Published : 09 Jul 2023 07:20 AM
Last Updated : 09 Jul 2023 07:20 AM

அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா - ஆடி மாதத்தையொட்டி அறநிலையத் துறை ஏற்பாடு

சென்னை: ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு பக்தர்களை ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2022 – 2023-ம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் ‘தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களுக்கும், வைணவக் கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்’ என அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில், சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த ஆண்டு பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இந்தாண்டு ஆடி மாதமும் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாகக் கொண்டு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து அம்மன் கோயில்களுக்கு பக்தர்களை ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத் திட்டமும், மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில், மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட 8 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோயில், திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், தஞ்சை பெரியநாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் உள்ளிட 6 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த ஆன்மிகச் சுற்றுலா பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்படும்.

ஆன்மிகச் சுற்றுலா தொடர்பாகதமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக www.ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்திலும், 044 – 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x