Published : 21 Jun 2023 06:30 PM
Last Updated : 21 Jun 2023 06:30 PM
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், "சர்வதேச யோகா தினத்தை உலகம் கொண்டாடும் இந்த நேரம், உள்ளிருந்து உங்களை மலர வைக்கும் இந்தப் பழமையான கலையினை கவனத்தில் கொள்ள வேண்டிய நேரமாக அமைந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக யோகா பெற்றுள்ள உலகளாவிய ஆதரவுக்கு நன்றி. பல தடைகளை உடைத்து, யோகா, ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரபலம் அடைந்துள்ளது.
யோகாவைப் பற்றிய பொதுவான தவறான கருத்துகளில் ஒன்று என்னவென்றால், அது உடல் பயிற்சியின் மற்றொரு வடிவம் என்பதாகும். யோகாசனங்கள் பலருக்கு இதற்கான நுழைவுப் பாதையினை வழங்கினாலும், யோகாவின் அறிவியல் பரந்தது மற்றும் ஆழமானது. யோகாவின் மையப் போதனையானது சமநிலையான மனநிலையைப் பேணுவதாகும். எந்த ஒரு செயலையும் கவனத்துடன் செய்ய முடிவது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அல்லது செய்கிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுவது. உங்களை யோகியாக மாற்றுகிறது. யோகா ஒரு ஆன்மீக அறிவியல். ‘இது என்ன’ என்பதை அறிந்து கொள்வது அறிவியல். ‘நான் யார்’ என்பதை அறிவது ஆன்மீகம்.
யோகா என்பது வாழ்க்கையின் அனைத்துத் தாளங்களையும் சீரமைப்பதாகும். இது நமது உள் திறன்களைப் படித்து ஒத்திசைக்கும் ஒழுக்கம் ஆகும். இந்த ஆரோக்கியமான வாழ்க்கைத் திறன் ஒருவரின் வாழ்க்கை மற்றும் சுற்றுப்புறத்தின் தரத்தை உயர்த்தும். இது உள் வலிமை மற்றும் வெளிப்புற இணைப்புகளை மேம்படுத்துகிறது.
மகரிஷி பதஞ்சலியின் ஓர் அழகான சூத்திரம், "பிரயத்ன-ஷைதில்ய-அனந்த-சமாபத்திப்யம்" என்று கூறுகிறது. யோகத்தின் மூலம் முயற்சியை கைவிடும் கலையை கற்றுக்கொள்வதன் மூலம், எல்லையற்றதை முழுமையாக இணைந்திருக்கும் நிலையை ஒருவர் அனுபவிக்கிறார். யோகா ஒருவரின் ஆளுமையில் முழுமையான சமநிலையை கொண்டு வருகிறது.இன்றைய நடத்தை அறிவியல் தேடிவரும் தீர்வுகளை இது உள்ளடக்கியுள்ளது. யோகா என்பது மனித ஆற்றலை முழுமையாக மலரச் செய்வதற்கான வழியாகும். அத்துடன் முடிவில்லாததுடன் ஒன்றிணைக்கும் உயர்ந்த இலக்கை அடைவதற்கான பாதையுமாகும்.
பதஞ்சலி முனிவரால் முன்வைக்கப்பட்டுள்ள யோக சூத்திரங்கள் விரிவான விளக்கங்கள் மட்டும் அல்ல; உண்மையில் அவை யோகாவின் முழு தத்துவத்தையும் மிக சுருக்கமான சொற்றொடர்களில் விளக்கிக் காட்டுகின்றன. அவை ஒரு குருவின் வழிகாட்டுதலுடன் கண்டறிய பட வேண்டும். நடைமுறையில் ஆழ்ந்த மெய்யுணர்வு நிலைகளைக் கண்டறியும் போது அவை மைல்கற்களாகவும் வழிகாட்டிகளாகவும் செயல்படுகின்றன. இருப்பினும், அடிப் படையில் யோகா, மனித மனம் மற்றும் உடலுக்கு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மாற்றத்தை உறுதியளிக்கிறது. மக்கள் யோகாசனங்களை ஒரு உடற்பயிற்சியாக செய்ய ஆரம்பித்தாலும் கூட , அது ஓர் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும்.
பதஞ்சலியும் யோகத்தின் நோக்கம் துன்பம் வருமுன் தடுத்து நிறுத்துவதேயாகும் என்கிறார். பேராசை, கோபம், பொறாமை, வெறுப்பு அல்லது விரக்தி என எதிர்மறை உணர்ச்சிகள் அனைத்தையும் யோகா மூலம் குணப்படுத்தலாம் . நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நமக்குள் விரிவடையும் உணர்வைக் காண்கிறோம். நாம் தோல்வியை சந்திக்கும்போதோ அல்லது யாராவது நம்மை அவமதிக்கும் போதோ, நமக்குள் ஏதோ ஒன்று சுருங்கி விடுவதை உணர்கின்றோம். நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது விரிவடைவது போலவும், மகிழ்ச்சியற்று உணரும்போது சுருங்குவது போலவும் தோன்றும் ஏதோவொன்றின் மீது யோகா நம் கவனத்தை எடுத்து வருகிறது..
யோகா நமது நம்பிக்கை அமைப்புகளுடன் முரண்படுகிறதா? ஒரு குறிப்பிட்ட மதம், அல்லது ஒரு குறிப்பிட்ட தத்துவம், அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை நான் பின்பற்றினால், அது யோகாவுடன் முரண்படுமா என்று கேட்டால் நான் ‘இல்லை’ என்றே கூறுவேன். இது எப்போதும் பன்முகத்தன்மையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது 'யோகா' என்ற வார்த்தையே ஒன்றிணைவதைக் குறிக்கிறது.
இது நமது மூச்சு போன்றது. உங்கள் மூச்சு ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது தத்துவத்திற்கு சொந்தமானது என்று சொல்ல முடியுமா என்ன ? இன்று உலகளவில் கிட்டத்தட்ட 2 பில்லியன் மக்கள் யோகப் பயிற்சி செய்கின்றனர். சர்வதேச யோகா தினத்தில் பயிற்சி செய்யாத மற்ற அனைத்து மக்களும் யோகாவின் நேர்மறையான பலன்களை அனுபவிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். எந்த காரணத்திற்கென்றாலும் யோகா செய்பவர்கள் சாதகமான அறிகுறியாகத்தான் திகழ்கின்றனர். ஒருவர் எங்கு தொடங்குகிறார் என்பது முக்கியமல்ல. கருணையும் மகிழ்ச்சியும் நிறைந்த உலகை அடையும் இந்தக் கனவை யோகா நனவாக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT