Last Updated : 03 Nov, 2017 11:16 AM

 

Published : 03 Nov 2017 11:16 AM
Last Updated : 03 Nov 2017 11:16 AM

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஸ்ரீநெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில், ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா முன்னிட்டு காந்திமதி அம்பாள் சந்நிதியின் கொடிமரத்தில் இன்று 3.11.2017 வெள்ளிக்கிழமை காலை 6.21.க்கு மேல் 6.51.க்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது, இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து காலை மற்றும் இரவு காந்திமதி அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா வரும் வைபவம் நடைபெறுகிறது.

திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு காந்திமதி அம்பாள் சந்நிதியில் இருந்து காந்திமதி அம்பாள் டவுன் நான்கு ரத வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது .

வரும் 12 ம் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் சந்நிதியில் இருந்து, தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக அதிகாலை 5 மணிக்கு கம்பாநதி காமாட்சி அம்பாள் கோயில் வந்து சேரும் நிகழ்ச்சி நடைபெறும்.

13ம் தேதி மதியம் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் நான்கு ரதவீதிகளில் திருவீதியுலா வரும் வைபவம் நடைபெறுகிறது.

14ம் தேதி அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை திருக்கல்யாண வைபவ விழாவும், பின்னர் சுவாமி அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் பட்டின பிரவேசம் வீதியுலாவும் நடக்கிறது.

14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழாவும், நவம்பர் 17ம் தேதி இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதியுலாவும் நடக்கிறது.

ஐப்பசி திருக்கல்யாண விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x