Last Updated : 13 Nov, 2017 11:34 AM

 

Published : 13 Nov 2017 11:34 AM
Last Updated : 13 Nov 2017 11:34 AM

மங்கல வாழ்வு தரும் மாதுளை அபிஷேகம்! துவாக்குடி - நெடுங்களநாதர் அற்புதம்

மாதுளைச் சாறு அபிஷேகம் செய்து, சிவ தரிசனம் செய்தால், வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தந்தருள்வார் நெடுங்கள நாதர் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்!

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது துவாக்குடி. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவு பயணித்தால் திருநெடுங்களம் ஊரையும் நெடுங்களநாதர் ஆலயத்தையும் அடையலாம்.

பிரசித்திப் பெற்ற ஆலயம். புராண - புராதனத் தொடர்பு கொண்ட திருக்கோயில். ஒப்பிலாநாயகி எனப்படும் ஸ்ரீமங்களாம்பிகை, கருணையே வடிவான, அழகு ததும்பும் முகமும் கனிவு நிறைந்த கண்களுமாகக் காட்சி தருகிறாள். ஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு வந்து , சிவனாரை நினைந்து உருகி உருகிப் பாடியிருக்கிறார்.

அகத்திய முனிவர் இங்கு வந்து தலத்தின் சாந்நித்தியத்தை உணர்ந்து, தவமிருந்து அம்மையப்பனை வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

அதேபோல், நெடுங்களம் தலத்தின் முருகப்பெருமானும் சிறப்பு மிக்கவர். இந்தத் தலத்து கந்தவேளை, அருணகிரிநாதர் தரிசித்துச் சிலிர்த்தார். மெய்யுருக திருப்புகழ் பாடித் தொழுதிருக்கிறார்.

இந்த திருத்தலமானது, திருமணத் தடை நீக்கும் என்று போற்றப்படுகிறது. அதேபோல், தீராத நோயையும் தீர்த்தருளும் ஆலயம் என்றும் வணங்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர் பாடிய பதிகமானது, நோய் தீர்க்கும் பதிகம் என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள். திருநெடுங்களநாதர் கோயிலில், சப்தகன்னியரில் ஒருவரான ஸ்ரீவாராஹி அம்மனுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகுகாலவேளையில் சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெறுகிறது. விரலி மஞ்சள் எடுத்து வந்து, இங்கே உள்ள உரலில் இடித்து, அரைத்து, வாராஹிக்கு அபிஷேகம் செய்தால், தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். தோஷங்கள் அனைத்தும் விலகும். என்பது ஐதீகம்.

திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சிவபெருமானுக்கு மாதுளை அபிஷேகம் செய்தால், சகல நோய்களையும் தீர்த்தருள்வார் சிவனார் என்கிறார்கள் பக்தர்கள். வாரந்தோறும் காலை 7.30 மணிக்கும் மாலையில் 4.30 மணிக்கும் மாதுளைச் சாறு அபிஷேகம் அமர்க்களமாக நடைபெறுகிறது.

மாதுளைச் சாறு அபிஷேகம் செய்து ஈசனை வழிபட்டால், தடைப்பட்ட மங்கல காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும். தீராத நோயும் தீரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x