Published : 07 Nov 2017 02:48 PM
Last Updated : 07 Nov 2017 02:48 PM
திங்களூர் வந்தால் திருப்பம் நிச்சயம் என்பார்கள் பெரியோர். இங்கே சந்திர பகவான் தனிச்சந்நிதியில் கோலோச்சுகிறார். நவக்கிரக தலங்களில் இது சந்திர பகவானுக்கு உரிய கோயில்.
நவக்கிரக தலங்களில், இதுதான் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஆலயம். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூர் தலத்தில் உள்ள சிவனாரின் திருநாமம் & ஸ்ரீகயிலாசநாதர். எனவே அந்தக் கயிலாய நாதரான சிவபெருமானே இங்கு வந்து நம் குறைகளை நிவர்த்தி செய்வதாகச் சொல்வர்.
இங்கே தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சந்திர பகவான். மனக்கிலேசம், மனதில் குழப்பம், தேவையற்ற பயம், எப்போதும் தெளிவற்ற நிலை என சிக்கி வருந்துவோர் இங்கே... திங்களூர் திருத்தலத்துக்கு வந்து தரிசித்தால் சகலமும் நிவர்த்தியாகும்; சந்தோஷம் கூடும்; மனதில் தெளிவு பிறக்கும் என்பது ஐதீகம்!
பொதுவாகவே, திங்கட்கிழமைகளில் இங்கு சிறப்பு அபிஷேகமும் அர்ச்சனைகளும் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாத சோம வாரம் சிறப்பானவை என்கிறது ஸ்தல புராணம். எனவே கார்த்திகை சோம வார நன்னாளில், அதாவது கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமையின், திங்களூர் வாருங்கள்; நல்லதொரு திருப்பத்தைக் காண்பீர்கள்!
சந்திர தோஷம் உள்ளவர்கள், இழந்த பதவி அல்லது செல்வத்தைப் பெற விரும்புவோர், மாலையில் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவனாரையும் சந்திர பகவானையும் தரிசிப்பது நற்பலன்களை வாரி வழங்கும்! சந்திர ஹோரையின் போது தரிசனம் செய்வது கூடுதல் பலன்களை அள்ளித் தரும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT