Published : 22 Jul 2023 03:08 PM
Last Updated : 22 Jul 2023 03:08 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: 'கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்' என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதார நாளான இன்று (ஜூலை 22) திருஆடிப்பூர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 'கோவிந்தா கோபாலா' கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வராக சேத்திரம் என அழைக்கப்படுகிறது. இங்கு மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரிய ஆள்வாரின் அவதார தினமான ஆணி சுவாதி திருவிழா மற்றும் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கொடியேற்றம்: தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஆடிப்பூர தேரோட்டம் கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் நாள் விழாவான செவ்வாய்கிழமை காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னார், திருவண்ணாமலை ஶ்ரீனிவாசபெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜபெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் 5 கருட சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7-ம் நாள் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவை உற்சவம் நடைபெற்றது.
ரெங்கநாதர், கள்ளழகர் உடுத்திய பட்டு வஸ்திரம்: தேரோட்டத்தின்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் மதுரை கள்ளழகர் கோயில் சுந்தரராஜபெருமாள் உடுத்தி கலைந்த பட்டு வஸ்திரம், பூமாலை மற்றும் மங்கல பொருட்கள் நேற்று ஶ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தது. நேற்று இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி. வீதி உலா வந்தனர். நேற்று இரவு தேர் கடாட்சித்தல் வைபவம் நடைபெற்றது.
இன்று காலை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. கண்ணாடி மாளிகையில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பின் மஞ்சள் பட்டு உடுத்தி ஆண்டாள், நீல பட்டு உடுத்தி ரெங்கமன்னார் தனித்தனி தோளுக்கினியானியில் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாளுக்கு ஶ்ரீரங்கம், மதுரையில் இருந்து வந்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
காலை 8:05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட போக்சோ நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், எம்.எல்.ஏக்கள் சீனிவாசன், மான்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, நகராட்சி தலைவர் ரவிகண்ணன், ஒன்றிய குழு தலைவர்கள் ஆறுமுகம், சிந்து முருகன், சிவகாசி மேயர் சங்கீதா, டி.ஆர்.ஓ ரவிக்குமார், ஆர்.டி.ஓ விஸ்வநாதன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 7 வடங்களையும் பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக தேரை இழுத்தனர்.
தேருக்கு பின்னால் இரு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10:15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. தேரில் இருந்த ஆண்டாள் ரெங்கமன்னாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பின் ஶ்ரீ ஆண்டாள் அவதார ஸ்தலமான நந்தவனத்தில் ஆண்டாள் ரெங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
டி.ஐ.ஜி பொன்னி, எஸ்.பி ஶ்ரீனிவாசபெருமாள் ஆகியோர் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT