Published : 26 Oct 2017 12:18 PM
Last Updated : 26 Oct 2017 12:18 PM
ஊரில் இருக்கும் அம்மாவைப் பார்க்கபோனால் கிடைக்கிற அதே அன்பும் கருணையும் காளிகாம்பாள் கோயிலுக்குப் போய்விட்டு வந்தால் கிடைக்கிறது என்பது பக்தர்களின் மெய்சிலிர்க்கும் வாசகம்.
சென்னை பாரிமுனையிலுள்ள தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில்.
தமிழகம் முழுவதும் இருந்து வியாபார நிமித்தமாக வந்து செல்கிற நெருக்கடியான அந்தப் பகுதியில் இருந்தபடிதான் மொத்த அகிலத்தையும் காபந்து செய்துகொண்டிருக்கிறார் காளிகாம்பாள்.
கி.பி.1640ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில்தான், காளிகாம்பாள் கோயில் இருந்தது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்களும் சுற்றுவட்டார மக்களும் மீனவப் பெருமக்களும் ஜார்ஜ்கோட்டை வளாகத்தில் உள்ள காளிகாம்பாளை வணங்கி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஒருகட்டத்தில், கோயிலுக்கு வருவோர் அதிகரிக்கத் துவங்கினார்கள். வெள்ளைக்கார துரைமார்களுக்கும் இது சங்கடமாக இருந்தது. என்ன செய்வதென்று தவித்து மருகினார்கள், ஆங்கிலேய அதிகாரிகள்.
அப்போது முத்துமாரி ஆச்சாரி என்பவர், வெள்ளைக்கார துரைமார்களிடம் பேசினார். ‘’அம்பாளை வேற இடத்துக்குக் கொண்டுபோய், கோயில் கட்டிக் குடிவைக்கிறோம்” என்றார். ஆங்கிலேயர்கள் சம்மதித்தனர். அதன்படி இப்போது உள்ள தம்புச்செட்டித் தெருவுக்குக் கொண்டு வந்து, அந்த விக்கிரகத் திருமேனியை உரிய முறையில் பிரதிஷ்டை செய்து, அழகுறக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினார்கள். இதையடுத்து அம்பாளின் சக்தியும் சாந்நித்தியமும் இன்னும் இன்னும் மக்களுக்குத் தெரிய வர... தன் அருளாட்சியை செம்மையாய் நடத்திக் கொண்டிருக்கிறாள் காளிகாம்பாள்.
புராணத்தில், பரதபுரி,சொர்ணபுரி என்றெல்லாம் இந்தப் பகுதி வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், அந்தக் காலத்தில், மீனவர்களும் மற்ற பக்தர்களும் செந்தூரம் சாற்றி வழிபட்டனர். இதனால் நெய்தல் நில காமாட்சி என்று காளிகாம்பாளுக்கு பெயர் அமைந்ததாகச் சொல்வர்,
உலகின் எல்லா நாயகியருக்கும் தலைவியாய்த் திகழ்பவள், காஞ்சி காமாட்சி என்கிறது புராணம். அந்தக் காமாட்சி அன்னையே காளிகாம்பாளின் 12 அம்சங்களில் ஒன்றாகத் திகழ்கிறாள் என்கிறார் ஆச்சார்யப் பெருமக்கள்.
பொதுவாக, காளி என்றால் உக்கிரத்துடன், பயங்கரமான ஆயுதங்களுடன் காட்சித் தருவதைத்தான் தரிசித்திருப்போம். ஆனால் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள், கருணையே உருவானவள். கனிவுக் கண்களும் புன்னகையுமாக நம்மைப் பார்ப்பவள். சாந்த சொரூபினி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
சிறிய ஆலயம்தான். ஆனால் அன்னை காளிகாம்பாளின் ஆட்சி அளப்பரியது. மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீ காளிகாம்பாள். அவளின் திருப்பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது.
திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்பவ மலரும் கொண்டு திருக்காட்சி தருகிறாள் காளிகாம்பாள். இடது கை வரதமுத்திரையுடன் காணப்படுகிறது. வலது கால் தாமரையில் வைத்தபடி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
அம்பாளின் கருவறையைச் சுற்றி ஸ்ரீஅருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீவீரபஹாமங்கர் மற்றும் அவரது சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீசண்டிகேஸ்வரர், பிரம்மா, சூரிய சந்திரர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீஸித்தி விநாயகர், கொடி மரம், வள்ளி, தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ வட கதிர்காம முருகன், ஸ்ரீஸித்திபுத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமகாமேரு,ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீநாகேந்திரர், ஸ்ரீவிஸ்வபிரம்மா சந்நிதிகள் அமைந்துள்ளன.
குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்கிறது புராணம். மேலும், வீர சிவாஜி 1677-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட்ட பின்னரே சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது வரலாறு. ஆகவே இந்தத் தலத்துக்கு வந்து காளிகாம்பாளை மனதாரப் பிரார்த்தனை செய்தால், பதவியும் உயர்வும் நிச்சயம். இழந்த பதவியையும் பெறலாம் என்று சொல்லிச் சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.
மகாகவி சுப்ரமணிய பாரதியார் "யாதுமாகி நின்றாய் காளி" என்று எழுதிய பாடல் காளிகாம்பாளைக் கொண்டு எழுத்தப்பட்டது என்பதைப் பலரும் அறிவார்கள்.
சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி, சித்ரா பெளர்ணமி, வைகாசியில் பிரம்மோற்ஸவம், ஆடியில் வசந்த உற்ஸவம், வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்ஸவம், ஆடிக்கிருத்திகை, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் கமடேஸ்வரர் மற்றும் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் என விழாக்கள் அமர்க்களப்படுகின்றன. ,
கந்த சஷ்டி, திருக்கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழியில் மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா தரிசனம், அம்பாளின் தீர்த்தவாரி, தை மாதத்தில் புஷ்பாஞ்சலி, வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், மகுடாபிஷேகம் என உத்ஸவங்களும் சிறப்பு ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீகாளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து அந்த மஞ்சளைப் பயன்படுத்தி வந்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்!
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், தீய சக்திகள் நம்மை அண்டாது. எதிர்ப்புகள் விலகிவிடும் என்கிறார்கள் பக்தர்கள்.
மேலும், மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. காரியம் யாவிலும் ஜெயம் உண்டாகும்.
காளிகாம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். குங்குமத்தைப் போலவே நம் வாழ்வையும் மங்கலகரமாக மாற்றியருள்வாள் தேவி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT