Published : 22 Jul 2023 10:04 PM
Last Updated : 22 Jul 2023 10:04 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை (ஜுலை 22) நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவங்களில் ‘ஆடிப்பூரம்’ பிரம்மோற்சவம் சிறப்புமிக்கது. ஆடிப்பூரம் பிரம்மோற்சவத்தில் ‘பராசக்தி’ அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் மற்றும் வீதியுலா, உண்ணாமுலையம்மன் சன்னதி முன்பு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இதையொட்டி, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் பஞ்சமி திதி, பூரம் நட்சத்திரம், கடக லக்கினத்தில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று (ஜுலை 22) காலை நடைபெற்றது.
கொடி மரம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருள, மங்கல இசை முழங்க, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா என முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. அதன்பிறகு, பராசக்தி அம்மனின் வீதியுலா நடைபெற்றது. மேலும், உண்ணாமுலையம்மன் சன்னதி முன்பு நள்ளிரவில் தீமிதி விழா நடைபெற உள்ளன. விரதம் இருந்த பக்தர்கள், தீமிதித்து நேர்த்தி கடனை செலுத்த உள்ளனர்.
ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழாவின் 10 நாளில் வளைகாப்பு உற்சவம் மற்றும் தீமிதி விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, கொடியேற்றம் நடைபெற்ற முதல் நாளிலேயே வளைகாப்பு உற்சவம் மற்றும் தீமிதி விழா நடைபெற்றுள்ளது. இதுபோன்ற நிகழ்வு, 10 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வளைகாப்பு உற்சவம் மற்றும் தீமிதி விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழாவில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதியில் காலை மற்றும் இரவில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் நிறைவாக வரும் 31-ம் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment