Published : 30 Nov 2017 11:21 AM
Last Updated : 30 Nov 2017 11:21 AM
த
மிழர்கள் கொண்டாடிய புராதனப் பண்டிகைகளில் ஒன்று திருக்கார்த்திகை. கார்த்திகை மாதம் பௌர்ணமியில் அனுசரிக்கப்படும் இந்தப் பண்டிகை குறித்து, ‘மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்’ என்று அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்த்திகை நட்சத்திரங்கள் ஆறைத்தான் அறுமீன் என்கிறார்கள்.
அவ்வையார் கவிதைகளிலும் இத்திருநாள் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதி ஒளிப்பிழம்பாய், சிவன் காட்சியளித்த நாள் கார்த்திகை பௌர்ணமியாகும். ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்புக்குத் தலமாக விளங்கும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளின் பிரதான அடையாளமாக விளங்குகிறது. பார்வதிதேவி, தவமிருந்து சிவனின் இடப்பாகத்தில் இடம்பெற்ற நாளும் இதுதான். சிவன் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது புராணம்.
ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி குடிசைகளிலிருந்து கோபுரங்கள் வரை சாயங்காலமானால் தமிழகமே வெளிச்சக் கோலம் பூணும் மாதம் கார்த்திகை மாதமாகும். தீபாவளி பிரபலப் பண்டிகையாகக் கொண்டாடப்படுவதற்கு முன்பே தீப ஒளிப் பண்டிகையாக இது இருந்துள்ளது. சொக்கப்பனை, சூந்து, நெல்பொறி, மாவிளக்கு எனக் குழந்தைகள், சிறுவர்களின் பால்ய நினைவுகளிலும் திருக்கார்த்திகைக் கொண்டாட்டம் நீங்காத இடம்பிடித்துள்ளது.
கார்த்திகைத் திருநாள் அன்று மதியமே வீடுகள் கழுவப்பட்டு, கதவுகள் வரை சுத்தம் செய்யப்படும். அரிசி மாவைக் கரைத்துத் தரையில் கம்பிக் கோலங்கள் வரையப்பட்ட இருட்டான அறைகள்கூட வெளிச்சம் பெறும். தென்மாவட்டங்களில் கதவுகளில் குழந்தைகளின் கைகளை வைத்து அச்சுகளும் வைப்பார்கள்.
மனிதர்கள் மட்டுமின்றி புழு, பறவை, மரம், நீர்வாழ் பிராணிகள் என எதன் மீது கார்த்திகை தீப ஒளியின் பிரகாசம் படுகிறதோ, அதேபோல நமது அன்பும் அக ஒளியோடு அனைத்தின் மீதும் படர வேண்டும் என்பதை வலியுறுத்துவதே கார்த்திகை.
திருவண்ணாமலையில் இன்றும் அண்ணாமலை தீபம் பிரம்மாண்டமாக ஏற்றப்படுவது அந்த அர்த்தத்தில் தான். கார்த்திகை அகல் தீபங்கள் நமது இதயங்களிலும் சுடர் ஏற்றட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT