Published : 25 Nov 2017 09:13 AM
Last Updated : 25 Nov 2017 09:13 AM
"மலைக்குச் செல்ல மாலை போடுவது என்பது சாதாரணமானது அல்ல. மன்னருக்கு கிரீடம் எப்படியோ, முத்திரைக் கணையாழி எப்படி தனி அடையாளமோ, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் அடையாளம்... நாம் அணியும் மாலைதான். நாம் மாலையை எப்போது போட்டுக்கொள்கிறோமோ, அப்போதே மாலையுடன் சேர்ந்து ஐயப்பனும் நம்மோடு இருக்கத் துவங்கிவிடுகிறார்.
ஆக, மாலை வடிவில் சாட்ஷாத் ஐயப்பனே நம்முடன் இருக்கிறார் என்பதை, பக்தர்கள் உணரவேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தான் ஐயப்பனும் சாப்பிடுகிறார். இதையெல்லாம் சரியாகப் புரிந்து, உணர்ந்து நடந்தால், கெட்ட எண்ணங்கள் நமக்குள் வராது. துர்குணங்கள் அடியோடு ஒழிந்துவிடும்.
இன்னொரு விஷயம்... முதல் முறை உபயோகித்த மாலையையே ஒவ்வொரு வருடமும் பயன்படுத்துங்கள். ‘மாலை அறுந்துருச்சே... என்ன செய்றது’ என்று கேட்கிறார்கள் சிலர். அதையே சரிசெய்து, போட்டுக்கொள்ளுங்கள். அந்த மாலையில் சாந்நித்தியமானது குடிகொண்டிருக்கிறது. அது... ஐயப்பனின் சாந்நித்தியம்’’ என்று தெரிவித்துள்ளார் நம்பியார் குருசாமி.
சில சூட்சும சக்திகளை நாம் உணருவதே இல்லை. ஐயப்ப விரதத்துக்காக நாம் அணிந்துகொள்ளும் அந்த துளசி மாலையில், சூட்சும ரூபமாய் ஐயப்ப சுவாமி உட்கார்ந்து கொள்கிறார். அவர் நம் பேச்சைக் கேட்கிறார். நம் செயல்களைப் பார்க்கிறார். நம் குணங்களை முழுவதுமாகப் புரிந்து கொள்கிறார். நம் கஷ்டங்களையும் துக்கங்களையும் அறிந்து கொள்கிறார். அவற்றில் இருந்து அரணென நம்மைக் காத்து, காபந்து செய்து அருள்கிறார்.
கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் என்கிற சாமி அண்ணாவுக்கு, தன் சூட்சுமத்தை உணர்த்த திருவுளம் கொண்டார் ஐயப்ப சுவாமி. அவர் தம்பி, தீவிர ஐயப்ப பக்தர். இவரும் பக்திமான்தான். ஆனால்... ஒருநாள்... அண்ணனுக்கும் தம்பிக்கும் ஏதோவொரு சண்டை. இரண்டுபேரும் வார்த்தையால் முட்டிக்கொண்டார்கள்.
வார்த்தைகள் தடித்துக் கொண்டே வந்து விழுந்தன. அப்படி தீவிரமடைந்த போது, சாமி அண்ணா, கோபமாகவும் ஆவேசமாகவும் தம்பியிடம்... ‘‘பதில் சொல்லு. இதுக்கு உனக்கு பதில் தெரியலேன்னா, உன் ஐயப்பனாவது பதில் சொல்லுவானா. அவனுக்காவது பதில் தெரியுமா?’’ என்று கேட்டார். ஆனால் தம்பி இதற்கு பதிலேதும் சொல்லவில்லை. ஐயப்ப சுவாமிதான் பதில் சொன்னார்.
அதுவும் எப்படி?
அன்றிரவு... சாமி அண்ணாவின் கனவில் ஐயப்பன் தோன்றினான். ‘மலையேறி வா’ என்று அசரீரி போல் கேட்க... திடுக்கிட்டு எழுந்தார். ‘மலையேறி வா...’ எனும் வாசகம் திரும்பத் திரும்ப எதிரொலித்தது. வேதங்களையும் யோக சாதகங்களையும் கற்றறிந்த சாமி அண்ணாவால், இந்த அழைப்பை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.
வாழ்வில், முதன்முறையாக சபரிமலை யாத்திரையை மேற்கொண்டார் சாமி அண்ணா.
சத்தியம்தான் கடவுள். சத்தியம்தான் பக்தி. சத்தியம்தான் மனிதம். சத்தியம்தான் உலகம். சத்தியம்தான் வாழ்க்கை. சத்தியத்தை உணர, மார்க்கங்கள் பல உண்டு. நிதர்சனமான அந்தச் சத்தியத்தை, சந்நிதானத்தில் தரிசித்தார் சாமி அண்ணா. ஐயனைக் கண்டதும் நெக்குருகிப் போனார். நெகிழ்ந்து போனார். அவரிடம் இருந்த கொஞ்சநஞ்ச கோபமும் ஆவேசமும் அவரில் இருந்து, கரைந்து, வழிந்து, திரவக்கரைசலென அவரை விட்டு அகன்றது. அந்த ஐயப்ப தரிசனம்தான் அவரை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றது.
‘இனி நீயே என் தெய்வம்’ என்று சொல்லிச் சொல்லி உருகினார். ‘உன்னைத் தரிசிக்க வருவதே என் வேலை’ என்று சொல்லிப் பூரித்தார். ‘உனக்குத் தொண்டு செய்வதற்காகவே இந்த வாழ்க்கை; இந்தப் பிறவி’ என உறுதி கொண்டார்.
கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் எனும் மனிதருக்கு, ஞானம் கிடைத்த தருணம் அது. கடவுளே வந்து, கடவுளாகிய தன்னைக் காட்டிய நிகழ்வு அது. மகாபுருஷர்களின் துணையும் தொடர்பும் கடவுள் தரிசனத்தைக் காட்டும் என்பார்கள். ஆனால் கடவுள் தரிசனத்தை அடுத்து, அவருக்கு பல மகாபுருஷர்கள் கிடைத்தார்கள். சத்விஷயங்கள், வரிசைகட்டி வந்துகொண்டே இருந்தன. அது... அவை... அவரை இன்னும் இன்னுமாகச் செம்மைப்படுத்திக் கொண்டே இருந்தன.
வீடு, வியாபாரம், கடை, லாபம், குடும்பம், வளர்ச்சி என்றே ஓடிக்கொண்டிருந்த சாமி அண்ணாவின் வாழ்வில், சபரிமலையும் சாஸ்தாவும் யாத்திரையும் முக்கியப் பணியாக மாறியிருந்தது. சேர, மகர, மண்டல காலத்தில் மட்டும்தான் சபரிமலை யாத்திரை என்றில்லாமல் நடை திறக்கும்போதெல்லாம் மலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டார்.
பாலக்காட்டின் முதன்மையான துணிக்கடை ஸ்ரீநிவாச ஐயருடயது தான். கடையில் வியாபாரம் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும்; திடீரென இவர் மனதில் “வா” என்ற குரல் கேட்கும். அவ்வளவுதான்... அப்படியே மலைக்கு கிளம்பி விடுவார். அதுதான் சபரிமலையின் மாயாஜாலம்.
இப்படித்தான் ஒருமுறை... அது நடந்தது.
சபரிமலையில் ஒரு சமயம், மாத பூஜை நடந்து கொண்டிருந்தது. அந்த மாதத்து பூஜைகள் எல்லாம் முடிந்து எல்லோரும் ஹரிவராஸனத்துக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
மேல்சாந்தி, நடையை அடைக்க தந்த்ரியின் அனுமதிக்காகக் காத்திருந்தார். தந்த்ரியோ “கொஞ்சம் காத்திருப்போம்“ என்றார்.
எல்லோருக்கும் ஆச்சரியம். ‘இதென்ன புதுசா இருக்கே’ என்று யோசித்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
மலையில் இருந்ததே மிகக் குறைவானவர்கள்தான். ஆனாலும் ஏனிந்தத் தாமதம்... எதற்காக இந்தக் காத்திருப்பு. புரியாமல் தவித்தார்கள் அனைவரும். எல்லோரும் தந்த்ரியையேப் பார்த்தார்கள்.
“வர வேண்டிய ஒரு ஆள் இன்னும் வரவில்லை” என்று தந்திரி சொன்னார். மணி பதினொன்றரையும் ஆகிவிட்டது. ஆனால் அவர் அசைந்து கொடுக்கவே இல்லை. காத்திருப்பதில் எந்தச் சலிப்போ பதட்டமோ அவரிடம் இல்லை.
“என் மனதுக்குள் ஒரு குரல்... நடையை அடைக்க என்னை சம்மதிக்க விடவில்லை. ஒருவேளை ஐயப்பன் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் போல!” என்றார்.
இனிமேல் யார் வரப்போகிறார்கள் என்று எல்லோரும் சலசலப்புடன் முணுமுணுத்தபடியே காத்திருந்தார்கள்.
மணி 11.40. ஸ்ரீநிவாஸ ஐயர் பரபரப்பாக ஓடி வந்தார். பதினெட்டாம்படியை ஏறினார். கடந்தார். (வரும் வழியில் அவர் கார் ரிப்பேர் ஆனதால் தாமதமாகி இருக்கிறது). சந்நிதிக்கு வந்தார். ஐயப்பனைத் தரிசித்தார். கண்கள் மூடிப் பிரார்த்தித்தார்.
அப்போது தந்த்ரி... மேல்சாந்தியிடம் சைகையாலேயே சொன்னார்... “ஹரிவராஸனம் துவங்கலாம்“ என்று!
தந்த்ரி சைகை காட்டினார். மலையில் இருந்த மொத்த ஐயப்பன்மார்களும் புரிந்து கொண்டு, ‘ஸ்வாமியே சரணம் ஐயப்பா’ என்று விண்ணதிர சரண கோஷம் எழுப்பினார்கள்.
கரகரவென கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட யோசனையில்லாமல், ஐயப்பனையே மெய்யுருகத் தரிசித்துக் கொண்டிருந்தார் சாமி அண்ணா!
சுவாமியே சரணம் ஐயப்பா!
-ஐயன் வருவான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT