவனுக்கு இயேசு கண்ணொளி தந்த இடமுமான பெத்சாயிதா கப்பர்நகூம் அருகிலேயே உள்ளது. இயேசுவின் போதனைகளுக்கும் அருள் அடையாளங்களாக அவர் செய்த அற்புதங்களுக்கும் மையமாக கலிலேயா கடற்கரைப் பகுதியும் கப்பர்நகூமும் விளங்கின.

சொந்த ஊரில் இகழ்ச்சி

அறிஞர்கள், கலைஞர்கள், ஞானிகள், இறைத்தூதர்கள் என யாராக இருப்பினும் சொந்த ஊரில் அவர்கள் சந்தித்த எதிர்ப்புகளும், இன்னல்களும் ஏராளம். சொந்த ஊரில் அங்கீகாரத்துக்குப் பதிலாக தூற்றல்களையே அதிகமாக எதிர்கொண்டார்கள். இயேசுவுக்கு இவை மிக அதிகமாகவே நடந்தன.

ஒருமுறை இயேசு, கலிலேயா கடலின் மேற்குக் கரையில் போதித்துவிட்டுப் படகில் ஏறி, கடலைக் கடந்து தன்னுடைய சொந்தப் பட்டணமான கப்பர்நகூமை அடைந்தார். அப்போது சிலர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனைப் படுக்கையோடு அவரிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “மகனே துணிவுடன் இரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன” என்று கூறினார். அப்போது இயேசுவின் மீது மிகுந்த கோபத்துடன் இருந்த உள்ளூர் சமய அறிஞர்கள் சிலர், “இவர் தெய்வ நிந்தனை செய்கிறார்”என்று முணுமுணுத்தனர்.

இயேசு அவர்களுடைய எண்ணங்களைப் புரிந்துகொண்டு, “உங்கள் இதயத்தில் ஏன் பொல்லாதவற்றை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று சொல்வது எளிதா, ‘எழுந்து நட’ என்று சொல்வது எளிதா? பூமியில் பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் மனித குமாரனுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக” என்று கூறிவிட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ” என்று சொன்னார். அவனும் எழுந்து தன்னுடைய வீட்டுக்குப் போனான். இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் பயந்துபோனார்கள்; இப்படிப்பட்ட அதிகாரத்தை இயேசுவுக்கு கொடுத்த கடவுளை அவர்கள் மகிமைப்படுத்தினார்கள்.

மருத்துவரின் தேவை

பிறகு இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருந்தபோது வரி வசூலிக்கும் அலுவலகத்தில் மத்தேயு என்ற ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு கூறியதும் உடனே மத்தேயு எழுந்து அவரைப் பின்பற்றிப் போனார். பின்பு, மத்தேயுவின் வீட்டில் இயேசு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது வரி வசூலிப்பவர்கள், பாவிகள் எனப் பலரும் அங்கே வந்து இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த சமய அதிகாரம் கொண்ட பரிசேயர்கள், இயேசுவின் சீடர்களைப் பார்த்து “உங்கள் போதகர் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறார்?” என்று சத்தமாகக் கேட்டார்கள். அது அவருடைய காதில் விழுந்தபோது, “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை. அதனால், ‘பலியை அல்ல; இரக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன்’என்று சொல்லப்பட்டதன் அர்த்தத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள். நீதிமான்களை அல்ல: பாவிகளைத்தான் நான் மீட்க வந்தேன்” என்று சொன்னார்.

நல்ல கனி தராத மரம்

இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார், எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்கினார். பெரும் திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய மனம் உருகியது. மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அதிகார வர்க்கத்தால் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள். அவர்கள் போலி இறைவாக்கினரிடமும் பணம் பிடுங்கும் சமயவாதிகளிடமும் மாட்டிக்கொண்டு தங்கள் துன்பங்கள் தீர்ந்துவிடாதா என்று ஏங்கினார்கள். அவர்களிடம் ‘போலிகள்’ குறித்த விழிப்புணர்வை இயேசு உருவாக்கினார்.

“ போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். ஒவ்வொரு மரமும் அதனதன் கனியால் அறியப்படும். போலி இறைவாக்கினரை அவர்களின் செயல்களைக்கொண்டே அறிந்துகொள்வீர்கள். நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். மரம் அதன் கனியால் அறியப்படும். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியாது. அதைப் போல, செயல்களைக்கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அதிகாரத் தொனியுடன் கற்பித்தார் இறைமகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x