Published : 09 Nov 2017 10:12 AM
Last Updated : 09 Nov 2017 10:12 AM
உ
லகின் அனைத்து மொழிகளிலும் அணிநயம் எனும் மொழிக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாகக் கவிதையிலும் இசைப் பாடல்களிலும் போதனைகளிலும் படைப்பாளியின் கற்பனை மற்றும் மனதின் விசாலத் தன்மைக்கு ஏற்ப அவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இறைமகன் இயேசுவைப் பொறுத்தவரை பல அணிகளைத் தனது போதனைகள், உவமைக் கதைகளில் பயன்படுத்தியிருக்கிறார்.
எதையும் மிகையாகக் கூறாமல் உள்ளதை உள்ளவாறு கூறும் இயல்பு நவிற்சி அணியைப் பயன்படுத்துவதில் இயேசு தலைசிறந்து விளங்கினார். அதனால்தான் இயேசுவின் பேச்சு எளிய மக்களுக்கு அத்தனை ஆதர்சமாக இருந்துள்ளது. இயேசுவின் உவமைக் கதைகள் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை உருவாக்குபவை.
இயேசுவின் புகழ்பெற்றதும் முதன்மையான போதனைகளில் ஒன்றாகவும் பைபிள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்படுவது ‘மலைப் பிரசங்கம்’. இயேசுவின் 12 முதன்மைச் சீடர்களில் ஒருவரான மத்தேயு எழுதிய நற்செய்தி புத்தகத்தில் அதிகாரம் 5 முதல் 7 வரையில் இயேசுவின் ‘மலைப் பிரசங்கம்’ இடம்பெற்றுள்ளது. பல்வேறு கிறிஸ்தவ மதப்பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடவுளாகிய யகோவா அளித்த பத்துக் கட்டளைகளுக்கு இயேசு அளித்த விரிவான விளக்கமாக அவரது மலைப் பிரசங்கத்தைக் கருதுகிறார்கள். இதனால் கிறிஸ்தவத்தின் அடிப்படையான ஆன்மிக நம்பிக்கைகளை இயேசுவின் மலைப் பிரசங்கம் பெற்றிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
குன்றின் மீது அமர்ந்த நாயகன்
இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது, மலைக்குன்றின்மேல் ஏறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து சீடர்கள் அவர் அருகில் வந்து அமர்ந்தனர். இப்போது, பாறை இடுக்குகளிலிருந்து புறப்பட்டுவரும் நீரூற்றைப் போல அவர் போதனைகளைப் பொழியத் தொடங்கினார்.
“ஆன்மிக விஷயங்களில் பசியோடு இருக்கிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது. துக்கப்படுகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள், அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும். நீதியின் மேல் பசி,தாகமுள்ளவர்கள் மகிழ்ச்சியானவர்கள்; அவர்களுக்கு நீதி கிடைக்கும். இரக்கம் காட்டுகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள், ஏனென்றால், அவர்களுக்கு இரக்கம் கிடைக்கும். சமாதானத்தை விரும்புகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள் ஏனென்றால், அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள். நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.
நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பு அதன் சுவையை இழந்தால், அதற்கு எப்படி மீண்டும் சுவை சேர்க்க முடியும்? வீட்டுக்கு வெளியே கொட்டப்பட்டு, மனிதர்களால் மிதிக்கப்படுமே தவிர வேறு எதற்கும் அது உதவாது. நீங்கள் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கிற நகரம் மறைந்திருக்க முடியாது.
மக்கள் விளக்கைக் கொளுத்தி அதைக் கூடையால் மூடி வைக்க மாட்டார்கள், விளக்குத்தண்டின் மேல்தான் வைப்பார்கள்; அப்போது, வீட்டிலிருக்கிற எல்லாருக்கும் அது வெளிச்சம் தரும். அதைப் போலவே, உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள், அப்போது, உங்களுடைய நல்ல செயல்களைக் கண்டு, பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.”
கொலையும் துரோகமும்
“கொலை செய்யக் கூடாது. கொலை செய்கிற எவனும் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். தந்தையின் ஆலயத்துக்கு வந்து அங்கே உங்கள் நன்றியைப் பலியாகச் செலுத்த வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மேல் ஏதாவது மனவருத்தம் இருப்பது நினைவுக்கு வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்துக்கு முன்னால் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
உங்கள்மேல் ஒருவன் வழக்கு போட்டால், நீதிமன்றத்துக்குப் போகும் வழியிலேயே அவனோடு சீக்கிரமாகச் சமாதானம் செய்துகொள்ளுங்கள்; இல்லையென்றால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான், நீதிபதி உங்களைக் காவலாளியிடம் ஒப்படைப்பார், பின்பு நீங்கள் சிறையில் தள்ளப்படுவீர்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அங்கிருந்து வரும்போது சல்லிக்காசுகூட உங்கள் கையில் மிஞ்சாது.
உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணை இச்சை உணர்வோடு பார்ப்பவன் அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான்.
நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாம். உங்கள் தலையில் இருக்கிற ஒரு முடியைக்கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ முடியாது. நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும். இதற்கு மிஞ்சிச் சொல்லப்படும் எதுவும் பொல்லாதவனிடமிருந்தே வருகிறது.”
பழிக்குப் பழி தீர்வல்ல
“‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் நான் சொல்கிறேன், அக்கிரமக்காரனோடு சண்டைக்கு நிற்காதீர்கள்; யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டுங்கள். ஒருவன் உங்கள்மேல் வழக்கு போட்டு உங்கள் உள்ளங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், உங்கள் மேலங்கியையும் அவனுக்குக் கொடுத்துவிடுங்கள். அதிகாரத்தில் இருக்கிற ஒருவர் ஏதோவொரு வேலைக்காக ஒரு மைல் தூரம் வரச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்தினால், அவருடன் இரண்டு மைல் தூரம் போங்கள்.
உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க வருகிறவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளாதீர்கள். எதிரியை வெறுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது, உங்களுடைய பரலோகத் தந்தைக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள். ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்கவைக்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழையைப் பெய்ய வைக்கிறார்.
உங்கள்மேல் அன்பு காட்டுகிறவர்களிடம் மட்டுமே நீங்கள் அன்பு காட்டினால், அதனால் என்ன பயன்? வரி வசூலிப்பவர்களும் அப்படித்தானே செய்கிறார்கள்? உங்கள் சகோதரர்களுக்கு மட்டுமே வாழ்த்துச் சொன்னால் அதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? உலக மக்களும் அப்படித்தானே செய்கிறார்கள்? அதனால், உங்கள் பரலோகத் தந்தை பரிபூரணராக இருப்பது போலவே நீங்களும் பரிபூரணராக இருக்க வேண்டும்” என்று நீண்ட போதனைகளைப் பொழிந்தார்.
(உவமைகள் பெருகும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT