Last Updated : 03 Jul, 2023 07:29 PM

 

Published : 03 Jul 2023 07:29 PM
Last Updated : 03 Jul 2023 07:29 PM

சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம்: 5 லட்சம் தேங்காய்கள் உடைப்பு

சிங்கம்புணரி சேவுகபெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள். :::

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனமாக தேரடிப் படிகளில் 5 லட்சம் தேங்காய்களை வீசி உடைத்தனர்.

சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பழமையான சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றதால் வைகாசி திருவிழா ஆனி மாதத்தில் நடைபெறுகிறது. இத்திருவிழா ஜூன் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு கழுவன் விரட்டும் திருவிழா நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி இன்று காலை சிறிய தேர்களில் தனித்தனியாக விநாயகர், பிடாரி அம்மனும், பெரிய தேரில் சேவுகப்பெருமாள் அய்யனார், பூரணை, புஷ்கலை தேவியருடன் எழுந்தருளினர். தொடர்ந்து மாலை 4.20 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்த தேர், ஐதீக முறைப்படி களிமண்ணால் செய்யப்பட்ட கழுவன், கழுவச்சி உருவங்கள் மீது ஏறி, அவர்களை வதம் செய்தது.

சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் சுவாமி

தொடர்ந்து மாலை 5.10 மணிக்கு கோயில் நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை வரம், நோய் குணமடைதல், விவசாயம் செழிக்க உள்ளிட்ட நேர்த்திக்கடனுக்காக 5 லட்சம் தேங்காய்களை தேரடிப் படிகளில் வீசியெறிந்து உடைத்தனர். பல மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த நிகழ்ச்சியில் 5 லட்சத்துக்கும் அதிகமான தேங்காய்கள் உடைக்கப்பட்டன. தேங்காய்களை 200-க்கும் மேற்பட்டோர் சேகரித்தனர். சிலர் தங்களது தலையை பாதுகாக்க ஹெல்மெட்டும், உடல் அடிபடாமல் இருக்க பாஞ்ச் கட்டிக் கொண்டனர். இதில் 4 பேர் காயமடைந்தனர்.

சிங்கம்புணரி சேவுகபெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டத்தில் தேரடிப்படிகளில் நேர்த்திக்கடனுக்காக தேங்காய் வீசிய பக்தர்கள்.

தேரோட்டத்தை கண்டு களித்த முஸ்லிம்கள்

இரவு தேரடிப் பூஜை நடந்தது. இதனை மத பேதமின்றி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பங்கேற்றனர். இவ்விழாவை காண லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். நாளை பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x