Published : 22 Jun 2023 03:04 PM
Last Updated : 22 Jun 2023 03:04 PM

“தங்க ரத கட்டணம் இனி ரூ.3,000... பழநி கோயிலில் அரசு பகல் கொள்ளை” - இந்து முன்னணி சாடல்

சென்னை: “திருப்பதி போல பழநியை மாற்றி காட்டுகிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். அவர் திருப்பதியில் வாங்கும் கட்டணத்தை போல உயர்த்தியிருக்கிறாரே தவிர திருப்பதியில் பக்தர்களுக்கு செய்யக்கூடிய வசதிகளையோ கோயில் பராமரிப்பையோ பழநியில் செய்யவில்லை” என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மெல்ல மெல்ல அழகப்பா! காசு கொடுத்து பழகப்பா! என்பது போல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல பக்தர்களிடம் காசு பிடுங்குகிறது இந்து சமய அறநிலையத் துறை. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் எதையும் திராவிட அரசோ இதற்கு முன்னால் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசோ கட்டிக் கொடுக்கவில்லை. அனைத்து கோயில்களும் நமது முன்னோர்களான மாமன்னர்கள் கட்டிய கோயில்கள். அனைத்து கோயில்களும் தமிழக மக்கள் அனைவருக்காகவும் கட்டப்பட்டது. அனைவரும் தரிசனம் செய்து இறைவன் அருள் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு நமது முன்னோர்கள் கட்டிக் கொடுத்த கோயில்கள் ஆகும்.

போகர் சித்தரால் உருவாக்கப்பட்டு சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு வைகாபுரி மன்னனால் பராமரிக்கப்பட்டு வந்த கோயில்தான் பழநி ஸ்ரீ தண்டாயுதபாணி சாமி திருக்கோயில், இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் உள்ள கோயில்களை கைப்பற்றியபோது பழநி கோயிலையும் கைப்பற்றினார்கள். அப்போது இலவசமாக தரிசனம் செய்து வந்தனர் பக்தர்கள். மெல்ல மெல்ல ஒரு ரூபாயில் ஆரம்பித்து இன்று கட்டணம் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். பொது இலவச தரிசனம் கோயிலுக்கு பின்புறமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கோயில் தரிசன கட்டணம் விசேஷ நாட்களில் ரூ.200 சாதாரண நாட்களில் ரூ.100 என்று கார்ப்பரேட் கம்பெனி போல வசூல் செய்து வருகின்றனர். தற்போதைய நாத்திக திராவிட மாடல் அரசு கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களில் மூன்று மடங்கு கட்டணத்தை அதிகப்படுத்தி சுற்றறிக்கை விட்டுள்ளனர். அதாவது கால பூஜை என்று சொல்லக்கூடிய அபிஷேக பூஜை பார்ப்பதற்கு ரூ.1,800-ல் ருந்து திடீரென ரூ.5,000 ஆக உயர்த்தியுள்ளது. ஒரு நபர் ரூ.300 டிக்கெட்டை ரூ.1000 ஆக உயர்த்தி பகல் கொள்ளையில் ஈடுபடுகிறது இந்து சமய அறநிலையத் துறை.

இதனால் பாமர பக்தர்கள் தெய்வத்தின் உடைய அபிஷேகத்தை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ரூ.5.000 கட்டி அபிஷேக பூஜை பார்ப்பதற்கு தமிழக மக்கள் அனைவரும் செல்வ செழிப்போடு வாழவில்லை என்பதை இந்த அரசு உணர்ந்து தான் செயல்படுகிறதா என்கின்ற சந்தேகம் ஏற்படுகிறது.மேலும், தங்க ரதம் இதுவரை ரூ.2,000 ரூபாயாக இருந்ததை ரூ.3000 ரூபாயாக உயர்த்தி உள்ளது.

மொத்தத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஏழைகளை கோயிலுக்குள்ளே நுழைய விடக்கூடாது என்பதற்கான முன்னோட்டமாக இந்த கட்டண உயர்வு இருக்கிறதா என்கின்ற சந்தேகம் ஏற்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு எந்த வித கருத்து கேட்பும் இல்லாமல் கட்டண உயர்வு கோயிலை வைத்து வருமானம் சம்பாதிக்க கூடிய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது.

அமைச்சர் சேகர்பாபு, திருப்பதி போல பழநியை மாற்றி காட்டுகிறோம் என்று கூறினார். அவர் திருப்பதியில் வாங்கும் கட்டணத்தை போல உயர்த்தியிருக்கிறாரே தவிர திருப்பதியில் பக்தர்களுக்கு செய்யக்கூடிய வசதிகளையோ கோயில் பராமரிப்பையோ பழநியில் செய்யவில்லை. வெறும் வாய்ச்சவடால் மட்டும் பேசி தான் திறம்பட செயல்படுவதாக மக்களை ஏமாற்றுகின்றார்.

தமிழக அரசு கட்டண உயர்வை ஏற்படுத்தாமல் அனைவருக்கும் இலவச தரிசன முறையை ஏற்படுத்தி தர இந்து முன்னணி வலியுறுத்துகிறது. இந்து முன்னணியின் வீரத்துறவி ராமகோபாலன் தனது இறுதி காலம் வரை தரிசன கட்டணத்தை ரத்து செய்வதற்காக போராடிக் கொண்டிருந்தார். இந்த விஷயத்தில் அனைத்து மடாதிபதிகளும் ஆன்மிகப் பெரியோர்களும் போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

இந்த நாத்திக அரசு இதுபோன்ற தரிசன கட்டணத்தை அதிகப்படுத்தினால் கண்டிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் கொந்தளித்து சாலையில் இறங்கி போராடக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு உடனடியாக அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்து அனைத்து பக்தர்களும் இலவசமாக தரிசனம் செய்ய முறைப்படுத்துமாறு இந்து முன்னணி வலியுறுத்துகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x