Published : 24 Oct 2017 04:44 PM
Last Updated : 24 Oct 2017 04:44 PM
திருச்செந்தூர் கோயிலில், விபூதிப் பிரசாதம் பிரசித்தம். இதிலென்ன ஆச்சரியம். எல்லா சிவாலயங்களிலும் முருகன் கோயில்களிலும் விபூதிதானே பிரசாதமாகத் தருவார்கள். அப்படியிருக்க, இங்கே, திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள விபூதிப் பிரசாதம், தனித்துவம் வாய்ந்ததாகுமா என்று கேள்வி வரலாம்.
ஆம்... தனித்துவமும் மகிமையும் மிக்கதுதான் இந்தக் கோயிலின் விபூதிப் பிரசாதம். சொல்லப்போனால்... இதை இலை விபூதிப் பிரசாதம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
திருச்செந்தூர் திருத்தலத்தில்... ஆறுமுகப் பெருமானின் ஆறு முகங்களுக்கும் நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை ரொம்பவே சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர், மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அந்த அர்ச்சனையைக் கேட்பதும் முருகப் பெருமானைத் தரிசிப்பதும் சிலிர்க்கச் செய்துவிடும்.
அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும். ஆறுமுகனுக்கு எல்லாமே ஆறு தான். முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம்,
அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது இன்னொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்கின்றனர் ஆச்சார்யர்கள்.
ஆவணி, மாசி விழாக்களில் ஏழாம் நாள் மட்டுமே திருவுலா வருவார் சண்முகர். மற்றபடி, ஜெயந்தி நாதரே உலா வருகிறார். அசுரனை வதம் செய்ததால், திருத்தணி மற்றும் பழநி தலங்களில் உள்ளது போல் க்ஷத்திரிய வடிவில் முருகன் இங்கு காட்சி தருகிறார். எனவே, மேற்குறிப்பிட்ட தலங்களில் தோஷ பரிகாரமாக நடைபெறும் 'சேவல் விடும்' நேர்த்திக் கடன் வைபவம் இங்கும் நடைபெறுகிறது.
இந்தத் தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் முப்பத்து முக்கோடி தேவர்களும் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம்.
முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்குவதற்காக திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது என விவரிக்கிறது ஸ்தல புராணம். சூரபதுமன் வதம் முடிந்த பின், முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்கிறது ஸ்தல புராணம்!
இங்கே... ஜெயந்தி புரம் என்றும் திருச்செந்தூர் என்றும் சொல்லப்படும் புண்ணியத் தலத்தில், தினமும் காலையில் பக்தர்களுக்கு பன்னீர் இலையில் விபூதி வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்டவர்கள், கல்யாணக் கவலையில் வாடுபவர்கள், கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லையே என்று கலங்குபவர்கள்... இந்த உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் செந்திலாண்டவரை மனதார வேண்டிக் கொண்டு, உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக இலைவிபூதிப் பிரசாதத்தைப் பெற்று, தினமும் இட்டுக் கொள்கின்றனர். அத்தனை சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தது இலை விபூதிப் பிரசாதம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT