Published : 12 Jun 2023 04:13 AM
Last Updated : 12 Jun 2023 04:13 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்க தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தூய பனிமய மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும் பணி இன்று (ஜூன 12) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பேராலயத்தில் போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி தலைமையில் நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ஆண்டு பெருவிழா 11 நாட்கள் நடைபெறும். நிறைவு நாளான ஆகஸ்ட் 5-ம் தேதி நகர வீதிகளில் தூய பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.
முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி பேராலய வரலாற்றில் இதுவரை 15 முறை தங்கத் தேர் பவனி நடைபெற்றுள்ளது. முதல் முறையாக 02.02.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடைபெற்றது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடைபெற்றது.
இந்த ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத்தேர் பவனி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தங்கத் தேர் வடிவமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தங்கத் தேர் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் வீற்றிருக்கும் பனிமய மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும் பணி நடைபெறுகிறது.
மக்கள் தரிசனம்: இதற்காக பனிமய மாதா சொரூபம் சிறப்பு திருப்பலி, வழிபாடுகளுக்கு பிறகு பீடத்தில் இருந்து நேற்று முன்தினம் இறக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் வழிபாட்டுக்காக அன்னையின் சொரூபம் பேராலயத்தில் திருப்பலி பீடத்தில் 2 நாட்கள் வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் அன்னையை தரிசித்தனர்.
இதன் தொடர்ச்சியாக பேராலயத்தில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமையேற்று திருப்பலி நிறைவேற்றினார். திருப்பலியில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, பேராலய பங்குத் தந்தை குமார் ராஜா உள்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர். நேற்று இரவு வரை அன்னையின் சொரூபம் பேராலயத்தில் மக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது.
தங்க முலாம்: இன்று (ஜூன் 12) அன்னையின் சொரூபம் தங்க முலாம் பூசுவதற்காக தஸ்நேவிஸ் மாதா பெண்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கன்னியர் மடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து தங்க முலாம் பூசும் பணி 10 முதல் 15 நாட்கள் நடைபெறும். இந்த பணிகள் முடிந்ததும் மீண்டும் பேராலயத்தில் அன்னையின் திருச்சொருபம் வைக்கப்படும் என, பேராலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT