Published : 16 Nov 2017 10:22 AM
Last Updated : 16 Nov 2017 10:22 AM
‘அ
றிவிக்க அறிதல்’ என்பது சைவ மரபில் ஒரு கருதுகோள். அதன் அடிப்படை என்னவென்றால், அறியாதவர் ஒருவர், ஒரு பொருளைத் தெளிவாக அறிய வேண்டுமானால், அதை அவருக்கு அறிவிக்க, அறிந்தவர் ஒருவர் வேண்டும். கற்பிக்கிறவர் இல்லாமல் கல்வி சாத்தியமில்லை, குரு இல்லாமல் அறிதல் சாத்தியமில்லை என்னும் கருதுகோள், சைவ நூலாகிய திருமந்திரத்தில் உள்ளது; அறிதல் செயல்பாட்டில் குருவின் பங்கை முதன்மைப்படுத்திப் பேசுகிறது. குருவைக் கடவுளுக்குச் சமமாகப் போற்றுகிறது.
ஆனால், திருக்குறளைப் போன்ற ஒரு பொதுநூல், கல்வியைப் பற்றியும் அறிவைப் பற்றியும் பேசுகிறதே தவிர, கற்பிக்கும் ஆசிரியரைப் பற்றியோ, அறிவுண்டாக்கும் குருவைப் பற்றியோ சிறப்பாக ஒன்றும் பேசவில்லை. கல்வி என்பது, பிறர் முயற்சியால் அல்ல, தன் முயற்சியால் தானே அடைவது என்ற அடிப்படையிலேயே திருக்குறள் பேசுகிறது.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை (குறள் 414)
என்கிறது வள்ளுவம். உறுதி நூல்களைத் தானே கற்றுத் தெளியவில்லை என்றாலும், அவற்றின் பொருட்களைக் கற்று அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்க. அவ்வாறு பெற்றுக்கொண்ட அறிவு, ஒருவர் தளர்ச்சி அடையும் காலத்தில் ஊன்றுகோல் உதவுவதுபோல உதவும்.
தானே முயன்று கற்றுக்கொள்வது என்பது முதல்நிலை; அப்படிக் கற்றுக்கொள்ள முடியாவிட்டால் கற்றுக்கொண்டவர்களிடம் கேட்டுக்கொள்ளவாவது வேண்டும் என்பது இரண்டாம் நிலை.
திருக்குறளில் குரு வழிபாடு ஏன் இல்லை
ஆசிரியரை மறுதலித்துப் பேசவில்லை திருக்குறள்; அவ்வாறு பேசவும் முடியாது. ஆனால், திருக்குறள் ஒற்றை ஆசிரியரைக் குருவாக நிறுத்திப் பேசவில்லை. குரு, குருவின் குரு என்று வரும் குரு மரபைக் குறித்துப் பேசவில்லை. குரு என்பவர் இன்னார், அவருக்கான இலக்கணம் இது என்று குருவை வரையறை செய்கிற வேலையை அது செய்யவில்லை. யார் யாரெல்லாம் அறிவுடையவர்களோ அவர்களிடமெல்லாம் அறிவைப் பெற்றுக்கொள்க என்று பொதுமையாகத்தான் பேசுகிறது.
திருக்குறள் சமயச் சார்பற்ற பொது நூல். ஆகவே, குருவுக்குப் பொட்டிட்டுப் பூச்சூட்டிப் பூசிக்கிற வேலையைச் செய்யாமல், அறிவின் முதன்மையை உணர்த்தி, அதைப் பெறுவது உன் கடமை என்று சுட்டிக்காட்டிவிட்டு அமைதியாகக் கடந்து போகிறது.
ஆனால், திருமந்திரம் அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில், திருமந்திரம் சைவம் என்கிற சமயச் சார்பு நூல். அது வழங்கக் கருதுவது பொதுவான அறிவை அல்ல; சைவ மரபு கருதுகிற சிறப்பு அறிவை! சைவ மரபின் சிறப்பு அறிவைக் குரு என்று சொல்லிக்கொள்கிற யார் வேண்டுமானாலும் வழங்கிவிட முடியாது. சைவ மரபை அறிந்து, தெளிந்து, உணர்ந்தவர்கள் மட்டுந்தான் வழங்க முடியும்.
சைவ சமயத் தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுஉண்டு;
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துஉய்ய
வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே(திருமந்திரம். 1567)
சைவ சமயத்தின் தனிமுதல் தலைவனாகிய இறைவன், உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உய்வு அடைவதற்காக வகுத்து வைத்த குரு நெறி ஒன்று இருக்கிறது. அந்த நெறி சிவ நெறி. சன்மார்க்கம் என்கிற சைவ அறிவு நெறி.
அறிவை வேண்டுகிறவன் அறிவு இருக்கிறவனிடம் போய்ப் பெற்றுக்கொள்ளலாம் என்று பொதுமைப்படுத்திவிட்டால் அதில் சிக்கல் இல்லை. அரசாங்கப் பள்ளியே போதுமானது. ஆனால், சிறப்பு அறிவு வேண்டும் என்றால் அதற்குரிய தனிப் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து சிறப்புப் பயிற்சி பெற வேண்டியிருக்கிறது இல்லையா?
பணிவில்லாதவன் பரநிந்தை செய்வோன்
குருவைத் தேர்ந்தெடுக்கிற விவகாரத்தில் யாரும் அப்படிச் சங்கடப்பட்டுவிடக் கூடாது என்பது திருமூலரின் எண்ணம். ஏனென்றால், குருவைத் தேர்ந்துகொள்வதில் விடுகிற பிழை ஒரு பிறப்பையே வீணாக்குகிற பிழை. ஆகவே, சற்குரு யார், அசற்குரு யார் என்று தெளிவாக விளக்கம் சொல்கிறார் திருமூலர்.
உணர்வுஒன்று இலாமூடன், உண்மை ஓராதான்,
கணுஇன்றி வேதஆகம நெறி காணான்,
பணிவுஒன்று இலாதோன், பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே.(திருமந்.2044)
அறிவு இருந்தாலுங்கூட, உணர்வும் ஈடுபாடும் இல்லாதவன், உண்மையை அதன் அகல நீளங்களுடன் அறிந்திராதவன், மூல நூல்களைத் திரும்பத் திரும்ப ஓதித் தலைகீழ் மனப்பாடமாக அறிந்திருந்தாலும், அவை சொல்கிற நெறி என்ன, அவற்றின் மையப் பொருள் என்ன என்பதை ஊடுருவிக் காணத் தெரியாதவன், பணிவு இல்லாதவன், தன் நெறியே பெரிது என்று பேசிப் பிற நெறிகளை ஏசுகிறவன், ஆணவத்தைக் குணமாகக் கொண்டிருப்பவன், இத்தகையவனே பொய்மைக் குருவாகிய அசற்குரு என்று அடையாளம் காட்டுகிறார் திருமூலர்.
சரி, அப்படியென்றால் உண்மைக் குருவாகிய சற்குரு யார்?
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்,
ஆசற்ற சற்குரு ஆவோன்; அறிவுஅற்றுப்
பூசற்கு இரங்குவோன் போதக் குருஅன்றே (திருமந்.2052)
அறிவைப் பெற வேண்டும் என்கிற விருப்பத்தோடு தன்னை நாடி வருகிற எளியவர்கள் உலகியல் வாழ்வின்மீது கொண்டிருக்கிற பெரும்பற்றை நீக்குகிறவன்; இறைவனை மட்டுமே ஆராய்ந்துகொண்டிருக்காமல் தன்னையும் ஆராய்ந்துகொண்டிருப்பவன்; அந்த ஆராய்ச்சி முறைமையைத் தன்னை நாடி வருகிறவர்களுக்கும் மிக்க அன்போடு கற்றுத் தருகிறவன்; அவர்களின் அழுக்குகளை இனி மீண்டும் சேர்ந்துவிடாதவாறு முற்றிலுமாக அகற்றுகிறவன்; ஆசு அற்றவன், அதாவது, எதன்மீதும் ஆசை அற்றவன் எவனோ அவனே சற்குரு.
வெளிவேடங் காட்டி, வாய்ப் பேச்சால், வலுத்த குரலால், வாதம்-எதிர்வாதத்தால் தன்னுடைய தரப்பை நிறுவிவிட முடியும் என்று கருதுகிறவன் எவனும் அறிவுள்ள குரு அல்லன் என்று உண்மையான சற்குருவையும் பொய்ம்மையான போலிக் குருவையும் அடையாளம் காட்டுகிறார் திருமூலர். இருக்கட்டும்.
கேவியட் எம்ட்டார்—Caveat emptor—என்று பழைய ஒப்பந்தச் சட்டத்தில் ஒரு கூறு உண்டு. விற்கப்படுகிற சரக்கின் தரத்துக்கு விற்பனையாளர் உறுதி (warranty) வழங்க மாட்டார்; வாங்குகிறவர்தான் எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும் என்பது அதன் பொருள் (let the buyer beware). இதில் நடக்கிற ஏமாற்று வாணிகத்தை உணர்ந்து, அரசுகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மூலமாக, விற்கப்படுகிற சரக்கின் தரத்துக்கு விற்பனையாளர் உறுதி வழங்க வேண்டும் என்று ஒழுங்கு செய்துவிட்டன.
இவ்வாறு ஒழுங்கு செய்த பின்னாலும் இந்த ஏமாற்று தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. வகைவகையான சரக்குகளை எந்தவிதமான தர உறுதிப்பாடும் இல்லாமல் விற்பனையாளர்கள் விற்பதும் அவற்றை நாம் கண்ணை மூடிக்கொண்டு வாங்குவதும் இந்த அடிப்படையிலானதுதான்.
நல்லது. தர உறுதி இல்லாத சரக்கு விற்பனைக்கும் குருமார்களுக்கும் என்ன தொடர்பு என்றால், போலிக் குருமார்கள் எந்தவிதமான தர உறுதிப்பாடும் இல்லாமல் அறிவை விற்கிறார்கள். ஒருவேளை வாங்குகிறவர்கள்தான் உறுதியாக இருக்க வேண்டுமோ? திருமூலர் சொல்கிறார்:
ஞானம் இலாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை
ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞானம் உண்டாக்குதல் நலம்ஆகும் நாட்டிற்கே (திருமந்.242)
மெய்யறிவே இல்லாத ஏமாற்றுக்காரர்கள், சடையும் தாடியும் அணியும் ஆடையுமாக வேடமிட்டு, ஞானிகள்போல நடிக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே ஞானிகள்தாமா என்று உண்மையான ஞானிகளைவிட்டு அரசாங்கம் பரிசோதிக்க வேண்டும். அவ்வாறு சோதித்து, ஒன்று அந்தப் பொய் ஞானிகளுக்கு உண்மை ஞானத்தை உண்டாக்க வேண்டும்; அல்லது அந்தப் பொய் ஞானிகளை நம்புகிற ஏமாளிகளுக்குப் போலிக் குருவின் பொய் வேடம் பற்றிய ஞானத்தை உண்டாக்க வேண்டும். இதைச் செய்தால் நாட்டுக்கு நல்லது என்கிறார் திருமூலர்.
ஞானம் என்பது நுகர்பொருளாக்கப்பட்டால் அதற்கும் நுகர்வோர் பாதுகாப்பு உருவாக்கப்பட வேண்டுந்தானே?
(ஞானம் தேடுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT