Published : 20 Nov 2017 11:02 AM
Last Updated : 20 Nov 2017 11:02 AM
சிவ வழிபாடுகள் நிறையவே இருக்கின்றன. தென்னாடுடைய சிவனைப் போற்றிக் கொண்டாட, மாத சிவராத்திரி முதல் மகா சிவராத்திரி வரை எத்தனையோ விழாக்களும் வைபவங்களும் இருக்கின்றன. இவற்றில் கார்த்திகை சோம வாரம் மிக மிக அற்புதமான நாள் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள். சோம வாரம் என்றால் திங்கட்கிழமை. திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். அந்தச் சந்திரனையே பிறையென சிரசில் அணிந்திருப்பவன், ஈசன். சந்திரனை மனோகாரகன் என்று சொல்வார்கள். அதாவது நம் மனது சோகமாக இருப்பதற்கும் உத்வேகத்துடன் திகழ்வதற்கும் அவனே காரணம். சந்திர பலமே வெகு முக்கியம்.
ஆக, சந்திர பலம் கிடைக்க வேண்டுமெனில், கார்த்திகை சோம வாரத்தில் வழிபாடு மிகுந்த பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.
ஷயரோகத்தில், துன்புற்று அழியும்படியான சாபத்துக்கு ஆளானான் சந்திரன். சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவது எப்படி எனத் தவித்தவனுக்குக் கிடைத்ததுதான், இந்த வழிபாடு. கடும் தவமிருந்து, கார்த்திகையின் சோம வார நன்னாளில் விரதம் மேற்கொண்டு, சிவபூஜை செய்தான். அதில் மகிழ்ந்து குளிர்ந்த சிவபெருமான், சாபத்தில் இருந்து விமோசனம் தந்தருளினார். அதுமட்டுமின்றி, சந்திரகலையில் ஒன்றைப் பிறையாக்கி, தன் தலையில் கங்கைக்கு நிகராகச் சூடி சந்திரனுக்குப் பெருமை சேர்த்து அருளினார். இதனால்தான் சிவபெருமானுக்கு, சந்திரசேகரர் எனும் திருநாமமே அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம்.
சந்திரனுக்கு மொத்தம் 27 மனைவிகள். அந்த 27 மனைவியரும் வேறு யாருமல்ல. 27 நட்சத்திரங்கள். எனவே 27 நட்சத்திரக்காரர்களும் கார்த்திகை சோம வாரம் விரதம் அனுஷ்டித்து, சிவ வழிபாட்டில் ஈடுபடுவது பலனையும் பலத்தையும் தந்தருளும். அதேபோல், சந்திரனுக்கு 27 மனைவியரில், ரோகிணி யைத்தான் ரொம்பவே பிடிக்கும். அவள் மீதுதான் அளப்பரிய அன்பு கொண்டிருந்தான் சந்திரன். சாபத்தால் கலங்கித் துடித்த போது, சாபம் தீர சிவ வழிபாடு செய்த போது, சந்திரனுடன் அவனின் அன்பு மனைவி ரோகிணியும் சிரத்தையுடன் வழிபாட்டில் ஈடுபட்டாள். எனவே, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை சோம வார நன்னாளில், சிவாலயம் சென்றூ வில்வார்ச்சனை செய்து, மனதார வேண்டிக் கொண்டால், மங்கல காரியங்கள் தடைப்பட்டதெல்லாம் தவிடுபொடியாகி, விரைவில் நடந்தேறும். இல்லத்தில் உள்ள தரித்திரம் விலகிவிடும்.
கணவனுக்காக மனைவி பூஜை செய்தாள் அல்லவா. எனவே இந்த நாட்களில், கணவருக்காக பெண்கள் அவசியம் பூஜித்து, விரதம் மேற்கொண்டால், எல்லா நோய்களில் இருந்தும் கணவரைக் காத்தருள்வார் சிவபெருமான். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் இனிதே வாழச் செய்வார் ஈசன்.
கார்த்திகை சோம வாரத்தில் அதாவது இன்று கார்த்திகையின் முதல் திங்கட்கிழமை. இந்த நாளில், சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளைக் கொண்டு அந்த சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, யாகம் செய்வார்கள். பிறகு அந்த நீரைக் கொண்டு, சிவலிங்கத் திருமேனிக்கு திருமுழுக்காட்டுகிற திருக்காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த அபிஷேகத்தைத் தரிசிப்பதும் வில்வமும் வெண்மை நிற மலர்களும் வழங்கி வேண்டுவதும் சகல பலன்களையும் வாரி வழங்கும்.
கார்த்திகை சோம வாரத்தையும் சிவாலயத்தில் சங்காபிஷேக தரிசனத்தையும் விட்டுவிடாதீர்கள். நீங்கள் எந்த நட்சத்திரக்காரராக இருந்தாலும் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால், சகல தோஷங்களையும் போக்கிவிடும். இனி ஒரேயொரு தோஷம்தான்... அது சந்தோஷம்தான். எப்போதும் சந்தோஷத்துடன் இனிதே வாழ்வீர்கள் என்பது உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT