Published : 07 Nov 2017 03:09 PM
Last Updated : 07 Nov 2017 03:09 PM
சிவாலயத்தில் உள்ள சித்தபுருஷரின் சமாதியில் அபிஷேகித்த எண்ணெய்ப் பிரசாதத்தை உடலில் தேய்த்துக் கொண்டால், வாதம் முதலான நோய்கள் விரைவில் நீங்கிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், பழைய சமயபுரம் டோல்கேட்டைக் கடந்ததும் நொச்சியம் எனும் ஊர் வரும். இங்கிருந்து நாமக்கல் செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால், கொள்ளிடக் கரையையொட்டிய அற்புதமான திருத்தலத்தை அடையலாம். அந்தத் திருத்தலம்... துடையூர்.
இந்தக் கோயிலில் சுவாமியின் திருநாமம் விஷமங்களேஸ்வரர். அம்பாளின் திருநாமம் மங்களாம்பிகை. அழகிய, சின்னஞ்சிறிய ஆலயத்தில் கரையோரத்தில் இருந்த படி, நம்மையெல்லாம் கடைத்தேற்றி வருகிறார் சிவனார். அவருடன்... நாடி வருவோருக்கெல்லாம் நலமும் வளமும் தந்தருள்கிறார் அம்பிகை!
முனிவர்களும் சித்தர்களும் நெடுங்காலம் தவமிருந்து சிவனாரின் பேரருளைப் பெற்ற புண்ணிய பூமி இது என்று ஆச்சார்யர்கள் தெரிவிக்கின்றனர். இங்கே வாதக்கல் முனிவர் என்பவரின் திருச்சமாதி இருக்கிறது. இந்தத் தலத்துக்கு வந்து, சிவபார்வதியை வணங்கிவிட்டு, வாதக்கல் முனிவர் சமாதி முன்னே, சில நிமிடங்கள் தியானித்து, வாதக்கல் முனிவரின் கல் திருமேனிக்கு அபிஷேகித்த எண்ணெய்ப் பிரசாதத்தை வாங்கிச் சென்று, கால் கை மற்றும் மூட்டு வலியால் கஷ்டப்படுவோருக்கு உடலில் தேய்த்துவிட்டால், விரைவில் வாதம் முதலான நோய்கள் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்!
வியாழக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி முதலான நாட்களில் இங்கு வந்து ஸ்ரீவிஷமங்களேஸ்வரரையும் ஸ்ரீமங்களாம்பிகையையும் வழிபட்டு, வாதக்கல் முனிவருக்கு வெண்மை நிற மலர்கள் சூட்டி வழிபட்டு, எண்ணெய்ப் பிரசாதத்தை உட்கொண்டால், கைகால் குடைச்சல், மூட்டு வலி, வயிற்று வலி முதலானவற்றில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம் என்று சிலிர்ப்புடனும் மகிழ்வுடனும் தெரிவிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT