Published : 08 Nov 2017 11:46 AM
Last Updated : 08 Nov 2017 11:46 AM
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள சிங்கபெருமாள் கோவில் மற்றும் மறைமலைநகரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கச்சூர் கிராமம். இந்த சின்னஞ்சிறிய இரண்டு சிவாலயங்கள் உள்ளன. ஸ்ரீதியாகராஜர் கோயில் என்றும் கச்சபேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் ஆலயம் ஊருக்குள்ளேயே, ஊரின் மத்தியிலேயே அமைந்து உள்ளது. மற்றொரு கோயில், ஊருக்கு ஒதுக்குப் புறமாக, ஊரையொட்டி உள்ள மலைப்பகுதியில் , மலை ஆரம்பிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கே சுவாமியின் திருநாமம் மருந்தீஸ்வரர்.
சுந்தராரல் பாடப்பட்ட அற்புதமான தலம் இது. இங்கே தியாகராஜர் ஊருக்கு நடுவிலும் மருந்தீஸ்வரர் மலையையொட்டியும் கோயில் கொண்டிருப்பதே சிறப்பானது என்றும் தெய்வாம்சம் நிறைந்த பூமி என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்!
மலையுடன் கூடிய மருந்தீஸ்வரர் கோயிலிலும் தியாகராஜர் ஆலயத்திலும் தினமும் காலையிலும் மாலையிலும் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள், வெளியூர்களில் இருந்தும் கூட வந்து கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.
திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நோய் தீர்க்கும் மாமருந்தாக, மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மண் பிரசாதத்தை தினமும் உட்கொண்டால், தீராத நோயும் தீரும், நோய்நொடியின்றி நிம்மதியாக வாழலாம் என்பது ஐதீகம்.
மாதந்தோறும் பௌர்ணமி நாளில், இங்கு கிரிவலம் வருவது விசேஷம். பௌர்ணமியில் கிரிவலம் வந்து இறைவனை தரிசித்து வேண்டினால், சகல காரியங்களும் தடையின்றி நடந்தேறும் என்பது ஐதீகம். முற்பிறவியில் செய்த பாவங்களும் விலகிவிடும் என்கிறார் இந்தக் கோயிலின் முரளி குருக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT