Published : 13 Nov 2017 10:31 AM
Last Updated : 13 Nov 2017 10:31 AM
ஐப்பசி மாதம், அற்புதமான மாதம். இந்த ஐப்பசியில்தான் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களிலும் விமரிசையாக அன்னாபிஷேகம் நடந்து, பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும். தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் விமரிசையாக நடைபெற்ற அன்னாபிஷேகத்தைக் கண்ணாரத் தரிசித்திருப்போம்.
அதேபோல், ஐப்பசியில் திருக்கல்யாண வைபவமும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். நெல்லையப்பர், கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள், சிதம்பரம் நடராஜர் கோயில் முதலான பெரும்பான்மையான கோயில்களில், சிவ பார்வதி திருமண விழா, தினமும் காலை மாலை இரண்டு வேளை உத்ஸவம், சிறப்பு பூஜைகள் என அமர்க்களப்படும்.
கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாகவோ பனிரெண்டு நாள் விழாவாகவோ நடைபெறும் இந்த திருக்கல்யாண விழாவும் ஐப்பசியின் உன்னதமான விழாக்களில் ஒன்று. இப்போது, இந்த ஐப்பசி திருக்கல்யாண உத்ஸவங்கள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், பிறையை, சந்திரனை தன் சிரசின் மேல் அணிந்த சிவபெருமானுக்கு சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமை, விசேஷ வழிபாடுகள் நடைபெறும். ஐப்பசி சோமவாரத்தில் சிவபெருமானைத் தரிசனம் செய்வது, மனதில் தெளிவையும் மகோன்னதமான வாழ்வையும் தரும் என்பார்கள் சிவாச்சார்யர்கள்.
இந்த ஐப்பசி மாதத்தின் கடைசி சோம வாரம் இன்று. இந்த நாளில் (13.11.17) சிவாலயங்களுக்குச் சென்று, ஒரு கையளவு வில்வம் தந்து, சிவ தரிசனம் செய்வது ரொம்பவே விசேஷம். காலையும் மாலையும் ஈசனுக்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்வது இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் நற்பலன்களை வழங்கும்.
இந்த ஐப்பசி நிறைவு சோமவாரத்தில் தென்னாடுடைய சிவனாரை வணங்குவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT