Published : 31 Jul 2014 12:00 AM
Last Updated : 31 Jul 2014 12:00 AM
இந்து சமய வழிப்பாட்டில் நாகர் எனப்படும் பாம்புக்கும் முக்கிய இடம் உண்டு. பல்வேறு புராணக் கதைகளில் நாகத்திற்குச் சிறப்பிடம் உள்ளது. அதில் ஒன்று வாசுகி என்ற நாகம் பற்றியது. தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க முயன்றார்கள்.
மந்தார மலையை வைத்து அமிர்தம் கடைய அவர்கள் முடிவுசெய்தார்கள். மலையைக் கடைவதற்கான கயிறாக வாசுகி என்னும் பாம்பு செயலாற்றியது. அதன் மூலமே அமிர்தத்தைத் தேவர்களும் அசுரர்களும் பெற்றார்கள் என்கிறது புராணக் கதை.
விஷ்ணு, கிடந்தால் படுக்கையாகவும், அமர்ந்தால் சிம்மாசனமாகவும், நின்றால் குடையாகவும், நடந்தால் நரனாகவும் (லஷ்மணன்) கூடவே இருப்பது அனந்தன் என்ற பாம்புதான். பாம்பு சிவனின் கழுத்தைச் சுற்றித் தவழுகிறது.
கிராம தேவதைகளுக்கோ தலையில் கிரீடம் போல் காட்சி அளிக்கிறது. விநாயகருக்கு இடுப்பில் அரைஞாண் கயிறாகக் காட்சி அளிக்கிறது. முருகனுக்கு மயிலின் காலிடையே ஒயிலாகத் தவழுகிறது. நாக கன்னி மற்றும் நாகவள்ளி என்ற தேவதைகள் தனக்கெனத் தனிப் பெயர் சூட்டிக்கொள்ளாமல் நாகத்தின் பெயரையே தன் பெயராக்கிக் கொண்டுள்ளனர்.
பாம்புப் புற்றுக்கு பால் விடுதலும், நாக பூஜைகள் செய்வதும் குலத்தைக் காக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. பல தலைமுறைகளாகக் குல வழக்கமாகவே இருந்துவரும் இப்பழக்கம் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது.
நாகரைப் பூஜித்தால் கை மேல் பலனுண்டு என்பதைக் குறிக்கும் கிராமப்புறக் கதை ஒன்று மிகவும் பிரபலம். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட கிராமம் அது. அங்கு ஏழு அண்ணன்களைக் கொண்ட பெண்ணொருத்தி வாழ்ந்துவந்தாள். தினமும் அண்ணன்கள் வயலில் வேலை செய்யக் காலையிலேயே சென்றுவிடுவார்கள்.
அவர்களுக்குக் கஞ்சிக் கலயத்தில் சமைத்த மதிய உணவை எடுத்துச் செல்வது தங்கையின் பொறுப்பு. கொதிக்கும் உணவு சரியான பதத்திற்கு ஆற வேண்டுமென்பதால், கலயத்தைத் தலையில் திறந்து வைத்து எடுத்துச் செல்வது அப்பெண்ணின் வழக்கம்.
அவ்வாறு ஒரு நாள் தலையில் கலயத்தை வைத்து எடுத்துச் சென்றபோது, வானில் கருடன் ஒன்று தன் கால்களில் பாம்பு ஒன்றைக் கொத்தி எடுத்தபடியே பறந்து சென்றது. கருடன் கிடுக்கிப்பிடியாய்ப் பிடித்திருந்ததால் பாம்பு தாங்க முடியாத வலியில் விஷத்தைக் கக்கியது. அவ்விஷம் நேராக அப்பெண்ணின் தலையில் வைத்திருந்தக் கலயத்தில் விழுந்தது. அதனை அறியாத அப்பெண், எப்பொழுதும் போல் தனது அண்ணன்களுக்கு உணவு அளித்தாள்.
இதனை உண்ட அவர்கள் ஒவ்வொருவராக இறந்து விழுந்தனர். அன்பும் பாசமும் கொண்ட அப்பெண் துடித்துக் கதறினாள். அம்மா, அம்மா என்று அரற்றினாள். தன்னைத்தான் அழைக்கிறாள் என்று நினைத்த பார்வதி தேவி, சிவபெருமானுடன் காட்சி அளித்தாள். அப்பெண்ணும் அழுது அரற்றியபடியே நிகழ்ந்தவற்றை விளக்கினாள்.
பார்வதி தேவி, சில விரத முறைகளைக் கூறி அவற்றைச் செய்தால் அவளது அண்ணன்கள் உயிர் பெறுவார்கள் என்று கூறினாளாம். அவளும் அதன்படியே அருகில் இருந்த பாம்புப் புற்றுக்கு மஞ்சள் குங்குமம் தடவிப் பூக்களால் அர்ச்சித்தாள். பின்னர் புற்றுக்குப் பால் வார்த்து, நாகரைப் பணிந்தாள்.
அவளது விரதம் பயனுறும் வகையில் அண்ணன்கள் எழுவரும் தூங்கி எழுந்ததைப் போல் விழித்து எழுந்தனர். இதனடிப்படையில் இன்றும் பெண்கள் நாகரைப் பூஜிப்பது வழக்கம். அதுமுதல் ஆடி, தை மாதங்களில் உள்ள அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் புற்றுக்குப் பால் வார்த்துப் பூஜித்தல் பெண்களின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனாலும் ஆண்டுக்கு ஒரு முறை வரும் நாக பஞ்சமி தினத்தன்று பெண்கள் நாகருக்கு சிறப்புப் பூஜை செய்வர். சில ஆண்களும் புற்றுக்குப் பால் வார்ப்பது உண்டு.
நாக பஞ்சமி அன்று சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்த நாகருக்கு வீட்டிலேயே பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பூக்களால் அர்ச்சித்து, பால் பாயசம் நிவேதனம் செய்வது வழக்கம். இப்பூஜையினால் தங்கள் குழந்தைகளுக்கும், கணவருக்கும், சகோதரர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.
பெருமாளைத் தாங்கும் பாக்கியம் பெற்ற கருடன் தனது தாயை அடிமைத் தளையில் இருந்து மீட்ட நாள் என்பதால், நாக பஞ்சமியன்று கருடனையும் பூஜித்தல் விசேஷம். காஷ்யபரின் மகனான கருடன், பல்லாயிரக்கணக்கான தனது நாக சகோதரர்களில் எட்டு நாகங்களை ஆபரணமாகத் தனது உடலில் தரித்துள்ளார். பெருமாள் கோவில்களில் விஷ்ணுவின் எதிரே கை கூப்பிய வண்ணம் இருக்கும் பெரிய திருவடியான கருடனைப் பூஜிப்பவரின் பிள்ளைகள் பலவான் ஆவார்கள் என்பது ஐதீகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment