Published : 02 Nov 2017 09:33 AM
Last Updated : 02 Nov 2017 09:33 AM
கு
மரி மாவட்டத்தில் தோவாளை, மருங்கூர், வேளிமலை, முருகன்குன்றம் என மலைகள் எல்லாம் முருகப் பெருமானின் ஆட்சிதான். அதிலும் வேளிமலை மிகவும் சிறப்பு பெற்றது. காரணம் முருகப் பெருமானுக்கும், வள்ளிக்கும் இங்குதான் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் வரும் குமாரகோவில் வேளிமலையில் சுமார் எட்டு அடி உயரத்தில் மணமகனாக முருகன் நிற்க, அருகில் சுமார் ஆறரை அடி உயரத்தில் வள்ளி மணமகளாக இருந்து அருளுகிறார். முருகனுக்கும் வள்ளிக்கும் காதல் வேள்வி நடந்ததால் ‘வேள்வி நடந்த மலை’ ‘வேளிமலை’ ஆகியது எனப்படுகிறது. மலையாளத்தில் ‘வேளி’ என்ற சொல் ‘திருமணம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. கேரளத்தில், நம்பூதிரி இனத்தவர் திருமணத்தை ‘வேளி’ என்றே குறிப்பிடுகின்றனர். வள்ளியை முருகன் காதலித்து மணம் செய்துகொண்டதால் இம்மலையைத் திருமண மலை என்ற பொருளில் ‘வேளிமலை’ என வழங்குகிறார்கள்.
38 படிகள்
மலையின் அடிவாரத்தில் சிறுகுன்றின் மீது கிழக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோயில் இது. வேளிமலை அடிவாரத்திலிருந்து 38 படிகள் ஏறிச்சென்றால் கோவில் சன்னிதியை அடையலாம்.
உட்புறப் பிரகாரத்தில் வலம்வரும்போது தென்மேற்கு மூலையில் வள்ளி, தெய்வானையுடனும் விநாயகர் சாஸ்தாவுடனும் வேலவர் இளைய நாயனாராக இருந்து அருளுகிறார். மேற்குப் பிரகாரத்தில் காசி விசுவநாதர் காட்சியளிக்கிறார். வடமேற்கில் உற்சவ மூர்த்தியாக இருக்கும் மணவிடைக் குமாரர் சன்னிதி அமைந்துள்ளது. இவரே நவராத்திரியின்போது திருவனந்தபுரத்துக்கும், மார்கழித் திருவிழாவின்போது சுசீந்திரத்துக்கும் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்பவர். வடக்குப் பிரகாரத்தின் இறுதியில் வள்ளி தெய்வானை சமேதராக ஷண்முகராக ஆறுமுக நயினார் விளங்குகிறார். ஆறுமுக நயினாரும் நடராஜரும் அடுத்தடுத்து தெற்கு நோக்கி காட்சி தருகின்றனர்.
தலவிருட்சத்துக்கும் தனி சன்னிதி
தலவிருட்சமான வேங்கை மரத்துக்கெனத் தனி சன்னிதி அமைந்துள்ள தலம் இதுவாகும். முருகன் வள்ளியை மணம்புரியவிருந்த நேரத்தில் வள்ளியின் உறவினர் தினைப்புனம் நோக்கித் திரண்டுவர, வேங்கைமரமாக முருகப் பெருமான் மாறினார். புதியதாக ஒரு மரம் நிற்கவே அதனை அவரது உறவினர் வெட்டி விட்டனர் என்பது சொல்லப்படுகிறது. வேங்கை மரத்தின் எஞ்சிய பகுதிக்கு வஸ்திரம் சார்த்தி தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஆட்டுத்தலையுடன் காட்சிதரும் தட்சனுக்கு இங்கு தனியாக கோவிலின் மேற்கு வாசல் அருகில் சன்னிதி அமைந்துள்ளது.
இக்கோயிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் வள்ளிக்குகை உள்ளது. அருகிலேயே விநாயகருக்கு ஒரு சிறுகோயில் உள்ளது. வள்ளிக் குகை அருகிலேயே தினைப்புனம், வள்ளிசோலை, வட்டச்சோலை, கிழவன் சோலை என்றழைக்கப்படும் இடங்கள் அமைந்து உள்ளன. வள்ளி நீராடிய சுனை அருகே பாறையில் விநாயகர், வேலவர், வள்ளி சிற்பங்கள் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் முதல் கந்த சஷ்டி விரதத்துக்குக் காப்புக் கட்டி ஆறாவது நாள் சூரசம்ஹாரம் நடைபெறும். திருக்கார்த்திகை தீபம் சொக்கப்பனை, கார்த்திகை கடைசி வெள்ளிக் காவடி, மார்கழி சுசீந்திரம் தேரோட்டத்துக்குச் செல்லுதல், தைப்பூசம் திருக்கல்யாண கால் நாட்டும், பங்குனி அனுஷ நட்சத்திரத்தில் இரவு திருக்கல்யாணமும் நடைபெறும். இந்தத் திருக்கல்யாணத்துக்கு முன்பு நடைபெறும் குறவர் படுகளம் தனிச்சிறப்புடையதாகும். இக்கோயிலில் பங்குனி மாதம் அனுஷ நட்சத்திர நாளில் ‘வள்ளி கல்யாணம்’ நடைபெறும்.
திருக்கல்யாண நாளில் காலையில் முருகப்பெருமான் மலைக்கு பல்லக்கில் எழுந்தருளி வள்ளிக் குகை அருகே உள்ள கல்யாண மண்டபம் செல்வார். வழியெங்கும் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள். தீபாராதனைக்குப்பின் கல்யாண மண்டபம், கோயிலைச் சுற்றியுள்ள சத்திரங்கள், மலைப்பாதைகள் எனப் பல இடங்களிலும் அன்னதானம், கஞ்சி தர்மம் நடக்கும்.
பிற்பகல் முருகன், வள்ளியைப் பல்லக்கில் அழைத்து வருவார்கள். அதைக் காணும் குறவர்கள், முருகனையும் வள்ளியையும் தடுத்து நிறுத்திப் போர் புரிவார்கள். குறவர் படுகளம் எனும் இந்நிகழ்ச்சி மலைப்பாதை வழிநெடுகிலும் நிகழ்த்தப்படுகிறது. இறுதியில் கோயிலின் பின்புற வாசலில் குறவர்கள் முருகப் பெருமானிடம் தோல்வியடைந்து சரணடைவார்கள். இந்நிகழ்ச்சியில் மலைப் பகுதியில் வாழும் குறவர் இனத்தவர்களே கலந்துகொள்கிறார்கள். அறுபடை வீடுகளில் இடம்பெறாமல், முருகப் பெருமானின் திருமண வைபோகத்தில் இடம்பிடித்து முருக பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது வேளிமலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT