Published : 27 Jun 2023 06:12 AM
Last Updated : 27 Jun 2023 06:12 AM

சிதம்பரம் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசனம் - ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் வழிபாடு

கனகசபையில் இருந்த பதாகையை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து அறநிலையத் துறையினர் அகற்றினர்.

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களின் ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆனித் திருமஞ்சன தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன நிகழ்வு கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான ஆனித் திருமஞ்சன தரிசனம் நேற்று நடந்தது. அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பின்னர் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது. ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமியும், அம்பாளும் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெற்றது.

ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து தீவட்டி முன்னே செல்ல மேள தாளங்கள் முழங்கிட, வேத மந்திரங்கள் ஓதியபடி, தேவாரம், திருவாசகம் பாடிட நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் முன்னுக்கும், பின்னுக்கும் சென்று நடனமாடியபடியே பக்தர்களுக்கு தரிசனம் தந்தபடியே சித்சபைக்கு பிரவேசம் செய்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கனகசபையில் பொதுமக்கள் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய 4 நாட்கள் வழிபட தடை விதித்துள்ளதாக கோயில் தீட்சதர்கள் கனகசபை வாயில் அருகே பதாகை ஒன்றை வைத்தனர். இது தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது எனக் கூறி, கடந்த 24-ம் தேதி இந்து சமய அறநிலைய துறை தில்லை அம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் போலீஸார் பதாகையை அகற்ற சென்றனர். கோயில் தீட்சிதர்கள், செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பதாகையை அகற்றாமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் நகர போலீஸில் செயல் அலுவலர் சரண்யா, புகார் செய்தார்.

இந்நிலையில் நேற்று கோயில் தரிசன விழா முடிந்து சுவாமிகள் சித் சபைக்கு சென்ற பின்னர் மாலை, மாவட்ட இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் சந்திரன், சிதம்பரம் உதவி ஆட்சியர் (பொறுப்பு) பூமா, ஏஎஸ்பி ரகுபதி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு 100-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் சென்று கனகசபையில் தீட்சிதர்கள் வைத்திருந்த பதாகையை அகற்றினர்.

எனினும், பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபட அனுமதிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x