Published : 18 Jun 2023 04:13 PM
Last Updated : 18 Jun 2023 04:13 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் தேரோட்டத்தில் 1985-ம் ஆண்டு முதல் தேரில் அமர்ந்து சாரதியாக அசத்தி வருகிறார் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் புலவர் செ.பாலகிருஷ்ணன்.
108 வைணவ திவ்யதேசங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 56-வது திவ்ய தேசமாக உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆடிப்பூரத் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடிப்பூரத் தேர் வானமாமலை ஜீயரால் வழங்கப்பட்டது. இத்தேர் 9 அடுக்குகள், 9 சக்கரங்கள், 9 வடங்களை கொண்ட மிகப் பெரிய தேராகும்.
தேரின் உச்சியில் மிகப் பெரிய கும்ப கலசம் வைக்கப்பட்டிருந்தது. அந்த காலத்தில் தேரோட்டம் தொடங்கி நிலைக்கு வர 3 மாதங்களுக்கு மேல் ஆகும். காலப்போக்கில் முறையாக பராமரிக்கப் படாததால் தேர் 18 ஆண்டுகளாக ஓடாமல் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஆடிப்பூரத் திருவிழாவின்போது செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.
அதன் பின்பு தேர் சீரமைக்கப்பட்டு 1974-ம் ஆண்டு தேரோட்டம் மீண்டும் தொடங்கியது. ஓரிரு ஆண்டுகளில் நடந்த தேரோட்டத்தின் போது உச்சியிலிருந்த கும்பக் கலசம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தேரின் 9 நிலைகளில் 2 நிலைகள் அகற்றப் பட்டன. தேரின் பீடத்துடன் கும்பக் கலசம் வைக்கும் சட்டம் இணைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 1985-ம் ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்டம் தொடங்கியது. அப்போது தெற்கு ரத வீதியில் நின்ற தேர் அதன் பின்பு நகரவில்லை. பலர் சேர்ந்து வடம்பிடித்து இழுத்தும் 20 நாட்களாக தேரை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு பல ஆயிரம் பக்தர்கள் திரண்டு வந்து தேரை இழுக்க தயாராகினர்.
அப்போது கோயில் நிர்வாகிகள், ஊர் பெரியவர்களின் ஆலோசனையின்படி ஆன்மிக சொற்பொழிவாளரும், தமிழாசிரியருமான புலவர் செ.பாலகிருஷ்ணன் ஆடிப்பூரத் தேருக்கு சாரதியாக இருந்து ஆண்டாள் பெருமை பற்றி வர்ணனை செய்தபடியே பக்தர்களை உற்சாகப் படுத்தினார். இதை யடுத்து 20 நாட்களாக நகராமல் இருந்த தேர் நகர்ந்தது. அதிலிருந்து தற்போது வரை ஆடிப்பூரத் தேருக்கு சாரதியாக இருந்து வருகிறார் புலவர் செ.பாலகிருஷ்ணன்.
இது குறித்து அவர் கூறியதாவது: 1965-ம் ஆண்டு டி.கல்லுப்பட்டி அரசு பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி யபோது முதன்முதலாக ‘நாடகத் தமிழ்’ என்ற தலைப்பில் மேடையேறி பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து கம்பன் கழகம் மற்றும் வள்ளலார் சன்மார்க்க சங்கம் தொடங்கி பல இலக்கியக் கூட்டங்களை நடத்தினேன். சன்மார்க்க சங்கத்துக்கு 1974-ல் கிருபானந்த வாரியார் வந்து பேசியுள்ளார். அதன் பின்பு தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவாற்றி வருகிறேன்.
வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பின்பு 1985-ம் ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தபோது, தெற்கு ரத வீதியில் தேர் நின்று விட்டது. 20 நாட்களாக தேரை இழுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன. அதன் பின்பு பெரியோர்களின் ஆலோசனைப்படி நான் சாரதியாக தேரில் ஏறினேன். ஆண் டாளின் திருவடிகளே சரணம் என்று கூறி எனது பேச்சை தொடங்கினேன்.
பல ஆயிரம் மக்கள் ஆரவாரத்தோடு தேரை இழுக்க, ஆண்டாளின் பெருமைகளைக் கூறி அவர்களை உற்சாகப்படுத்தினேன். சிறிது நேரத்தில் தேர் நகரத் தொடங்கியது. பக்தர்கள் உற்சாகத்துடன் தேரை இழுத்தனர். நான்கே நாட்களில் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. அன்றைய காலத்தில் 4 நாட்களில் தேர் நிலைக்கு வருவது என்பது விரைவாக வந்ததாகவே அர்த்தம்.
அப்போது தேரை திருப்புவதற்கு கூட டி.வி.எஸ். நிறுவனத்தில் இருந்து பொறியாளர்கள் வந்து, ஜாக்கி உதவியுடன்தான் தேரை திருப்புவர். பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தேரின் சாரதியாக இருந்து வருகிறேன். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டத்திலும் 2 ஆண்டுகள் சாரதியாக இருந்துள்ளேன்.
ஆடிப்பூரத் தேரின் சேதமடைந்த மரச் சக்கரம் அகற்றப்பட்டு இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட பின்பு ஒரே நாளில் தேர் நிலையை வந்தடையத் தொடங்கியது. தற் போது சில மணி நேரங்களிலேயே தேர் நிலையை வந்தடைகிறது. முதன்முதலில் தேரில் சாரதியாக ஏறியபோது, விபூதி பூசி, ருத்ராட்சம் அணிந்த சிவபக்தர் எப்படி வைணவக் கோயிலின் தேருக்கு சாரதியாக இருக்கலாம் என சிலர் கேள்வி எழுப்பியது உண்டு.
சிலர் தேரில் ஏறும்போது நாமம் இட்டு கொள்ளுங்கள் எனவும் கூறியது உண்டு. ஆண்டாளின் அருளால் இன்றும் திருநீறு அணிந்து கொண்டு 37 ஆண்டுகளாக ஆடிப்பூரத் தேரில் சாரதியாக இருந்து கொண்டு ஆண்டாளின் பெருமைகளை கூறி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT