Published : 10 Nov 2017 11:06 AM
Last Updated : 10 Nov 2017 11:06 AM
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, பேரளத்துக்கு அருகில் உள்ளது திருமீயச்சூர் திருத்தலம். இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாம்புரம் கோயில். ஞானசம்பந்தர் பெருமான் இயற்றியுள்ள திருப்பாம்புரம் தலத்திற்கான பதிகத்தைப் பாடினால், ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர ஸ்தான தோஷம் முதலானவை நீங்கும் என்கிறார்கள் சிவனடியார்கள்.
இந்தப் பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
’இந்த செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராக, செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர்’ என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் நிறைவில் சிலாகித்துப் போற்றுகிறார்.
இந்தப் பதிகங்களை ஆத்மார்த்தமாகப் பாடுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது உறுதி!
1. சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்
திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்
மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்
கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னக ராரே.
2. கொக்கிற கோடு கூவிள மத்தங்
கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக
அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே.
3. துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
பித்தராய்த் திரியுமெம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே.
4. துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்
சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்
நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட
மாடமா ளிகைதன்மே லேறி
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
பாம்புர நன்னக ராரே.
5. நதியத னயலே நகுதலை மாலை
நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக்
கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி
செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னக ராரே.
6. ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்
ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல்
மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய
அலைகடல் கடையவன் றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர்
பாம்புர நன்னக ராரே.
7. மாலினுக் கன்று சக்கர மீந்து
மலரவற் கொருமுக மொழித்து
ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி
அனலது ஆடுமெம் மடிகள்
காலனைக் காய்ந்து தங்கழ லடியாற்
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள்
பாம்புர நன்னக ராரே.
8. விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
மெல்லிய திருவிர லூன்றி
அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்
அனலது ஆடுமெம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட
வந்திழி அரிசிலின் கரைமேற்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
பாம்புர நன்னக ராரே.
9. கடிபடு கமலத் தயனொடு மாலுங்
காதலோ டடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்
தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடையமரர் முனிகணத் தவர்கள்
முறைமுறை யடிபணிந் தேத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னக ராரே.
10. குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்
குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்
கையர்தாம் உள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னக ராரே.
11. பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக்
கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்
சிவனடி நண்ணுவர் தாமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT