Published : 01 Nov 2017 02:18 PM
Last Updated : 01 Nov 2017 02:18 PM
கற்கண்டு சாதம் நைவேத்தியம் செய்து, வில்லிவாக்கம் பெருமாளை வழிபட்டால், நம் வாழ்க்கையையே இனிமையாக்கி விடுவார் பெருமாள்.
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ளது சௌம்ய தாமோதரப் பெருமாள் கோயில். ஊருக்கு நடுவே, ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து அருகில் அமைந்து உள்ள அற்புதமான ஆலயம் இது.
சேட்டைக்கார குறும்புக் கண்ணன், வெண்ணெய் திருடாமல் இருக்க, சேட்டைகள் செய்யாமல் இருக்க, கிருஷ்ணரின் இடுப்பில் தாம்புக் கயிறு கட்டியது நினைவிருக்கிறதுதானே! இங்கே, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் செளம்ய தாமோதரப் பெருமாள். அதுவும் எப்படியான கோலத்தில் சேவை சாதிக்கிறார் தெரியுமா? இடுப்பில் தாம்புக் கயிறு சுவடு பதிந்திருக்கும் திருக்கோலத்தை இன்றைக்கும் தரிசிக்கலாம்!
சாந்நித்தியமான கோயில். புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம். புதன் கிழமை மற்றும் சனிக்கிழமை முதலான நாட்களில் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்! அந்தக் குறும்புக் கண்ணனைப் போலவே, வீட்டில் குழந்தை துள்ளி விளையாட வந்து சேரும்; நம் சந்ததி செழிக்கும் என்பது உறுதி.
இங்கு வந்து சௌம்ய தாமோதரப் பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி, கற்கண்டு அல்லது கற்கண்டு சாதம் நைவேத்தியம் படைத்து வழிபடுவது விசேஷம். கடன் தொல்லை நீங்கும். சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து, வாழையடி வாழையென வம்சம் தழைக்க வாழச் செய்வார் செளம்ய தாமோதரப் பெருமாள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT