Published : 19 Jul 2023 04:07 AM
Last Updated : 19 Jul 2023 04:07 AM
சின்னமனூர்: தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வரும் 22-ம் தேதி ஆடிப் பெருந்திருவிழா தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தேனியில் இருந்து 19 கி.மீ.தொலைவில் உள்ளது குச்சனூர். இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ளார். ரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால் நெற்றியில் திருநாமம் தரித்தும், ஈஸ்வர பட்டமும் பெற்றுள்ளதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார். முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகி யோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என் பதால் இங்கு மூலவர் ஆறு கண் களுடன் காட்சி அளிக்கிறார்.
இக்கோயில் திருவிழா ஒவ்வொரு ஆடி மாத சனிக் கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் சனி வார திருவிழாவன்று காலை 11 மணிக்கு கலிப்பனம் கழிக்கப்படும். பின்பு கோயில் வளாகத்தைச் சுற்றிலும் சுத்தநீர் தெளித்து வழிபாடு நடைபெறும். பூலாநந்தபுரம் ராஜகம் பளத்தார் திருவிழாவுக்கான சகுனம் பார்ப்பர்.
அப்போது காகம் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பறந்து செல்வது சுவாமி உத்தரவாக எடுத்துக் கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு கோயில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கும். அன்றும், ஒவ்வொரு ஆடி மாத சனிக்கிழமைகளிலும் இரவு 9.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆக.4-ம் தேதி பகல் 12.30 மணிக்கு சிறப்பு நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் நடை பெற உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு சனிதோறும் சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாத்துப்படி, சுவாமி புறப்பாடு, ஆக.7-ம் தேதி மாலை 6 மணிக்கு லாடசித்தர் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆக.19-ம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடையும்.
விழாவை முன்னிட்டு கோயில் முன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வரிசையாகச் சென்று நெரிசலின்றி வெளியேறும் வகையில் தனிப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருவிழாக் காலங்களில் மதுரை, திண்டுக்கல், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT