Published : 14 Nov 2017 04:15 PM
Last Updated : 14 Nov 2017 04:15 PM
தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில், நடராஜர் கோயில் எப்படியோ அதேபோல் வேறொரு இடத்தில், தனியே கோயில் கொண்டு, ராஜாங்கம் செய்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் காளி. இவளை தில்லைக் காளி என்றே அழைக்கின்றனர் பக்தர்கள்!
பக்தர்கள் மட்டுமின்றி, புராணத்தில் தொடர்பு கொண்ட காளி என்பதால், தில்லைக்காளி என்றே பெயர் அமைந்ததாகவும் சொல்வர். கடும் உக்கிரத்துடன் காட்சி தந்தாலும் தன்னை நாடி வருவோருக்கு அருளையும் பொருளையும் அள்ளித் தரும் அன்னை இவள் என்று போற்றுகின்றனர் பெண்கள்.
சிவபெருமானுக்கும் காளிதேவிக்கும் நடனப்போட்டி நடந்தது தெரியும்தானே. அந்தத் திருக்காளிதான் இவள். ஆடல்வல்லானாகவே இருந்தாலும், தன்னை ஏமாற்றி, போங்கு ஆட்டம் போட்டுவிட்டார் சிவனார் என கடும் உக்கிரத்துடன் இதே ஊரில் கோயில் கொண்டு, சக்தியாகிய தன்னைத் தேடி வருவோருக்கு நலம் பல செய்வேன் என சூளுரைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள்.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தில்லைக்காளியை வணங்கி வழிபடுவது கூடுதல் பலனைத் தரும். மாங்கல்ய பலம் தந்தருளும் என்பது ஐதீகம்!
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கே ராகு கால பூஜை விசேஷம். அதையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 வரையிலும் வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் ராகுகால பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.
அப்போது, ராகுகால வேளையில், தில்லைக்காளிக்கு எலுமிச்சை தீபமேற்றி, செவ்வரளி மாலை சார்த்தி பக்தர்கள்... குறிப்பாக பெண்கள் பிரார்த்தனை செய்வார்கள்!
பொதுவாகவே, ராகுகால வேளையில், அருகில் உள்ள அம்மன் கோயில்களிலோ, சிவாலயங்களில் உள்ள துர்கை சந்நிதியிலோ சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதில் கலந்துகொண்டு எலுமிச்சை தீபமோ அல்லது எள் தீபமோ ஏற்றி, அம்மனை வழிபடுவது விசேஷம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT