Published : 28 Sep 2017 11:52 AM
Last Updated : 28 Sep 2017 11:52 AM
மு
கநூலில் இருப்பவர்கள், ரூமி எனும் பெயரை அறியாமலோ ஆன்மிகம் ததும்பும் அவரது கவிதைகளைப் பார்க்காமலோ அது வெளிப்படுத்தும் எல்லையற்ற அன்பில் கரையாமலோ இருக்க வாய்ப்பே இல்லை. சுமார் 800 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இந்த மனிதரால், எப்படி இவ்வளவு பெரிய தாக்கத்தை இன்னும் தம்மை வாசிப்பவர்மீது ஏற்படுத்த முடிகிறது? நம்ம ஊர் எ.ஆர். ரஹ்மான் முதல் புகழ்பெற்ற மேற்கத்திய இசைக்குழுவான அமெரிக்கன் ப்ளூஸ் (American Blues) வரை எல்லா இசையமைப்பாளர்களும் ஏன் இவரைக் கொண்டாடுகிறார்கள்? “காதலைவிட முக்கியமானது உலகில் எதுவுமில்லை, காதல் காற்றைப் போன்றது” என்று சொன்னவர், ஒருவேளை நம்மைச் சூழ்ந்திருக்கும் காற்றில், தான் வெளிப்படுத்திய அளவற்ற காதல் மூலம் இன்னும் நிறைந்திருக்கிறாரோ?
ரூமி 1207-ம் வருடம் பால்க் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஆப்கானிஸ்தானில் பிறந்தார். மங்கோலியர்களின் படையெடுப்பால் நேர்ந்த ஆபத்தால், அவரது சிறு வயதிலேயே அவரது குடும்பம் அங்கிருந்து வெளியேறி கொன்யா எனும் தற்போதைய துருக்கியில் குடியேறியது. ரூமியுடைய தந்தை பஹூதீன் பெரிய ஆன்மிக போதகர். அவர் கொன்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் வேலைசெய்துவந்தார்.
நோன்பும் தவமும்
ரூமி தன் ஆரம்பகால ஆன்மிகப் பாடத்தைத் தன் தந்தையிடம் பயின்றார். தந்தையின் மறைவுக்குப் பின், தந்தையின் நெருங்கிய நண்பர் சயீத் பர்ஹானுத்தீனிடம் பயின்றார். சயீத், ரூமிக்கு ஆன்மிகப் பயிற்சி அளிக்க வந்ததற்கு ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு. சயீத், பாலக்கில் (ஆப்கானிஸ்தான்) இருந்தபோது, கொன்யாவில் வசித்த தன் நண்பரின் மரணத்தை, ஞானத்தால் உணர்ந்தவுடன், உடனடியாக கொன்யாவுக்குச் சென்று ரூமிக்கு ஆன்மிகம் போதிப்பது தன் கடமை என்று தெளிவாக உணர்ந்தார். ரூமிக்கு 24 வயதானபோது, சயீத் கொன்யா வந்தார். சுமார் 9 வருடங்கள், நபிகள் மற்றும் அரசுகள் பின்னுள்ள அறிவியலைத் தீவிரமாகப் போதித்தார். போதிப்பதற்கு முன் அவர் ரூமியை 40 நாட்கள் தனிமையில் இருக்கவைத்து, அதைத் தொடர்ந்து கடுமையான நோன்புகளும் தவமும் கடைப்பிடிக்க வைத்தார். இடையில் 4 வருடங்கள் ரூமி அலெப்போ மற்றும் டமாஸ்கஸிலும் தங்கி அன்றைய காலகட்டத்தின் மிகப் பெரிய ஆன்மிக உள்ளங்களுடன் தங்கியிருந்து ஆன்மிகம் பயின்றார்.
ஆன்மிகத்திலும் ஞானத்திலும் ரூமி தேர்ந்துவிட்டார் என்பதை உணர்ந்தவுடன், சயீத் ருமியிடம், “நீ தயாராகிவிட்டாய், மகனே. உனக்குச் சமமாக இனி யாரும் இல்லை. இப்போது நீ ஞானத்தின் சிங்கமாகிவிட்டாய். இரு சிங்கங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் எந்தப் பயனுமில்லை. நான் விடைபெற வேண்டிய தருணம் இது. நான் போனபின் சில நாட்களில் உன்னைத் தேடி ஒரு நண்பன் வருவான். அதன் பின் உன் வாழ்வே மாறிப்போகும்” என்று சொல்லி விடைபெற்றார்.
சயீத் சொன்னபடியே, ரூமி தன் 37-ம் வயதில், சாம்ஸ் என்ற பெயர் கொண்ட வழிப்போக்கனைச் சந்தித்தார். இவரைச் சந்திக்கும்வரை, ரூமி ஒரு புகழ்பெற்ற ஆன்மிகப் போதகராகவும் தன்னுள் மறைபொருளை அடைந்தவராகவும் மட்டுமே இருந்தார். இந்தச் சந்திப்புக்குப் பின் ரூமி, மனித குலத்தின் மீது மாபெரும் காதல் கொண்டவராகவும், ஊக்குவிக்கும் கவிஞராகவும் மாறினார். சாம்ஸ் ஞானத்தில் எரிந்துகொண்டிருந்தார்; ரூமி அத்தீயைப் பற்றிக்கொண்டார். இருவரும் ஒருவருக்கொருவர் கண்ணாடியாக இருந்தபோதும், சிறிது காலம்தான் சேர்ந்திருந்தனர். இருமுறை சாம்ஸ் காணாமல் போனார். முதல்முறை காணாமல் போனபோது, ரூமி வேதனையில் துடித்ததைத் தாள முடியாமல், அவர் மகன் சுல்தான், சாம்ஸை டமாஸ்கஸ்ஸில் கண்டுபிடித்து மீண்டும் தன் தந்தையிடம் அழைத்து வந்தார். மீண்டும் மறைந்துபோவதைத் தடுப்பதற்காக, 65 வயதான சாம்ஸுக்கு, மிகக் குறைந்த வயதுடைய சொந்த மகளை, ரூமி திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்த சில நாட்களியே அவர் மகள் இறந்தும் போனார். அதன் பின் இரண்டாம் முறை சாம்ஸ் தொலைந்தே போனார், ரூமியின் மேல் அவர் செலுத்திய ஆதிக்கத்தால், அவர் பிள்ளைகளால் கொல்லப்பட்டதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. ரூமியின் மகன் சுல்தானால் கவுரவக்கொலை செய்யப்பட்டார் என்று மற்றொரு நம்பிக்கையும் உண்டு.
மீண்டும் நட்பு
ரூமி தன்னிசையாக, செய்யுள்கள் அல்லது கஜல் எனும் பாடல்களை இயற்ற ஆரம்பித்தார். அதன் தொகுப்பு இப்போது திவான் - இ - கபீர் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் ஹூசம்மதின் செலிபி என்பவருடன் ரூமி ஆழ்ந்த ஆன்மிக நட்பு கொண்டார். அவர்கள் கொன்யாவுக்கு வெளியே உள்ள மீரம் முந்திரித் தோட்டங்களில் திரிந்துகொண்டிருந்தபோது, நீண்ட காவியம் போன்ற ஒன்றை ஏன் எழுதக் கூடாது என்று ஹூசம்மதின் செலிபி கேட்டார். ரூமி, தன் தலைப்பாகையை அவிழ்த்து, அதனுள் இருந்த துண்டுக் காகிதத்தை எடுத்தார். அதில் மத்னவி என்று இப்போது அழைக்கப்படும் பாடலின் ஆரம்ப 18 வரிகள் இருந்தன. அது இவ்வாறு ஆரம்பிக்கும்,
‘நாணலைக் கேளுங்கள், அது சொல்லும் கதையைக் கேளுங்கள்,
எப்படி அது பிரிவைப் பற்றிப் பாடுகிறதென்று ....’
ஹூசம்மதின் ஆனந்ததில் அழ ஆரம்பித்தார். ரூமியை மேலும் எழுதச்சொல்லி வேண்டினார். ரூமி அதற்கு “செலிபி, நீ எழுதுவதற்குச் சம்மதிப்பாய் எனறால், நான் மேலும் ஓதுகிறேன்” என்று சொன்னார். இந்த மிக முக்கியமான மஸ்னவியை, ரூமி தன் ஐம்பது வயதுகளில் சொல்ல ஆரம்பித்தார். இரவு, பகல் என்று பாராமல், இடம், ஏவல் பாராமல், மனதில் எப்போதெல்லாம் உதிக்கிறதோ அப்போதெல்லாம் அவர் உடனுக்குடன் சொல்லிக்கொண்டு இருந்தார். செலிபியும், அவர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினாலும், அதை விடாமல் முறையாக ஆவணப்படுத்திக்கொண்டே வந்தார்.
இந்த மஸ்னவி, இதுவரை பூமியில் எழுதப்பட்ட ஆன்மிகப் புத்தகங்களில் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. இதில் வாழ்க்கையின் முழுவீச்சையும் காணலாம். மதம், கலாச்சாரம், அரசியல், காமம், குடும்பம் என்று மனிதனின் அத்தனை நடவடிக்கைகளும் பாடுபொருளாகியுள்ளன. கீழ்மையிலிருந்து மேன்மை வரை, உயர்வு தாழ்வு என்ற நிலைக்கு அப்பாலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது.
சாதாரணப் பொருள் சார்ந்த, கடமை சார்ந்த, ஆசை சார்ந்த வாழ்க்கையிலிருந்து விழுமிய நிலையிலிருக்கும் பிரபஞ்சத்துடன் இணைவதைப் பற்றி இது சொல்கிறது.
ஏனென்றால், காற்றைச் சுவாசிப்பதால்
நீங்கள் உயிருடன் இருப்பதாக நினைக்கிறீர்களா?
இவ்வளவு குறுகிய முறையில் வாழும்
நீங்கள் ஒரு அவமானம்.
காதலில்லாமல் இருக்காதீர்கள்,
காதல் கொண்டிருந்தால், மரணத்தை
ஒருபொழுதும் உணர மாட்டீர்கள் .
காதலில் இறந்து போய்விடுங்கள்,
பின் எப்பொழுதும் உயிருடன் இருங்கள்.
அவருடைய இந்தப் பாடலின் உண்மைக்கு உதாரணமாக அவரே இருக்கிறார். இதை வாசிக்கும் நாமும்கூட அதற்குச் சான்றுதான்.
(சமுத்திரம் பொங்கும்)
கட்டுரையாளர்,தொடர்புக்கு: mhushain@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT