Last Updated : 16 Nov, 2017 02:03 PM

 

Published : 16 Nov 2017 02:03 PM
Last Updated : 16 Nov 2017 02:03 PM

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!

''நிறைய தண்ணீர் பாயும் குளங்களுடனும் அழகான நந்தவனங்களுடனும் கோயில்களைக் கட்ட வேண்டும். ஒருவருக்கு புகழும் புண்ணியமும் கிட்ட வேண்டுமானால் கோயில் கட்ட வேண்டும். யாகம் செய்வோர், கிணறு வெட்டுவோர் ஆகியோருக்குக் கிடைக்கும் புகழ் கோயில் கட்டுவோருக்குக் கிடைக்கும். ஆற்றங்கரை, கடற்கரை, காடு, மலை, வனாந்தரம் ஆகிய இயற்கைச் சூழலில் கோயில் அமைவது மிகவும் விசேஷம்'' என்கிறார் அப்பர் பெருமான்.

செவ்வாய், வெள்ளி என்றாலோ, பிறந்த நாள், கல்யாண நாள் காலங்களிலோ கோயிலுக்குப் போய்விடுகிறோம். சுவாமி தரிசனம் செய்கிறோம். தஞ்சாவூர் பக்கம் கல்யாணம் காட்சி என்று சென்றால், பெரிய கோயிலையும் கும்பேஸ்வரரையும் திருநாகேஸ்வரத்தையும் தரிசனம் செய்துவிடுகிறோம்.

மதுரையில் விழா ஏதேனும் என்றால், மீனாட்சியம்மன், இம்மையில் நன்மை தருவார், ஆனைமலை நரசிம்மர், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் என்று ஒரு சுற்று போய் தரிசிக்கிறோம். நெல்லைப் பக்கம், ஈரோடு, கோயம்புத்தூர் பக்கம் என்றெல்லாம் போகும் போதோ... அல்லது தரிசிப்பதற்காகவோ அந்தப் பக்க ஆலயங்களைத் தரிசித்து விடுகிறோம்.

ஆனால், கோயில்களின் உன்னதத்தையும் தொன்மையையும் வித்தியாசங்களையும் வகைகளையும் அப்பர்பெருமான் வகைப்படுத்தி சிலாகித்துள்ளார்.

கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக் கோயில், திருக்கோயில் என ஏழு வகையான ஆலயங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் அமைந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சை பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோயில் கோபுரங்கள் எல்லாம் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்தவை.

பிள்ளையார்பட்டி, மகாபலிபுரம், திருப்பரங்குன்றம், நரசிங்கம் எனப்படும் மதுரை ஒத்தக்கடை முதலிய ஊர்களில் மலைகளில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில்களும் ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டே உள்ளன.

அப்படியானால் அதற்கு முன் எந்த மாதிரியான ஆலயங்கள் அமைக்கப்பட்டன?

சிலப்பதிகாரம், புறநானூறு, பரிபாடல் முதலிய நூல்களில் என்ன என்ன கோயில்கள் இருந்தன என்று கடவுளரின் பெயர்கள் குறிப்பிட்டு, விரிவாக சொல்லப்பட்டுள்ளன.

அப்பர் பெருமான் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர் தமிழிலும், வராஹமிகிரர் சமஸ்கிருதத்திலும் அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அப்பர் பெருமான் பாடிய தேவாரத்தில் கரக்கோயில், இளங்கோயில்,கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் என்று பலவகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார்.

தொல்லியல் துறையின் அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி தமிழில் கோயில் என்பதற்கு பழங்காலத்திலேயே பல சொற்கள் இருந்ததையும் பட்டியலிட்டுள்ளார். 'கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கந்த சருக்கரையும் மெழுகும் என்றயிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும்' என்று விளக்குகிறார்.

அதாவது தெய்வத் திருமேனிகளைச் செய்ய இந்தப் பத்துப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கோயில்கள் மரம் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டன. அவை எல்லாம் பருவமழை, வெயில் போன்ற காலநிலையாலும், படையெடுப்புகளாலும் அழிக்கப்பட்டன. இன்றும் கூட கேரளம் முதலிய மாநிலங்களில் மரக் கோயில்கள் இருப்பதைக் காணலாம்.

'பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும் கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில், கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில், இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து, தாழ்ந்து, இரைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே' என்று அப்பர் பெருமான், தேவாரம் ஆறாம் திருமுறையில் விவரிக்கிறார் என்கிறார்கள் சிவனடியார்கள்.

அப்பர் குறிப்பிடும் பலவகைக் கோயில்கள் என்ன என்று கூட நமக்குத் தெரியாது. அவர் காலத்தில் சிவபெருமானுக்கு 78 பெரிய கோயில்களும் மற்ற பல வகைக் கோயில்களும் இருந்தது தெரிகிறது. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் 300-க்கும் மேலான புனிதத் தலங்களின் பெயர்களைத் தெரிவிக்கிறார்கள்.

அப்பர் பெருமான் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த வராஹமிஹிரர் எழுதிய 'பிருஹத் சம்ஹிதா’ எனும் சம்ஸ்கிருத நூலில், 20 வகைக் கோயில்களைக் குறிப்பிடுகிறார். வெறுமனே பெயர்களை மட்டும் சொல்லாமல் அவற்றின் நீள, அகலம், கருவறையின் (கர்ப்பக் கிரகம்) அளவு ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.

ஒரு அத்தியாயம் முழுவதும் கோயில் பற்றி எழுதிவிட்டு மிகவும் அடக்கத்துடன் கார்கர் என்பவர் விரிவாக எழுதிய விஷயத்தை தாம் சுருக்கமாகச் சொல்லியதாக தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறார்.

2000 ஆண்டுகளுக்கு முன்னரே பலவகை வடிவங்களில், உயரங்களில் கோபுரங்களை எழுப்பும் மாபெரும் பொறியாளர்கள் இமயம் முதல் குமரி வரை இருந்திருக்கிறார்கள், பல சிற்ப நுட்பங்களை, கோயில்களை வித்தைக் காட்டியிருக்கிறார்கள் என்பதை நினைக்கவே சிலிர்க்கிறது மனம்! .

அடுத்த முறை... எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அதன் நுட்பத்தை, சிற்பத்தை, தூண்களை, மண்டபங்களையும் கூர்ந்து கவனிப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x