Last Updated : 23 Oct, 2017 06:26 PM

 

Published : 23 Oct 2017 06:26 PM
Last Updated : 23 Oct 2017 06:26 PM

சஷ்டி ஸ்பெஷல்: எப்போதும் காப்பான் எட்டுக்குடி வேலவன்!

கந்த சஷ்டி வேளையில்... எட்டுக்குடி வேலவனை வழிபட்டால், நம்மை எப்போதும் காத்தருள்வான் கந்தவேலன் என சொல்லிச் சொல்லி, சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அருமையான, அற்புதமான முருக க்ஷேத்திரங்களில் எட்டுக்குடி தலமும் ஒன்று. சுமார் 800 வருடப் பழைமை வாய்ந்த தலம் எனப் போற்றுகின்றனர் முருக பக்தர்கள். வன்னி மரத்தை ஸ்தல விருட்சமாகவும் சரவணப் பொய்கையை ஸ்தல தீர்த்தமாகவும் கொண்ட புராதமான கோயில். நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

நாம் பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி ஸ்ரீசுப்ரமணிய சுவாமி. நாம் அவனைக் குழந்தையாக நினைத்துப் பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்துப் பார்த்தால் வயோதிகராகவும் காட்சி தந்தருள்வான் கந்தவேலன்.

கோயில் முன்பு உள்ள சரவணப்பொய்கைத் தீர்த்தத்தில் நம் கால் பட்டாலே போதும் பாவ விமோசனம் கிடைத்துவிடும் என்பது உறுதி. நம் கை தீர்த்தத்தில் பட்டாலே போதும். பாவமெல்லாம் நிவர்த்தியாகி விடும் என்பது ஐதீகம். ஸ்ரீசெளந்தரநாயகர், ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக, நம் அம்மையப்பனாக அருள்பாலிக்கின்றனர்.

பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இங்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது ஐதீகம். ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சௌந்தரியம் உடையவராகத் திகழ்கிறார். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கிச் சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்று சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.

நாகப்பட்டினம் அருகில் உள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். 'சரவணபவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதியபடியே வேலை செய்யும் வழக்கம் உண்டு அவனுக்கு!முருகக்கடவுளின் மீது அளப்பரிய பக்தி கொண்ட சிற்பி அவன்.

அழகிய ஆறுமுகங்களைக் கொண்ட வேலவன் சிலையைச் செய்தான் சிற்பி. அப்போது ஆட்சியில் இருந்த பராந்தக சோழ மன்னன், அந்தச் சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான். இதுபோல இன்னொரு சிலையை செய்துவிடக் கூடாது என்பதற்காக, அந்தச் சிற்பியின் கட்டைவிரலை வெட்டி விட்டான். சிற்பி, வருத்தத்துடன் அருகிலுள்ள கிராமத்திற்கு வந்தான்.

கைவிரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சியும் பயிற்சியும் எடுத்து மற்றொரு சிலையைச் செவ்வனே செய்தான். அதை அந்த ஊரை ஆட்சி செய்த குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான். அந்தச் சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகப் பெருமான் அமர்ந்திருந்த மயில் பறக்கவே ஆரம்பித்தது.

மன்னன் அந்த நேரத்தில் அங்கே வர... அதை 'எட்டிப்பிடி' என உத்தரவிட்டான். காவலர்கள் ஓடிச் சென்று மயிலைப் பிடித்தனர். அதன் கால்களைச் சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் எட்டிக்குடி என மாறி, தற்போது எட்டுக்குடி ஆனது. அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது என்கிறது ஸ்தல வரலாறு. .

இதே சிற்பி மற்றொரு சிலையையும் வடித்தான். அதை எண்கண் என்ற தலத்தில் வைத்தான். சிற்பி முதலில் வடித்த சிலை சிக்கலிலும், அடுத்த சிலை எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. இந்த மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

சித்ரா பௌர்ணமித் திருவிழா, எட்டுக்குடியில் பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும். பெளர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலபிஷேகம் துவங்கும். பவுர்ணமிக்கு மறுநாள் வரை தொடர்ந்து நடை அடைக்காமல் பாலபிஷேகம் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அப்போது தேரோட்டம் சிறப்புற நடைபெறும். .

ஐப்பசியில் கந்த சஷ்டி விழா, ஆறு நாட்களும், வைகாசி விசாகம் ஒரு நாளும் முக்கியமானதொரு விழாவாக நடத்தப்படும். உள்ளிருக்கும் அம்மையப்பனுக்கு மார்கழி திருவாதிரையில் விழா எடுக்கப்படும். இது தவிர மாத கார்த்திகைகளில் சிறப்பு பூஜை உண்டு.

சிறப்பு பூஜை: இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இந்த பூஜையை நடத்தினால் பலன் கிடைக்கும்!

தைப்பூசத் திருவிழாவும் அப்போது முருகப்பெருமானை தரிசிக்கவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவாகள். சுவாமிக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் வழிபடுவார்கள்!

குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடையைப் போக்கி, குழந்தை பாக்கியத்தையும் தந்து, கல்வியில் சிறந்து விளங்கச் செய்வான் எட்டுக்குடி வேலவன். சஷ்டி நாளில், முருகப் பெருமானுக்கு உரிய செவ்வாய், வெள்ளியில், எட்டுக்குடி வேலனை மனதார வணங்குங்கள். நம்மை எப்போதும் காத்தருள்வான் கந்தவேலன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x