Published : 02 Jul 2023 04:35 AM
Last Updated : 02 Jul 2023 04:35 AM
பிரயாக்ராஜ்: காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் சைகதா பரமேஸ்வர லிங்க பூஜையை நிறைவு செய்தார்.
காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனுஷ்கோடி, ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட சைகதா பரமேஸ்வர லிங்கத்தை உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் உள்ள தசாஸ்வமேத காட்டில் வைத்துபூஜை செய்தார். மணலால் செய்யப்பட்ட லிங்கத்தை வைத்துபூஜை செய்வது பழைய பாரம்பரியமான பூஜை முறையாகும்.
தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்ட சைகதா -புனித மணல், யாத்திரையின்போது கவனமாக பாதுகாக்கப்படுகிறது. கங்கைக் கரையை அடைந்ததும், புனித நதியில் நீராடி, சைகதா சிவலிங்கம் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதைத் தொடர்ந்து கங்கை நதிக்கு பூஜைசெய்யப்பட்டு, சைகதா பரமேஸ்வர லிங்கம் கங்கையில் பிரதிஷ்டைசெய்யப்படுகிறது, இது சைகதா லிங்க பிரதிஷ்டை என்று அழைக்கப்படுகிறது.
அதன் பிறகு, மீண்டும் ஆற்றில் நீராடல் நடைபெறுகிறது. இது யாத்திரையின் குறிப்பிடத்தக்க பகுதியை நிறைவு செய்கிறது. பின்னர் மீண்டும், ராமேஸ்வரத்தில் தொடர்ந்து அபிஷேகம் செய்வதற்கான பூஜையுடன் கங்கை நீர் எடுக்கப்படும்.
புனித சைகதா தனுஷ்கோடியில் ரத சப்தமி தினத்தில் (2020-ம்ஆண்டு பிப்.19-ம் தேதி) ஸ்ரீ விஜயேந்திரரின் ராமேஸ்வரம் யாத்திரையின்போது எடுக்கப்பட்டது. சேதுமாதவர் சந்நிதியில் புனித சைகதாவுக்கு பூஜைகள் நடந்தன.
2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதல் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய இடங்களில் ஸ்ரீ விஜயேந்திரர் யாத்திரை மேற்கொண்டுள்ளார், மேலும் பிரயாக்ராஜ் செல்லும் வழியில் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர், ராம்டெக் பகுதிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர், ரேவா ஆகிய இடங்களுக்குச் சென்று கடந்த 28-ம் தேதி பிரயாக்ராஜ் வந்தடைந்தார்.
முன்னதாக ரேவாவில் இருந்து பிரயாக்ராஜ் வந்தடைந்த ஸ்ரீ விஜயேந்திரருக்கு பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சித்தேஷ்வர் மஹாதேவ் மந்திரில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆர்த்திநிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஸ்ரீ விஜயேந்திரர் திரிவேணி சங்கம பகுதியில் உள்ள காஞ்சிகாமகோடி பீடம் ஆதி சங்கரவிமான மண்டபத்தை வந்தடைந்தார்.
தனுஷ்கோடிக்குச் சென்று ஏறக்குறைய 28 மாதங்களுக்குப் பிறகு,2023-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதிபாரம்பரிய முறைப்படி புனித சைகதா கங்கை நதியில் மூழ்கிமீண்டும் கங்கை நீர் எடுக்கப்பட்டது.
1934-ம் ஆண்டு காசி யாத்திரையின்போது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளாலும், 1974-ம் ஆண்டு காசி யாத்திரையின்போது ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளாலும் இந்த பூஜை பிரயாக்ராஜ் தலத்தில் உள்ள இதே தசாஸ்வமேத காட்டில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT