Published : 17 Nov 2017 02:34 PM
Last Updated : 17 Nov 2017 02:34 PM
கார்த்திகை வந்துவிட்டாலே, ஐயப்ப சுவாமிக்கான பக்தர்களின் மாதம் துவங்கிவிடும். இதோ... இன்றைய தினம் ஐயப்ப மாதம் ஆரம்பித்து விட்டது. கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. இன்று ஏராளமான பக்தர்கள் மாலையணிந்து விரதம் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
கார்த்திகை முதல் தேதி மாலையணிந்ந்து, ஐயப்ப சுவாமிக்கு விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். ஒருமண்டல காலம் விரதம் இருந்த பிறகு, இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்குப் பயணமாக வேண்டும்.! ஆனால் இப்போது வேலை மற்றும் பல காரணங்களால், விரதம் இருந்த சில நாட்களிலேயே சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் அதிகரித்துவிட்டார்கள். இன்னும் சிலர், கார்த்திகை இன்று தொடங்கினாலும் கடந்த பத்துநாட்களுக்கு முன்பே, விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இதையொட்டி சென்னை முதலான பல ஊர்களிலும், காலையிலேயே ஆலயங்களில் குவியத் தொடங்கினார்கள் பக்தர்கள். தமிழகத்தில் பல மாவட்டங்களில், சமீபத்தில் மழை வெளுத்து வாங்கியதால், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை மாதப் பிறப்பு நாளில் குறையும் என நினைத்திருந்தார்கள் சிலர். ஆனால், மழையையும் மழை பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல், காலையிலேயே விரதம் இருக்கத் தொடங்கி விட்டார்கள் பக்தர்கள்.
இதையொட்டி, சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயம், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் முதலான ஆலயங்களில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து மாலையணிந்து கொண்டார்கள்.
மேலும், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில், மதுரையில் உள்ள ஐயப்பன் ஆலயம் மற்றும் பல கோயில்களிலும் மாலையணிந்து கொண்டு விரதத்தைத் துவக்கினார்கள் பக்தர்கள்.
கார்த்திகை மாதத்தையொட்டி இரண்டு நாட்களுக்கு முன்பே சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம் முதலான பல மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்கள் சிலர், கடந்த வாரமே விரதம் இருக்கத் துவங்கி, சபரிமலை ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க, இருமுடி கட்டிக் கொண்டு பயணமாகிவிட்டார்கள்.
தமிழகத்தில் பல ஆலயங்களில், ஐயப்ப சுவாமிக்கும் சந்நிதிகள் பெருமளவு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. ஆகவே அந்தந்தக் கோயில்களில், மாலை அணிந்து கொண்டார்கள் பக்தர்கள்.
இதேபோல், புதுச்சேரியிலும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்தனர். இன்று காலை புதுச்சேரி கோவிந்தசாலை, மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT