Published : 29 Jun 2023 12:54 PM
Last Updated : 29 Jun 2023 12:54 PM
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த ஒப்பிலியப்பன் கோயிலில் இன்றூ மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வைணவத் தலங்களில் சிறப்பிடம் பெற்று திகழும் கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள பெருமாள், திருப்பதி பெருமாளுக்கு மூத்த சகோதரன் என கூறப்படுகிறது. வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 16வது திவ்ய தேசம். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் என நான்கு ஆழ்வார்களால் மொத்தம் 48 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்புப் பெற்ற இக்கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு பிப். 8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ. 3 கோடி மதிப்பில், திருப்பணிக்காக 2022-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி விமான பாலாலயமும், இந்த மாதம் 5-ம் தேதி மூலவர் பாலாலயமும் நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. 28-ம் தேதி வரை 7 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. முக்கிய விழாவான நேற்று காலை புண்யாஹவாசனம், திருவாதாரணம், ஹோமங்கள் மற்றும் பூர்ணாஹூதியுடன் 8 கால யாகசாலை நிறைவடைந்தது. தொடர்ந்து, யாத்ராதானம், பஞ்ச தச தாளங்களுடன் கடம் புறப்பட்டு, சிம்ம லக்னத்தில் விமானம் மற்றும் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
11.30 மணிக்கு பொது ஜன சேவையும், இரவு பெருமாள் தாயார் தங்க கருட சேவையும், இவர்களுடன் ஸ்ரீ பெரியாழ்வார், ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகன் வீதியுலா நடைபெற்றது. இதில் தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் சாந்தா மற்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.
திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர்சித்திக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் தீவிர பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர். இக்கோயிலின் வாயில் குறுகலாக இருப்பதால் சொற்ப அளவில் மட்டும் பக்தர்களை, உள்ளே அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற, கோயிலின் வடக்கு மற்றும் மேற்கு சுவற்றில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதே போல் பெரும்பாலான பக்தர்கள் கோயிலின் வெளியிலேயே தரிசனம் மேற்கொண்டதால், அவர்களுக்கு கோயிலை சுற்றிலும் 15-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து இயந்திரம் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT